தமிழ் සිංහල English
Breaking News

சமூகவாதமும் பிரதேசவாதமும் ஒன்றாகக் குடியிருக்க முடியாது;.!

வை எல் எஸ் ஹமீட்

மு காவின் பிரதான வாக்குத்தளம் கிழக்கு. ஆனாலும் மு கா கிழக்கிற்கு மட்டும் உரிய கட்சியல்ல. கிழக்கிற்கு வெளியிலும் இன்னும் கணிசமான வாக்குகள் கிடைக்கத்தான் செய்கின்றன.

மு கா கிழக்கில் சில சந்தர்ப்பங்களில் இணைந்தும் சில சந்தர்ப்பங்களில் தனித்தும் போட்டியிடுகின்றது. ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் கூட்டுச்சேர்கின்ற தேசியக்கட்சியிடமிருந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தேசியப்பட்டியல்களைப் பெறுகின்றது. ஆனால் மு கா வினால் தேசியக்கட்சிகள் பெறுகின்ற வாக்கு விகிதாசாரத்திற்கேற்ப வழங்குவதானால் ஒரு தேசியப்பட்டியல் ஆசனமே அதிகம்.

காரணம் ஒரு தேசியப்பட்டியலுக்கு மூன்று தொடக்கம் நாலு லட்சம் வரை வாக்குகள் தேவை. ஆயினும் தேசியக்கட்சிகள் அவ்வாறு மேலதிகமாக தேசியப்பட்டியல் வழங்குவதற்கு காரணம் போனஸ் முறையாகும். சிலநேரம் ஒரு மாவட்டத்தில் ஒரு வாக்கு இரண்டு ஆசனங்களைத் தீர்மானிக்கக் கூடியது; என்பது நமக்குத் தெரியும்.

இதனால்தான் கிழக்கிற்கு வெளியே மு கா விற்கு பலமான ஆதரவுத்தளம் இல்லாவிட்டாலும் மு கா வின் வாக்கு தேசியக்கட்சிகளுக்கு முக்கியமானது. அதனால்தான் மேலதிக தேசியப்பட்டியல் வழங்கப்படுகிறது. எனவே தேசிப்பட்டியலுக்கான உரிமை கிழக்கைவிட கிழக்கிற்கு வெளியேயுள்ளவர்களுக்கே அதிகம் இருக்கிறது. ஆனாலும் தேசியப்பட்டியலின் பெரும்பங்கு கிழக்கிற்கே வழங்கப்படுகின்றது.

கிழக்கிற்கு வழங்குவது வேறுவிடயம். ஆனால் மு கா வின் தேசிப்பட்டிலுக்கான உரிமை கிழக்கிற்கே இருப்பதாக எழுப்பப்படும் கோசமும் அதற்கு தீனிபோடும் எதிரணியினரும் இங்கு கவனிக்கத்தக்க விடயங்கள்.

மு கா வின் உயர்பீடப் பதவிகள்
—————————————-
மு கா ஒரு தனிமனிதன் தீர்மானம் எடுக்கும் கட்சி. அதில் எந்தப் பதவிக்கும் எதுவித பெறுமதியுமில்லை. அதேநேரம் அவ்வாறு பதவி பெறுகின்றவர்களும் அப்பதவியின் மூலம் கட்சிக்குப் பங்களிப்புச் செய்வதும் இல்லை. அவை வெறும் அலங்காரப் பதவிகள் மாத்திரமே. ஒரேயொரு பிரயோசனம் அப்பதவிமூலம் உயர்பீட அங்கத்தவராவது.

பதவி இல்லாமல் உயர்பீட அங்கத்தவராவதற்கும் பதவி மூலம் அங்கத்தவராவதற்கும் யதார்த்தத்தில் அங்கு வேறுபாடு எதுவும் இல்லை. ஒரு தனிநபர் கிழக்கை இழிவுபடுத்துகின்ற ஒரு பதிவை இட்டிருந்தார். அது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. ஆனால் அதற்காக அவர் வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது மட்டுமல்லாமல் அவர் தண்டனையும் பெற்றார். ஒரு பெரிய அரசநிறுவனத்தின் உப தலைவர் பதவியையே இழந்தார்.

மனிதன் தவறுசெய்யக் கூடியவன். அந்தத்தவறில் அவன் தொடர்ந்தும் இருப்பதுதான் பிழை. ஆனால் ஒரு தவறைச் செய்து அதற்காக வருந்தி தண்டனையை அனுபவித்தன்பின்னும் அதையே பேசிக்கொண்டிருப்பது மனித நாகரீகமுமல்ல. இஸ்லாமுமல்ல. அதற்காக குறித்த பதவி வழங்கப்பட்டதை நியாயப்படுத்த முற்படவில்லை. அது நியாயமில்லை; என்பதற்கு அவரது இயல்பான பொருத்தமற்றதன்மை பற்றிப் பேசுவது வேறு. ஆனால் என்றோ ஒருநாள் நடந்த ஒரு சம்பவத்தைத் தீட்டிக்கொண்டிருப்பது சரியில்லை.

இந்தக் கட்டுரையை எழுதுவதன் நோக்கம் இப்பதவி தொடர்பானதல்ல. இதைவைத்து பொதுத்தளங்களில் பேசப்படும் பிரதேச வாதம் ஆரோக்கியமானதல்ல. குறிப்பாக மு கா வை எப்பொழுதும் முகநூல்களில் விமர்சிக்கின்ற ஒரு பகுதியினருக்கு இது மிகவும் ருசியான அவலாக மாறியிருக்கிறது. ஆனால் நீங்கள் மூ காவை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு கிழக்கு மக்கள் தொடர்பாக கிழக்கிற்கு வெளியேயுள்ள மக்களின் மனங்களில் நஞ்சூட்டுகிறீர்கள்.

இதை தொடர்ந்து செய்துவருகிறீர்கள். தேசியப்பட்டியல் பிரச்சினை வந்தாலும் இதே துருப்பை அடிக்கிறீர்கள். கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பாவித்து இப்பிரதேசவாத நச்சு விதையை விதைக்காதீர்கள். அது நீண்டகால பாதிப்பைக் கொண்டது. எந்தப் பிரச்சினையை வேண்டுமானாலும் பேசுங்கள். பிரதேசவாத நஞ்சு அதைத்தொடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

கிழக்கு என்று பேசுபவர்கள் முதலில் சுயவிமர்சனம் செய்யுங்கள். ஒரு தனிநபரை எதிர்ப்பதற்காக கிழக்கு என்கிறீர்களா? அல்லது கிழக்கின்மீது கொண்ட பாசத்தினாலா? என்று.

கிழக்கு என்று வந்துவிட்டால் மாவட்டமாக பிரிகிறோம், மாவட்டமென்று வந்துவந்துவிட்டால் தொகுதியாகப் பிரிகிறோம், தொகுதி என்று வந்தால் ஊரூராக பிரிகிறோம். அடுத்த சகோதர ஊர் அழிந்தாலும் பறவாயில்லை; என்னூர் சிறக்க வேண்டும்; என்று பிரதேசவாதம் பேசுகின்றநாம் கிழக்கு மேற்கு என்று அரசியல் வஞ்சம் தீர்க்கப் பேசுகின்றோம்.

இந்த லட்சணத்தில அடிக்கடி சமூகவாதமும் பேசுகின்றோம். சமூகவாதமும் பிரதேசவாதமும் ஒன்றாகக் குடியிருக்க முடியாது; என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com