தமிழ் සිංහල English
Breaking News

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு இல்லாமல் எந்த அரசியல் தலைமையும் ஜனாதிபதியாக முடியாது..!

‘முஸ்லிம் சமூகத்தின் உறுப்பினர் களின் எண்ணிக்கையை புதிய தேர்தல் முறையின் மூலம் பலி கொடுக்க நாங்கள் தயாரில்லை.

காலத்தை வீணடித்து மாகாண சபைத் தேர்தலை பிற்போடுகின்ற இந்த நிலவரத்தை இனி ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது.’

என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

புதிய தேர்தல் முறையினை எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் தோற்கடிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 28வது பேராளர் மாநாடு கண்டியில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மாகாண சபை சட்டத்திருத்தமானது ஆட்சியில் இருக்கின்ற இரண்டு பிரதான கட்சிகளும் இரவோடு இரவாக பாராளுமன்ற சட்ட விதிகளை மீறி எங்களுக்கு தெரியாமல் நிறைவேற்றப்பட்ட சட்டமூலமாகும். அந்த பிரேரணை எங்களுக்கு தெரியாமல் தயாரித்து அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போது நாங்கள் எங்களது பலமான எதிர்ப்பினை தெரிவித்தோம்.

அப்போது இந்த நாட்டின் தலைமை வெளிநாட்டிலிருந்து எம்மோடு கதைத்தது இதில் தேவையான மாற்றங்களை கொண்டுவருவதாக வாக்களித்தது. ஆனால் இன்று அவற்றை உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் தொடர்பில் பிரிக்கப்பட்டுள்ள தொகுதியானது முஸ்லிம்களையும், மலையக தமிழர்களையும் பாதிக்கின்ற வகையில்தான் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முஸ்லிம்களினதும், மலையக தமிழர்களினதும் மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு குறைவடையும் என்பதையும் மிகத்தெளிவாக நாங்கள் கூறியிருந்தும் இவற்றுக்கான தீர்க்கமான முடிவினை இந்த ஆட்சி எங்களுக்கு தர வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் ஒன்றிணைந்த பொது எதிர்கட்சியுடன் எதிர்வரும் வாரங்களில் பேச இருக்கின்றோம். அவர்களது ஆதரவினையும் பெற்று இந்த திட்டத்தினை தோல்வியடைய செய்யவிருக்கின்றோம். எங்களுக்கு வேறு மாற்று வழி கிடையாது.

எல்லை நிர்ணய மீள்பரிசீலனை குழுவில் சபாநாயகர் கடந்த வாரம் என்னையும் நியமித்துள்ளார். இது ஒரு கண்துடைப்புக்காகவும், என்னை சமாளிக்கவும் செய்யப்பட்டதாகும். இதற்கு நான் தயாராக இல்லை உடனடியாக அதிலிருந்து இராஜனாமா செய்ய நான் தயாராகிக்கொண்டு இருக்கின்றேன். புதிய முறையில் இந்த மாகாண சபை தேர்தல் நடத்தப்படுமாயின் சிதறிவாழுகின்ற முஸ்லிம்களும் மலையக தமிழர்களும் பாரியளவில் தமது பிரதிநிதிகளை மாகாண சபையில் இழக்க வேண்டியிருக்கும்.

சிறுபான்மை சமூகங்களின் பிரநிதித்துவத்தை குறைக்கின்ற இந்த தேர்தல் முறையினை அங்கீகரிக்க முடியாது இது தொடர்பில் த.தே.கூட்டமைப்பின் ஆதரவினை கோரியிருக்கின்றோம். அதற்கான சம்மதத்தை அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

புதிய அரசியல் கனவுகளை கண்டு கொண்டு இருக்கின்ற எந்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சரியான முடிவினை சரியான நேரத்தில் எடுக்கின்ற ஒரு கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு இல்லாமல் எந்த அரசியல் தலைமையும் ஜனாதிபதியாக முடியாது. எமது சமூத்தின் நலனில் அக்கறை செலுத்துகின்ற, நிரந்தரமான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கின்ற ஒரு தலைமைக்கு எமது ஆதரவினை வழங்குவது பற்றியே நாம் யோசிப்போம்.” என்றுள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com