தமிழ் සිංහල English
Breaking News

முஸ்லிம்களின் அரசியல் தலைமை வெற்றிடமாகவே உள்ளது.!

எஸ்.றிபான் –
பலவீனமான தலைவர்களைக் கொண்டுள்ள ஒரு சமூகம் பலமான தலைவர்ளைக் கொண்டுள்ள சமூகத்தினாரால் ஒடுக்கப்படுவதனைத் தவிர்க்க முடியாது. அந்த சமூகத்தின் இருப்பு, பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமைகள் கேள்விகளுக்கு உட்படுத்தப்படும்.
இந்நிலையில்தான் இலங்கை முஸ்லிம்கள் உள்ளார்கள். முஸ்லிம்களிடையே பல துறை தலைவர்கள் இருந்தாலும் எல்லாத் தலைவர்களும் சமூகம் சார்ந்த சிந்தனைகளுக்கு அப்பால் சுயநலம், துணிச்சலற்ற தன்மை, கறைபடிந்த கைகள், ஒழுக்கக் குறைபாடு போன்ற பல காரணிகளினால் தலையாட்டும் பொம்மைத் தலைவர்களாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக முஸ்லிம்களின் அரசியல் தலைமை வெற்றிடமாகவே உள்ளது.
மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்பின் மரணத்திற்குப் பின்னர் முஸ்லிம்களுக்குரிய அரசியல் தலைமை ஏனும் பொறுப்பை பொருத்தமானவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. முஸ்லிம்களுக்கு பொருத்தமான நல்ல ஆளுமையுள்ள அரசியல் தலைமையின் இடைவெளி நீடித்துக் கொண்டிருப்பதனால்தான் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்பதற்காக அவர் முஸ்லிம்களின் அரசியல் தலைவராக அடையாளப்படுத்த முடியாது.
இன்று அரசியல் கட்சிகளின் தலைவர்களையே அரசாங்கமும், பேரினவாத சக்திகளும் முஸ்லிம்களின் அரசியல் தலைமையாக ஏற்றுக் கொண்டுள்ளன. இவர்களின் எல்லா வகையான பஞ்சத்திற்கும் பேரினவாதிகள் தீனி போட்டு வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகையவர்கள் அரசாங்கத்தினதும், பேரினவாதிகளினதும் திட்டங்களுக்கு சம்மதம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனால், இன்றுள்ள கட்சிகளின் அரசியல் தலைவர்களில் ஒருவரையாவது முஸ்லிம்களின் அரசியல் தலைவர் என்று விரல் நீட்ட முடியாதுள்ளது.
 
ஆளுமை மிக்க தலைமை
இலங்கையில் அரசியல் அதிகாரம் சகல துறைகளிலம் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கின்றது. ஆதலால், முஸ்லிம்களின் அரசியல் தலைவர் என்பவர் ஆளுமை மிக்கவராக இருக்க வேண்டும். இலங்கை முஸ்லிம்களுக்கு ஆளுமை மிக்க பல தலைவர்கள் இருந்துள்ளார்கள். அவர்களில் இறுதியாக மர்ஹும் அஸ்ரப்புக்குப் பின்னர் ஆளுமை கொண்ட தலைவர்கள் முஸ்லிம்களிடையே இல்லாதிருப்பதுதான் முஸ்லிம்கள் இன்று எதிர் கொண்டுள்ள பல பிரச்சினைகளுக்கு காரணமாகும்.
மர்ஹும் அஸ்ரப் முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவித்து அதன் ஊடாக முஸ்லிம்களின் குரலாக செயற்பட்டார். பௌத்த இனவாதிகளுக்கு அடங்காது முஸ்லிம்களின் நியாயங்களை நிறுவினார். முஸ்லிம்களின் அரசியலும், அபிலாசைகளும் தனித்துவமானதென்று அடையாயளப்படுத்துவதில் வெற்றி கண்டார். அவரிடம் காணப்பட்ட பலவீனங்கள் முஸ்லிம் சமூகத்தை பலவீனப்படுத்துவதற்கு துணை போகவில்லை.
ஆனால், அவரது மரணத்தின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் தலைமையாக இருந்தாலும், அக்கட்சியோடு பல காரணங்களுக்காக முரண்பட்டு புதிய கட்சிகளை தோற்றுவித்து தலைவர் பதவியில் இருந்து கொண்டிருக்கும் தலைவர்களாக இருந்தாலும் அவர்களின் பலவீனங்கள் முஸ்லிம் காங்கிரஸ் முதல் ஏனைய கட்சிகளைப் பலவீனப்படுத்தி இருப்பதோடு, முஸ்லிம் சமூகத்தையும் பலவீனப்படுத்தி தலை குனியச் செய்துள்ளமையை யாரும் மறுக்க முடியாது. குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கு ஏனைய கட்சிகளின் தலைவர்களை விடவும் சமூகம் சார்ந்த பொறுப்புக்கள் அதிகமுண்டு.
என்றாலும் தலைமையின் பலவீனங்களும், தலைமையின்  பலவீனங்களை ஏற்றுக் கொண்டிருக்கும் உயர்பீட உறுப்பினர்களின் பலவீனங்களும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை தட்டிக் கேட்பதற்கு முடியாத கையறு நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. அக்கட்சியின் உயர்பீட உறுப்பினர்களில் பலர் தலைமையின் பலவீனத்தை தி;ருத்தியமைத்து கட்சியையும், தலைமையும் பலப்படுத்துவதற்கு பதிலாக பலவீனங்களை நியாயப்படுத்தும் வாதங்களையே மேற்கொண்டுள்ளார்கள்.
இதனால், ஒட்டு மொத்தமாக இவர்கள் அனைவரினதும் ஆளுமை குறித்து சந்தேகங்களை எழுப்ப வேண்டியுள்ளது. வெறித்தனமான தலைமைத்துவ ஆலாபனை சமூகத்தை அழிவுக்கே இட்டுச் செல்லும் என்பதனை முஸ்லிம் கட்சியின்  உயர்பீட உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதே வேளை, இன்று முஸ்லிம் காங்கிரஸிற்கு போட்டியாக வளர்ந்து கொண்டிருக்கும் கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகழ்கின்றது. தற்போது இக்கட்சியின் செல்வாக்கு அம்பாரை மாவட்டம் வரைக்கும் வியாபித்துக் கொண்டிருக்கின்றது. ஆயினும், இக்கட்சியின் தலைமையை முஸ்லிம் சமூகத்திற்குரிய தலைவராக வளர்த்தெடுப்பதற்குரிய எந்தவொரு செயற்திட்டத்தையும் அக்கட்சி கொண்டிருக்கவில்லை. முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கின்றதொரு தலைவராகவும்;, கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கு உயர் பதவிகளைத் தருகின்றதொரு தலைவராகவுமே அக்கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அக்கட்சி தனியே தலைவர் எனும் பாத்திரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒன்றகாவே உள்ளது. இதே வேளை, முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு அதிகம் குரல் கொடுக்கக் கூடியவராகவும், பௌத்த இனவாதிகளின் கழுகுப் பார்வைக்குள் அகப்பட்டுள்ள ஒருவராகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினி; தலைவர் உள்ளமையும் குறிப்பி;டத்தக்கது. இக்கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களைப் போன்று தலைமைத்துவத்தின் குறைகளை நிபர்த்தி செய்வதற்கு பதிலாக தலைவரிடம் இருந்து எதனை கறந்து கொள்ளலாமென்று வட்டமிடுகின்றவர்களாகவே உள்ளார்கள். இதனால், இக்கட்சியாலும் முஸ்லிம் சமூகத்திற்கு தேவையான ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்கு முடியாதுள்ளது.
இதே வேளை, தேசிய காங்கிரஸின் தலைமையை நோக்கினால் அக்கட்சி கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் திசையை தேடும் கட்சியாகவே இருக்கின்றது. அம்பாரை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கட்சியின் செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டுமென்பதற்கு அளிக்கும் முக்கியத்துவம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு வழங்குவதில்லை. கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இக்கட்சி அக்கரைப்பற்றில் தமது செல்வாக்கை நிலை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்கட்சி தனியே தலைவரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. உயர்பீட உறுப்பினர்கள் இக்கட்சியில் ஒரு பொருட்டேயில்லை.
இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸிலிருந்து கடைசியாக பிரிந்து வந்துள்ள ஹஸன் அலி, பசீர் சேகு தாவூத் ஆகியோர்கள் செயலாளராகவும், தவிசாளராகவும் உள்ள ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு மர்ஹும் அஸ்ரப்பின் கனவுகளை நனவாக்குவதற்கு புறப்பட்டுள்ளதாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸ் மர்ஹும் அஸ்ரப்பின் கனவுகளை தொலைப்பதற்கு இவர்களும் காரணமென்பதனை சொல்லியாக வேண்டும். ஆதாலல், இவர்கள் கூட மர்ஹும் அஸ்ரப்பின் கனவுகளை நனவாக்குவதற்குரிய ஆளுமையை முஸ்லிம் காங்கிரஸிக்குள் இருந்த காலத்தில் உறுதி செய்யவில்லை. இவர்கள் ரவூப் ஹக்கீம் எனும் தனி மனிதனை காப்பாற்றுவதற்கே தமது முழு ஆளுமையையும் பயன்படுத்தினார்கள் என்பதனையும் சுட்டிக் காட்டியாக வேண்டும்.
 
கட்சிகளின் பலம்
அரசியல் கட்சிகளின் பலம் அக்கட்சி பாராளுமன்றத்தில் பெற்றுக் கொள்ளும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்தே முடிவு செய்யப்படுகின்றது. அந்த வகையில் முஸ்லிம் கட்சிகள் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்வதற்கு தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளன. முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள போதிலும் இக்கட்சிகள் பெற்றுக் கொடுத்த சமூக உரிமைகள் எவையென்று கேட்கின்றோம். உரிமைக் கோசத்தை தெருவில் செல்லும் சிறுபிள்ளை கூட எழுப்பலாம். அதில் பி;ரயோசனமில்லை. உரிமைக் கோசத்தை அடைந்து கொள்வதற்கே கட்சிகளும், தலைவர்களும் தேவைப்படுகின்றார்கள்.
பொதுத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளும் முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்தின் பங்காளிகள் என்று உருப் பெருப்பதற்கே முன்னுரிமை கொடுக்கின்றன. கட்சியின் தலைவருக்கு அமைச்சர் பதவியும், ஒன்று, இரண்டு பேருக்கு பிரதி அமைச்சர் பதவியும், இன்னும் சிலருக்கு திணைக்களத் தலைவர் பதவிகளுமே அரசாங்கத்தின் பங்காளிகளாவதற்கு பேரம் பேசப்படுகின்றன. ஆதலால், மக்களினால் வழங்கப்படும் அரசியல் பலம் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர்களும், உயர்பீட உறுப்பினர்களும் வாழ்வதற்குரிய ஆதாரங்களைத் தேடுவதற்கே பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலமாக முஸ்லிம் கட்சிகளின் சுயநலம் தெளிவாகின்றது. எப்போதும் ஆளுமை குறைந்தவர்கள் சுயநலவாதிகளாகவே இருப்பார்கள்.
மேலும், பங்காளி என்பதற்காக பெற்றுக் கொண்;ட பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக அரசாங்கத்தினால் கொண்டு வரப்படும் அனைத்து சட்ட மூலங்களையும் கண்களை மூடிக் கொண்டு ஆதரவளிக்கும் மனநிலையையும் இவர்கள் கொண்டுள்ளார்கள். முஸ்லிம்களின் அரசியலையும், உரிமைகளையும் தாரை வார்த்துக் கொடுக்கும் கூட்டங்கள் பல்வேறு பெயர்களைச் சூட்டிக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. சமூகத்திற்காக தலையைக் கொடுப்பதற்கும் தயாராக இருக்கின்றவர்களினாலேயே சமூகத்தின் ஆளுமை மிக்க தலைவராக செயற்பட முடியும்.
முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக தேர்தல் காலங்களில் உரிமைகளைப் பற்றி அதிகம் பேசிக் கொள்ளும் முஸ்லிம் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை கண்டிப்பார்கள். முஸ்லிம்களின் உரிமைகளை அரசாங்கம் அழித்துக் கொண்டிருப்பதாக அலறுவார்கள். ஆனால், தேர்தல் முடிந்ததும் பிணக்க அரசியலை மறந்து இணக்க அரசியலுக்குள் செல்வார்கள். பெரும்பான்மையினரின் மனதை வெல்லும் வகையில் நடந்து கொள்ள வேண்டுமென்றும் கூறுவார்கள். ஆளுமை உள்ள அரசியல் தலைவர் பொய்களைக் கூற மாட்டார். இணக்க அரசியல் மூலம்தான் முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லிக் கொள்ளவும் மாட்டார்.  இணக்க அரசியலில் இருந்து கொண்டே முஸ்லிம்களுக்கு பாதகங்களை ஏற்படுத்தக் கூடிய திவிநெகம, 18வது திருத்தம், 19வது திருத்தம், தேர்தல் முறை மாற்றம் ஆகிய சட்ட மூலங்கள் உட்பட பலவற்றிக்கு ஆதரவு அளித்துள்ளார்கள். இவைகள் இணக்க அரசியலில் முஸ்லிம்கள் அடைந்து கொண்ட தீமைகள். ஆளுமையுள்ள எந்தத் தலைமையும் முஸ்லிம்களுக்கு பாதங்களை ஏற்படுத்தக் கூடிய சட்ட மூலங்களை ஆதரிக்க மாட்டாது.
 
இறுதி யுத்தம்
விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் மேலோங்கி இருந்த காலத்தில் முஸ்லிம்கள் பல துயரங்களை அனுபவித்தார்கள். இன்று வடமாகாண முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களும், கிழக்கு மாகாண முஸ்லிம்களில் குறிப்பிட்ட ஒரு தொகையினரும் காணி மற்றும் நிரந்தர இருப்பிடம் தொடர்பான பிரச்சினைகளை அனுபவித்துக் கொண்டிருப்பதற்கு விடுதலைப் புலிகளின் இனவாத செயற்பாடுகளே காரணமாகும். இதனால்தான் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததார்கள்.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள். விடுதலைப் புலிகளின் தோல்வி முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. காரணம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமது சொந்த தாயகத்தில் நிம்மதியாக வாழலாமென்ற எண்ணமேயாகும். ஆனால், யுத்தம் முடிந்த கையுடன் முஸ்லிம்களுக்கு எதிராக குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதம் இரத்த வாடையை முகர்ந்து கொள்ளவே திட்டமிட்டது. முஸ்லிம்களின் மீது பலவகையில் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். இதனால், முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுபட்டு பௌத்த இனவாதப் பிடிக்குள் அகப்பட்டுக் கொண்டார்கள். இந்தப் பிடி புலிகளை விடவும் கொடூரமாகவே இருக்கின்றன. இதற்கு அரசாங்கத்தில் உள்ள ஒரு சிலரின் அனுசரணை இருப்பதே காரணமாகும். மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தின் காலத்தில் மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொடுமைகளை முஸ்லிம் அமைச்சர்கிளனாலும், கட்சிகளின் தலைவர்களினாலும் தடுக்க முடியவில்லை. அரசாங்கத்தைக் கண்டிக்கவும் முடியவில்லை. இவர்களினால் பௌத்த இனவாதிகளுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யவும், நீதிமன்றத்தின் உதவியை நாடவும் முடியவில்லை.
மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தில் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்ளும், அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கோழைகளாகவே இருந்தார்கள். மஹிந்தராஜபக்ஷவின் ஆளுமைக்கு முன்னால் இவர்களின் கோவைகள் அடுக்கப்பட்டிருந்தன. அதனால் ஏற்கனவே இருந்த குறைந்த பட்ச ஆளுமையைக் கூட இழந்து நின்றார்கள்.
 
நல்லாட்சி
மஹிந்தராஜபக்ஷவின் காலத்தில் நிம்மதியாக வாழ முடியாத சூழலைக் கண்ட முஸ்லிம்கள் ஆட்சி மாற்றத்தை வேண்டினார்கள். மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெறச் செய்தால் நிம்மதியாக வாழலாமென்று நினைத்தார்கள். பெரும்பான்மையான முஸ்லிம்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தார்கள். ஆனாலும், முஸ்லிம்களினால் பௌத்த இனவாதிகளின் கொடூரங்களிலிருந்து தப்ப முடியவில்லை. மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தைப் போலவே நல்லாட்சி அரசாங்கத்திலும் பௌத்த இனாவாதிகளுக்கு அரசாங்கத்தின் பாதுகாப்பு இருந்தது.
நல்லாட்சி அரசாங்கம் எந்த வேளையிலும் முறிந்து விழும் நிலையியே இருந்து கொண்டிருக்கின்றது. அரசாங்கத்திற்கு உள்ள இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளினால் முடியவில்லை. இவர்களின் ஆளுமையில் உள்ள குறைபாடே இதற்கு காரணமென்று மீண்டும் சொல்லிக் கொள்கின்றோம்.
அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக பௌத்த இனவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு நாங்கள் ஒரு போதும் துணையாக செயற்பட மாட்டோம் என்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக முஸ்லிம்களின் தலைகளைக் கூட இழப்பதற்கு நாங்கள் தயார் என்பதாகவே முஸ்லிம் அரசியல் தலைமைகளின் நிலைப்பாடுள்ளது.
மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தின் போது முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாத கும்பல்கள் தாக்குதல்களை மேற்கொண்ட போதும் அரசாங்கத்தை வீழ்த்துவதற்காகவே இவ்வாறு செயற்படுகின்றார்கள் எனத் தெரிவித்தார்கள். ஆக, ஆரசாங்கத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பதை தவிர வேறு சிந்தனைகள் முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் இருக்கவில்லை. இனியும் இருக்கப் போவதில்லை. தமது குற்றத்திற்காக வருந்துகின்ற உள்ளத்தினைக் கொண்ட ஒருவரினால்தான் திருந்த முடியும். முஸ்லிம் அரசியல் தலைமைகள் இன்னும் தமது சமூக துரோகச் செயற்பாடுகளுக்கு வருந்தவில்லை. தாங்கள் சமூகத்திற்காக நேரான வழியில் சென்று கொண்டிருக்கின்றோம் என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
 
வெறுப்பு
முஸ்லிம் அரசியல் தலைமைகளின் நடவடிக்கைகளினால் முஸ்லிம்கள் அவர்களின் மீது வெறுப்புக் கொண்டுள்ளார்கள். இவர்கள் சமூகத்திற்கு ஏற்றவர்களல்லர் என்ற முடிவுக்கு பெரும்பாலான முஸ்லிம்கள் வந்துள்ளார்கள். குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் மீது அதிக வெறுப்புக் கொண்டுள்ளார்கள். முஸ்லிம்களின் வாக்குகளை சுமார் 30 வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆயினும், மக்களின் குறைந்;த பட்ச எதிர்பார்ப்புக்களும் நிறைவேறவில்லை.
இதனால் முஸ்லிம்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்ப வேண்டுமென்று ஆசைப்படுகின்றார்கள். அது பற்றி பொது வெளியில் கதைக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு ஆளுமையுள்ள அரசியல் தலைமை ஒன்று இருந்தால்தான் தலை நிமிர்ந்து வாழ முடியும். முஸ்லிம் காங்கிரஸ் எனும் தனித்துவக் கட்சி பல அரசியல் தலைவர்களை உருவாக்கியுள்ளது. அவர்கள் யாரிடமும் முஸ்லிம் சமூகத்தை வாழ வைக்க வேண்டுமென்ற எண்ணம் கிடையாது. தங்களின் அரசியல் இருப்புக்காக பிரதேசவாதம், இனவாதம், கட்சிவாதம், தலைமைத்துவ விசுவாசவாதம் ஆகிய சேற்றுக்குள் புதையுண்டுள்ளார்கள்.
கட்சியின் தலைவருக்கு எதனையும் தூக்கிக் கொடுப்பதற்கும், சேர்த்துக் கொடுப்பதற்கும் சபதம் எடுத்துள்ள உயர்பீட உறுப்பினர்களும், ஆளுமையில்லாத தலைவர்களும் மக்களின் பிரதிநிதியாக உள்ள வரை முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் நிரப்படமாட்டாது. ஆளுமையுள்ளவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படும் போது மாத்திரமே தலைவர்களை அடையாளங் காண முடியும். இன்றுள்ளவர்களுக்கு பல தடவைகள் சந்தர்ப்பம் கொடுத்தாயிட்டு இனியும் முஸ்லிம் சமூகம் இவர்களையே அரசியல் தலைமைகளாகத் தெரிவு செய்யுமாயின் முஸ்லிம்களின் நிலை இன்னும் மோசமாகும் என்பதனை ஒவ்வொரு முஸ்லிமும் புரிந்து கொள்ள வேண்டும்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com