தமிழ் සිංහල English
Breaking News

தமிழுக்காய் வாழ்ந்தவா்கள் மடிந்ததில்லை..!

“தமிழுக்காய் வாழ்ந்தவா்கள் மடிந்ததில்லை. தமிழ்கூறும் உலகெங்கும் அவர்கள் புகழ் நிலைத்திருக்கும்.  தாம் எடுத்திட்ட அரசியல் செயற்பாடுகள் சிலவற்றால் கலைஞர் கருணாநிதி பல விமா்சனங்களுக்கு உள்ளானபோதும் தமிழுக்காய் அவர் ஆற்றிய அளப்பாிய சேவைக்காக என்றென்றும் தமிழா்கள் மனங்களில் வாழ்வார்”

தமிழ் இலக்கியத் துறையில் தனக்கேன தனியான இடத்தினையும் தமிழ் மக்கள் மத்தியில் நன்மதிப்பினையும் பெற்றவரும் தமிழ் மக்களினால் மதிப்புடனும் அன்புடனும் கலைஞர் என அழைக்கப்பட்ட மு.கருணாநிதி தனது 95ஆவது வயதில் சென்னை காவேரி மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.

கலைஞர் கருணாநிதியின் இறப்பு என்பது வயது மூர்ப்பினால் ஏற்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு அவரது தொண்டர்கள் தயாராக இல்லை. உண்மையில் கலைஞரின் இழப்பானது தமிழ் இலக்கியத் துறைக்கு மட்டுமல்ல தமிழக மற்றும் இந்திய அரசியலும் பாரிய இழப்பாகும்.

இந்தியாவில் மூத்த அரசியல் தலைவராக அறியப்படும் கலைஞர் கருணாநிதியின் அரசியல் பயணம் அவரது 14 வயதில் ஆரம்பமானது.

கலைஞரின் ஆரம்ப கால வாழ்க்கை அரசியல் மற்றும் கலைத்துறை சார்ந்த பங்களிப்புக்கள் தொடர்பாக விரிவாகப் பார்ப்போம்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்ற கிராமத்தில் 1924ஆம் ஆண்டு ஜுன் மாதம் 3ஆம் திகதி விவசாயக் குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் கருணாநிதி மகனாகப் பிறந்தார்.

கருணாநிதி, தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இந்த ஈடுபாடும் ஆர்வமும் தமிழ் சினிமாத்துறையின் தவிர்க்க முடியாத படைப்பாளியாக கருணாநிதியை மாற்றியது.

1947ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ராஜகுமாரி என்ற படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியதன் மூலம் கலைத்துறை பயணம் ஆரம்பமாகின்றது.

கலைஞர் கதை வசனம் எழுதி, எம்.ஜி.ஆர் நடித்த மந்திரி குமாரி என்ற படம் அன்றைய காலத்தில் பாரிய வெற்றிப்படமாகியது. இதனைத் தொடர்ந்து சிவாஜி கணேசன் நடிப்பில் 1952இல் வெளிவந்த பராசக்தி, கருணாநிதிக்கு மற்றுமொரு மைல் கல்லாக அமைந்தது. இப்படம் கலைஞரின் ஆழ்ந்த இலக்கிய ஆற்றலை உலகிற்கு எடுக்காட்டியது.

கலைஞர் கருணாநிதி சுமார் 45 திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 15 திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். தூக்குமேடை, உதயசூரியன், நச்சுக்கோப்பை உள்ளிட்ட 11 நாடங்களை எழுதி இயக்கியுள்ளார். கடைசியாக 2011ஆம் ஆண்டு பொன்னர் சங்கர் என்ற வரலாற்றினை அடிப்படையாகக் கொண்ட திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

கருணாநிதி பணியாற்றிய படங்களின் எண்ணிக்கை 69. கதை – வசனம் எழுதி எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் எண்ணிக்கை 9.

கலைஞர் கருணாநிதியின் குடும்ப வாழ்க்கை என்று பார்க்கும் போது அவருக்கு மூன்று மனைவியர். முதல் மனைவி பத்மாவதி அம்மாள். இவர் திருமணமாகி சிறிது காலத்தினுள் இறந்துவிடவே தயாளு அம்மாளை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் ராத்தியம்மாளை மூன்றாவது மனைவியாக கரம்பிடித்தார்.

கருணாநிதியின் மூன்று மனைவிகள் மூலம் அவருக்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர். முத்து, அழகிரி, ஸ்டதலின், தமிழரசு, செல்வி, கனிமொழி ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.

கலைஞர் வசித்த வீடு கோபாலபுரம் இல்லமாக அறியப்படுகின்றது. கலைஞர் இறை மறுப்புக் கொள்கையுடயவர். மதத்தை வைத்து அரசியல் செய்யாத மனிதர்.

கலைஞரின் அரசியல் பயணம் நீதிக்கட்சியுடன் ஆரம்பமாகியது. நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளராகத் திகழ்ந்த அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14ஆவது அகவையில், சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

அந்த வகையில் 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் கருணாநிதி இணைந்துகொண்டார். அரசியலில் களமிறங்குவதற்கு உதவிய முதல் பிரதான எதிர்ப்பு, 1953இல் இடம்பெற்ற கல்லக்குடி ஆர்ப்பாட்டமாகும். இதன்போது கருணாநிதி கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குடி போராட்டத்தையடுத்து ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அதீத அரசியல் தீவிரத்துடன் ஈடுபட்டார்.

தனது இளம் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான ‘அனைத்து மாணவர்களின் கழகம்’ என்ற அமைப்பாக உருபெற்றது.

இது திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் பிரிவாக இருந்தது. கருணாநிதி, மற்ற உறுப்பினர்களுடனான சமூகப் பணியில் மாணவர் சமூகத்தையும் ஈடுபடுத்தினார்.

1957இல் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்நாட்டில் இந்திய மத்திய அரசால் ஹிந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1957ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 13ஆம் திகதியை, ஹிந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பதென தீர்மானிக்கப்பட்டது. அப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை எதிர்த்து இவ்வாறு முழக்கமிட்டார். ”மொழிப்போராட்டம்.. எங்கள் பண்பாட்டை பாதுகாக்க, இது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை.. மேலும் ஹிந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு). ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு. தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு’ என்று அவர் கூறினார்.

1963ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் ஹிந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மத்திய அரசின் புரிந்துகொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு, தேசிய மொழிகள், சட்ட எதிர்ப்பு போராட்டம் நடத்துவதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

நவம்பர் 16ஆம் திகதி அண்ணாதுரையும், நவம்பர் 19ஆம் திகதி கருணாநிதியும் கைது செய்யப்பட்டு நவம்பர் 25ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை 1957ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட தீர்மானித்த கருணாநிதி, குளித்தலையில் போட்டியிட்டு வெற்றி பெற்று தனது 33ஆவது வயதில் சட்டமன்றத்திற்குத் தெரிவானார்.

1961ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருலாளராகவும், 1962ஆம் ஆண்டு சட்டமன்ற பிரதி எதிர்க்கட்சித் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

1967இல் நடைபெற்றத் தேர்தலின் தி.மு.க ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளவே கருணாநிதி பொதுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இதேவேளை 1969இல் அண்ணாத்துறையின் இறப்பினையடுத்து கருணாநிதி தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதன்மூலம் தமிழகத்தின் மூன்றாவது முதல்வர் என்ற பெருமையினை பெற்றுக்கொண்டார்.

1971இல் இருந்து 1976 வரை தமிழகத்தின் நான்காவது முதல்வராகவும், 1989இல் இருந்து 1991ஆம் ஆண்டு வரை 10ஆவது முதல்வராகவும் கலைஞர் கருணாநிதி பணியாற்றியுள்ளார்.

1991ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வேளையில் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றது என்று குற்றஞ்சாட்டி அதனை மத்திய அரசாங்கம் கலைத்தது.

இந்த நிலையில் 1996ஆம் ஆண்டு மீண்டும் முதல்வாரன கருணாநிதி, கடந்த 2001ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் 12வது முதல்வராக ஆட்சி புரிந்தார்.

இதனையடுத்து 2006இல் இருந்து 2011ஆம் ஆண்டு வரை 14ஆவது முதல்வராக பதவியேற்று ஆட்சி புரிந்துள்ளார்.

1957இல் இருந்து 2016 வரை 13 முறை தமிழக சட்டமன்றத்தின் உறுப்பினராக கலைஞர் பணியாற்றியுள்ளார். 5 தடவைகள் முதலமைச்சராக செயற்பட்ட பெருமை கலைஞரையே சாரும். கலைஞரின் காலத்தில் தமிழகத்தில் பல்வேறு பொருளாதார அபிவிருத்திகளை செய்துள்ளார்.

கருணாநிதியே முதலில் இலவச வர்ண தொலைக்காட்சியை வழங்கினார். ஒரு ரூபாவிற்கு அரிசி வழங்கியதும் கருணாநிதிதான். விவசாயம், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, கைத்தொழில் போன்ற துறைகளில் கலைஞரால் கொண்டுவந்த அபிவிருத்திகளினால் இன்றும் தமிழக மக்கள் நன்மை அடைந்து வருகின்றனர்.

கலைஞரின் இலக்கியப் பணி என்று பார்க்கும் போது கவிதை, நாவல், கட்டுரைகள், உரைநடைகள், கடிதங்கள், வரலாற்றுப்புனைவுகள், புதினங்கள், சிறுகதைகள், உரைநூல்கள், இலக்கிய மறுபடைப்புகள் என பலவுண்டு. இதில் குறளோவியம் தமிழ் மக்களிடத்தில் மதிப்புப் பெற்ற படைப்பு.

மேலும் தன் வரலாற்றினை ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். சொற்பொழிவுகள், பயணக்கட்டுரைகள் என்பனவும் கலைஞரின் படைப்புக்களாகும்.

கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொடர், கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘ஸ்ரீ ராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான்’. அந்தத் தொடருக்கு அவர் கதையெழுத ஆரம்பித்தபோது அவரது வயது 92. அதனை எழுதிவந்தபோதே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.

‘இனியவை 20’ என்ற பெயரில் பயண நூல் ஒன்றையும் கருணாநிதி எழுதியிருக்கின்றார். கருணாநிதி பத்து சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களையும் எழுதியிருக்கின்றார். 21 நாடகங்களையும் கருணாநிதி எழுதியுள்ளார்.

அரசியலிலும் தமிழிலும் தனக்கே உரிய பாணியில் பயணித்த கலைஞர், தமிழ்த் தாய் பெற்றெடுத்த தவப்புதல்வனாக தமிழ் மக்களினால் பார்க்கப்படுகின்றார்.

கலைஞரின் இலக்கிய மற்றும் தமிழ் ஆர்வத்திற்கு தக்க சான்றாக, கடந்த 2010ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் நடைபெற்ற செம்மொழி மாநாடு விளங்குகின்றது.

கருணாநிதியின் கலை அறிவினையும் ஞானத்தையும் கண்டுகொண்ட எம்.ஆர் ராதா, அவருக்கு கலைஞர் எனப் பெயர் சூட்டினார். ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆர், கலைஞரை ‘ஆண்டவர்’ என்று அழைத்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ராஜாஜியில் தொடங்கி, டி.பிரகாசம், ஓ.பி.ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என்.அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் என 11 முதல்வர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியல் செய்திருக்கிறார் கருணாநிதி.

சக்திமிக்க பிரதமர்களாக விளங்கிய பிரதமர்களான இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி உட்பட பல தலைவர்கள் மத்தியில் தனது அரசியலைக் கொண்டு சென்றவர் கலைஞர் கருணாநிதி ஆவார்.

காலை 4.30 மணிக்கெல்லாம் எழுந்து நாட்டு நடப்புக்களை பத்திரிகை ஊடாகப் படித்துத் தெரிந்து கொண்டு தனது அரசியல் மற்றும் இலக்கியப் பணிகளைத் தொடங்கிய கலைஞர் கருணாநிதியின் இழப்பு, தமிழ் அரசியலுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

கலைஞர் கருணாநிதியின் ஆற்றலையும், இலக்கிய அறிவையும் பாராட்டும் வகையில் பல விருதுகளும் பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. 1971ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினால் கருணாநிதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பாவேந்தர், இராஜராஜன் போன்ற பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.

கலைஞர் கருணாநிதி அரசியலின் ஞானி… இலக்கியத்தின் பிதாமகன்… அவர் உலகை விட்டுப் போனாலும் அவரால் விட்டுச் சென்ற படைப்புகள் தமிழ் கூறும் நல்லுலகில் காலத்தால் அழியாத பொக்கிஷமாய் நன்மை பயக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com