தமிழ் සිංහල English
Breaking News

இன்னமும் ஸ்ரீலங்கா எங்கே போகிறது.!

பிரான்சஸ் புலத்சிங்கள

ஜூலை 1983 தமிழர் விரோத கலவரம் இந்த நாட்டின் சமீபத்தைய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது, மற்றும் 35 வருடங்களுக்குப் பின்பு மூன்று தசாப்தங்கள் நீண்ட போர் முடிவடைந்து அதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட பின்னரும், நாங்கள் இன்னமும் ஸ்ரீலங்கா எங்கே போகிறது என்றே கேட்டுக்கொண்டிருக்கிறோம்?

ஒரு சாதாரண ஜூலை நாளில் கொழும்பு நகரமெங்கும் தீச் சுவாலைகள் பற்றி எரிந்தபோது இந்த எழுத்தாளருக்கு ஏழு வயதாக இருந்தது. ஒரு சிறுபிள்ளையாக இருந்த எனக்கு அரசாங்கத்தின் இராணுவத்தைச் சேர்ந்த 13 அங்கத்தவர்கள் அப்போது சிறியதாக இருந்த கிளர்ச்சி அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்.ரீ.ரீ.ஈ) கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தது தெரியாது.

அல்லாமலும் இருபது வருடங்கள் கழித்து ஒரு ஊடகவியலாளராக ஸ்ரீலங்காவின் இன மோதலையும் மற்றும் 2002 சமாதான நடவடிக்கைகளையும் பற்றிய செய்திகளைச் சேகரிப்பேன் என்பதும் எனக்கு அப்போது தெரியாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் நான் ஒரு பாடசாலை வேனில் பயணம் செய்வதும் எங்களுக்கு இடையில் நான்கு தமிழ் ஆசிரியைகள் நெருக்கியடித்து அமர்ந்து இருப்பது மட்டுமே. இந்த ஆசிரியைகள் பயத்தில் நடுங்குவதையும் எளிதில் இனங்காண முடியாதபடி அவர்கள் நெற்றியில் இருந்த பொட்டு அகற்றப்பட்டு பார்ப்பதற்கு கடினமாக இருந்ததுமே எனக்கு நினைவில் உள்ளது.

இப்போது நினைவுபடுத்திப் பார்க்கையில் அந்த பிற்பகல் வேளை படுகொலைகள் ஒரு திகில் படம் பார்ப்பதைப்போல இருந்தன. எங்கள் வான் கொழும்பில் இருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பாணந்துறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.

வானின் சாரதி தீச் சுவாலைகளுக்கு இடையே வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தார் மற்றும் கும்பல்கள் எங்கள் வாகனத்தை நிறுத்தும்படி சொல்லி வானுக்குள் தமிழர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்கும் ஒவ்வொரு முறையும் பயத்தால் தடுமாறினார். வழிநெடுக பல முறை சாரதியிடம் பெட்ரோல் தரும்படி கும்பல் கேட்டு வாங்கியது.

அதிர்ஷ்டவசமாக இந்த பெட்ரோல் ஆட்களை உயிரோடு எரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாம், இதை நான் பார்க்கவில்லை ஏனென்றால் எனது தாய் என்னையும் வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்த இதர பிள்ளைகளையும் உறங்கும்படி கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தார்.

ஜூலை 1983ல் 13 படை வீரர்களின் மரணத்துக்காக துக்கம் அனுட்டித்த ஸ்ரீலங்கா 2003ம் ஆண்டளவில் ஆயிரக்கணக்கான அதன் இளைஞர்களுக்காக துக்கம் அனுட்டித்தது.

ஒரு தேசிய பத்திரிகையின் பத்திரிகை ஊழியராகவும் மற்றும் சில தெற்காசிய பிரசுரங்களுக்கு நிருபராகவும் 2002 சமாதான நடவடிக்கை பற்றிய செய்திகளை சேகரித்துக் கொண்டிருந்த நான் இயக்க உறுப்பினர்கள், மற்றும் பெண் உறுப்பினர்களின் பெற்றோர்களுடனும் மற்றும் பல்வேறு அணியில் உள்ள கிளர்ச்சியாளர்களுடனும் பல நேர்காணல்களை மேற்கொண்டபொழுது, எப்படி தெற்கில் வளர்ந்த அவர்களில் சிலர் 1983 ஜூலைக்குப் பிறகு மட்டுமே வடக்கிற்கு வந்தார்கள் என்பதை அறிந்தபோது திகைத்துப்போனேன்.

அப்போது எல்.ரீ.ரீ.ஈ இனது காவல்துறை தலைவராக இருந்த நடேசனுன் மேற்கொண்ட உரையாடல் மிகவும் முக்கியமானது. என்னுடன் விபரங்களைப் பகிர்ந்து கொண்டபோது அவர் தன்னை மறந்து பழைய நினைவுகளில் மூழ்கிப்போனார், தான் சிங்களக் காவல்துறையில் ஒரு கான்ஸ்டபிளாக இருந்ததாக அவர் சொன்னார் ஆனால் ஸ்ரீலங்கா காவல்துறையினையே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் ஒரு சிங்களப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தார் (அந்தப் பெண் அவருடன் வடக்கிலேயே வாழ்ந்தார்). சரளமாகச் சிங்களம் பேசும் அவர் தான் சிங்கள மொழியிலேயே பேசப்போவதாக வலியுறுத்தினார் (ஆங்கிலத்தில் அல்ல), சிங்கள காவல்துறையில் ஒரு காவல்துறை உத்தியோகத்தராக தான் எவ்வளவு கடமையுணர்ச்சியுடன் சேவையாற்றினார் என்று பேச்சை ஆரம்பித்த அவரது அறிக்கையின் எனது நினைவிலுள்ள ஒரு பகுதி பின்வருமாறு:

“நான் நாரஹேன்பிட்ட காவல் நிலையத்தில் கடமையாற்றினேன் மற்றும் நான் எனது வேலையைப் பற்றி பெருமையாக எண்ணியிருந்தேன். எனது மனைவி ஒரு சிங்களவர் மற்றும் அவரும் காவல்துறையிலேயே பணி புரிந்தார். நான் ஒரு காவல்துறை ஊழியனாக இருந்தும் கலகக்காரர்களிடமிருந்து பாதுகாக்க முடியாத நிலையில் இருந்திருக்காவிட்டால் வடக்கிற்கு வந்து எல்.ரீ.ரீ.ஈ இல் இணைவது பற்றிக் கனவுகூடக் கண்டிருக்க மாட்டேன்”.

இந்த எழுத்தாளர் இந்தக் கருத்துக்களைக் குறிப்பிடுவது, 2009ல் ஸ்ரீலங்கா இராணுவத்தால் எல்.ரீ.ரீ.ஈ இயக்கம் அழிக்கப்படும் வரை தமிழர்கள், சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது முப்பது வருடங்களுக்கு மேலாக முன்னோடியற்ற வகையில் அவர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கரவாதத்துக்கான பொறுப்புக்கூறலை அதன் தலைவரிடமிருந்து அகற்றுவதற்காக அல்ல.

ஆனால் நடேசனின் வார்த்தைகளை மீண்டும் நினைவுகூருவதற்கான காரணம், ஒரு தமிழ் காவல்துறைக் காவலர் ஒரு சிங்கள காவல்துறை உத்தியோகத்தரை திருமணம் செய்து 1983 வரை கொழும்பில் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தவர், சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகன், சட்டத்தை அமல்படுத்துவதற்குப் பொறுப்பானவர் எப்படி தனது இனத்தின் காரணமாக உதவியற்றவராக உணர்வதற்கு ஆக்கப்பட்டார் மற்றும் இதன் காரணமாக  பயங்கரவாதத்தை ஏற்படுத்தும் ஒரு குழுவின் உதவியை நாடுவதற்குத் தூண்டப்பட்டார் என்பதை விளங்கிக் கொள்வதற்காகவே.

நாங்கள் 1983ல் நடந்தவை பற்றி நினைக்கும்போது எத்தனை கேள்விகள் எழலாம் என்று நாம் கேட்கக்கூடாது? முதலாவதாக எழும் கேள்வி அப்போதிருந்த அரசியல் தலைவர்கள் சிங்கள மக்களை ஆயுதம் ஏந்திய குண்டர்களின் போர்வையில் பயன்படுத்தி நாடு முழுவதிலுமுள்ள வாக்காளர் பட்டியலைக் கொடுத்து  சொத்துக்களை நாசம் செய்யவும் மற்றும் மக்களின் உயிர்களை நாசம் செய்யவும் வழியமைத்துக் கொடுத்து தன்னிச்சையான ஒரு பேரழிவை சிங்கள வெகுஜனங்களால் மேற்கொள்ள வைத்தார்கள்.

ஒரு மூத்த தமிழ் ஆய்வாளர் இப்படிச் சொல்கிறார் “உண்மையிலேயே நாட்டில் உள்ள 70 விகித சிங்களவர்களும் 12 விகிதமாக உள்ள தமிழர்களுக்கு எதிராக விரோதம் பாராட்டினால் தீவில் ஒரு தமிழர்கூட எஞ்சி இருக்க மாட்டார்” என்று.

பலவீனமற்ற கொள்கை வகுப்பு மற்றும் திறமையற்ற மூலோபாயங்கள் என்பனவற்றின் கலவையினால் சிங்கள – தமிழ் பிரச்சினையாக ஆரம்பிக்கப்பட்டு அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்ட பிரச்சினையை கடந்து செல்வதற்கு இது ஒரு தொடக்கமாக அமைந்தது

எல்.ரீ.ரீ.ஈ இல் முக்கியமான பதவிகளை வகித்தவர்களில் பலரும் படித்தவர்கள். அவர்களில் பலர் தங்கள் பெயருக்குப் பின்னால் மாஸ்ரர் என்ற பின்னிணைப்பைக் கொண்டிருப்பது அவர்கள் இந்த இயக்கத்தில் சேருவதற்கு முன்பு ஆசிரியர்களாகக் கடமையாற்றியவர்கள் என்பதினால்தான். இந்த ஸ்ரீலங்கா குடிமக்களை நாங்கள் கிளர்ச்சி இயக்கத்திடம் இழக்காமல் இருந்திருந்தால் அவர்களால் நாடு ஆதாயாம் பெற்றிருக்காதா?

சுதந்திரத்துக்குப் பிந்தைய கொள்கைவகுப்பாளர்கள் ஏன் இத்தகைய குறுகிய பார்வையுடையவர்களாக இருந்தார்கள், நாட்டிலுள்ள சனத்தொகையில் ஒரு பிரிவினர் தாங்கள் ஏனையவர்களுடன் சமமானவர்களாக இல்லை என்ற உணர்வு தோன்றினால் இத்தகைய அமைதியின்மை தோன்றும் மற்றும் இத்தகைய இயக்கங்கள் முளைவிடக்கூடும் என்பதை ஏன் அவர்கள் முன்கூட்டியே உணரவில்லை?

1956ல் சிங்களம் மட்டும் சட்டம் இயற்றப்பட்டபோது, ஆங்கிலம் படித்த சிங்கள, தமிழ். மற்றும் பறங்கியர் ஆகிய புத்திஜீவிகளை ஸ்ரீலங்கா மேற்கிடம் இழந்தபோது அதன் முதல் பெரியளவிலான மூளைசாலிகளின் வெளியேற்றத்தால் ஸ்ரீலங்காவுக்கு பாதிப்பு ஏற்படவில்லையா?

1983ல் அரசியல் தலைவர்களின் ஆட்சியில் ஏற்பட்ட தோல்வியினால் ஒரு சிலரின் செயற்பாட்டிற்கு ஒரு முழு இனக்குழுவுமே பழியேற்று வாங்கவேண்டி ஏற்பட்டது பற்றி நாம் என்ன சொல்வது? தமிழ் சிங்கள புத்திஜீவிகளின் எழுச்சி பிரபாகரனையோ அல்லது நாட்டைப் பிரிக்கும் நோக்கத்துடன் பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கும் வேறு எவரையும் தடுக்கும் வகையிலான புத்திசாலித்தனமான கொள்கைகளை வகுத்திருக்க முடியாதா?

சிங்கள பிள்ளைகள் சிங்களத்திலும் தமிழ் பிள்ளைகள் தமிழிலும் கல்வி கற்கும்படியான மொழி அடிப்படையிலான இனவெறியைத் திணிப்பதற்கான அவசியம் என்ன மற்றும் அதன்மூலம் மொழிவாரி பிளவுபட்ட பிரிவினையை ஏற்படுத்தப்பட்டது? 1972ல் பல்கலைக்கழக அனுமதிக்கு இனப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் தரப்படுத்தல் என்கிற முட்டாள்தனத்தை திணித்தது ஏன், இதன் மூலம் தமிழர்கள் பாரபட்சமாக ஒடுக்கப்பட்டார்கள் சேதம் உண்டாக்குவதற்கு முன்பு அவர்கள் அதை உணரவில்லையா?

அரசாங்க சேவையில் சேருவதற்கு சிங்கள மொழியை ஒரு முன்னுரிமையாக ஏற்படுத்தியதின் பயனாக தமிழர்கள் அரசாங்க சேவையில் நுழைவதை தடுத்ததின் மூலம் நாங்கள் அர்ப்பணிப்பும் கடமையுணர்வும் உள்ள ஒரு திறமையான சேவையாளர்களின் சக்தியை இழக்கவில்லையா?

எல்.ரீ.ரீ.ஈ இனது காவல்துறை தலைவர் நடேசன் ஒரு இரக்கமற்ற தலைவராக இருந்தபோதிலும் ஏக்கம் தோய்ந்த பழைய நினைவுகளில் மூழ்கியவண்ணம் அருகில் இருந்த தொலைபேசியை தடவியபடியே தான் தனது சிங்கள காவல்துறை நண்பர்களோடு பழைய சிங்கள பொலிஸ் நாட்களைப் பற்றிப் பேசுவதற்கு ஏங்குவதாக சிங்களத்தில் என்னிடம் சொல்லியதை நினைத்து நான் ஆச்சரியப்பட்டேன். 1983ல் தனது உயிரையும் தனது சிங்கள மனைவியின் உயிரையும் காப்பாற்றுவதற்கு எப்படி தனது சிங்கள நண்பர்கள் உதவினார்கள் என்பதை அவர் நினைவுபடுத்தினார்.

அப்போது என்னிடமே நான் கேட்டுக்கொண்ட ஒரு கேள்வி மற்றும் அது இன்னமும் கேட்டுக்கொண்டே இருக்கிறது: “நடேசனைப் போல  சட்டத்தை மதிக்கும் சாதாரண குடிமக்களான இன்னும் எத்தனை தமிழர்கள் போராளிகளாகஃஎல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களாக மாறியிருப்பார்கள்?”

1983 ஜூலையில், 371 ஸ்ரீலங்காவாசிகள் மரணமடைந்தார்கள் ஏனென்றால் அவர்கள் தமிழர்கள். 100,000 க்கு மேற்பட்ட ஸ்ரீலங்காவாசிகள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள் ஏனென்றால் அவர்கள் தமிழர்கள். 150,000 க்கு மேற்பட்ட ஸ்ரீலங்காவாசிகள் பிச்சைக்காரர்களைப்போல மாற்றப்பட்டு சுகாதாரமற்ற சனநெருக்கடியான அகதி முகாம்களில் வாழநேர்ந்தது, அவர்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் கொள்ளையடிக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டு, அழிக்கப்பட்டன ஏனென்றால் அவர்கள் தமிழர்கள்.

நூற்றுக்கணக்கில் மற்றும் ஆயிரக்கணக்கிலான மற்றவர்கள் தாங்கள் பிறந்த நாட்டை விட்டு வெளியேறி இப்போது வெளிநாட்டவர்களாக வந்துபோகிறார்கள், தங்கள் சொந்த நாட்டுக்கு பயன்படவேண்டும் என்று கனவுகண்ட அவர்களது திறமை மற்றும் தொழில் நிபுணத்துவம் என்பன என்றென்றைக்குமாய் அழிக்கப்பட்டு விட்டன.

மரணங்களுக்கு வழிவகுத்த அந்த ஜூலை மாதத்தில் வெறும் ஒரு வாரத்திற்குள்ளேயே தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) என தங்களைக் கூறிக்கொண்ட ஒரு கலவையான கும்பல் தமிழ் புத்திஜீவிகளாக மாற்றம் பெற்றது, இதுகாறும் அவர்களுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்று இருந்துவந்த எண்ணம் அவர்களின் ஒரே நம்பிக்கையாக மாறும் என அவர்கள் எண்ணியிருக்க மாட்டார்கள்.

நாங்கள் இன்னமும் 1983ன் நீண்ட நிழல்களில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 1983ல் இருந்து ஒரு மோசமான போருக்கு நாம் உந்தித் தள்ளப்பட்டோம், அது எங்கள் நாட்டை நாசமாக்கியது. மற்றும் இன்று இரத்தக்களறி ஏற்பட்டு முடிவடைந்த ஒன்பது வருடங்களில் பௌத்த தர்மத்தை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கும் மற்றும் இளைஞர்களுக்க எதிராக இளைஞர்களை பயங்கரவாதிகள் அல்லது யுத்தவீரர்கள் என்று மாற்றிய துரதிரஷ்டமான கடந்த காலத்தை மீறிச்செல்லவும் எங்களால் இயலவில்லை.

நெல்சன் மண்டேலா, நிறவெறி, பயங்கரவாதம், சந்தேகம் மற்றும் வெற்றி என்பன முடிவுக்கு வந்தபின்பு தனது நாட்டுக்கு வழங்கிய நம்பிக்கையான வாய்ப்பினைப் போல ஒன்று எங்களிடம் இல்லை.

மே 2009ல் எல்.ரீ.ரீ.ஈ யின் தலைமைத்துவத்தின் கீழ் வாழ்ந்த தமிழ் மக்களிடம் இருந்த செல்வாக்கினை அவர்கள் இழந்துவிட்ட உண்மையை போதுமானளவு ஆக்கபூர்வமாகச் செயல்படுத்து நாங்கள் தவறிவிட்டோம். வெற்றியாளர்களான சிங்களவர்களாகிய நாங்கள் மேலான நிலையில் இருக்கவில்லை என்கிற ஒரு உணர்வை தமிழர்களிடம் ஊற்றெடுக்க வைப்பதற்கு இந்தப் புரிந்துணர்வைப் பயன்படுத்த நாங்கள் தவறிவிட்டோம், அதன் காரணமாக மேற்கு, நல்லிணக்கம் என்கிற ஒரு குறியீட்டைக்காட்டி எங்களை நசக்குவதற்கு நாங்கள் அனுமதித்து விட்டோம், நல்லிணக்கம் என்பதற்கு ஆன்மாவோ அல்லது அர்த்தமோ கிடையாது.

உயர்தரமான மாநாட்டு அறைகளுக்குள் அமர்ந்து நல்லிணக்கம் பற்றிப் பேசுவதால், அரசியல் வழியில் பயங்கரவாதம் மற்றும் யுத்தம் என்கிற வழியில் சிந்திக்கப் பயிற்சியளித்து வளர்க்கப்பட்ட மக்களின் மனங்களில் இருந்து நாங்கள் குத்தியுள்ள பயங்கரவாதிகள் மற்றும் யுத்தவீரர்கள் என்கிற அடையாளங்களை திடீரென மாற்றியமைப்பதற்கான ஒரு முறைக்கு ஆன்மீக ரீதியாகவோ அல்லது உளவியல் ரீதியாகவோ நாங்கள் இன்னும் முன்னேற்றம் அடையவில்லை.

ஒன்பது வருடங்களாக யுத்தத்தை நினைவுகூரும் நிகழ்வுகள் மற்றும்  பிளவுபட்ட இரு தரப்பிலும் இருந்து இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் என்பனவற்றை நாங்கள் நடத்தி வருகிறோம். பயங்கரவாதிகள் தங்கள் தரப்பில் இறந்தவர்களை நினைவுகூருவதற்காக ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளை எதிர்த்து அரசாங்கத் தலைவர்கள் குரல் கொடுக்கிறார்கள். பின்னர் அரசாங்க அனுசரணையுடன்; யுத்த வீரர்களான ஸ்ரீலங்கா இராணுவத்தை நினைவுகூரும் நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன.

துப்பாக்கிகளுக்கும் மற்றும் பயங்கரவாதத்திற்கும் தங்கள் பிள்ளைகளைப் பலிகொடுத்த சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒன்றாகச் சேர்ந்து அரச அனுசரணையுடன் நடத்தப்படும் ஒரு நிகழ்வை நாங்கள் ஏன் இன்னமும் கொண்டிருக்கவில்லை? அத்தகைய ஒரு நிகழ்வை மிகுந்த உணர்வு மற்றும் அனுதாபத்துடன் வழங்குவதை கையாண்டிருந்தால் அது நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு நகர்வாக மட்டும் இல்லாமல், பிளவுபட்ட மக்கள் தங்கள் இறந்தவர்களை நினைவுகூருவது எந்தப்பக்கம் என்கிற பேதம் இல்லாமல் எல்லோருக்கும் இடையில் ஒரு மனிதப் பிணைப்பினை உருவாக்கியிருக்கும் இல்லையா?

2009க்குப் பிறகு உடனடியாக நாங்கள் இராணுவம் மற்றும் தமிழ் குடிமக்கள் இடையே இரத்தக்களரிக்கு எதிராக ஒரே நினைவு நிகழ்வினை நடத்துவது தொடர்பாக ஒரு கலந்துரையாடலை நடத்துமளவுக்கு ஏன் முன்னேறவில்லை மற்றும் அப்படிச்செய்வதின் மூலம் காயங்களைக் குணப்படுத்துவதற்கான கடினமான பாரிய பயணத்தை ஆரம்பித்திருக்கலாமே?

யுத்தத்தினால் ஏற்பட்ட மனத்தளர்ச்சியில் இருந்து மீள்வதற்கு எல்.ரீ.ரீ.ஈ இளைஞர்களுக்கும் மற்றும் ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்கும் கவிதை ஒரு உணர்வுகளின் வெளிப்பாடாகப் பயன்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட எங்கள் நாட்டு இளைஞர்கள் அவர்கள் எந்த அடையாளத்தை கொண்டிருக்கிறார்கள் என்கிற பாகுபாடு இன்றி ஒரு கூட்டான கவிதைக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யும் ஒரு வாய்ப்பை ஏன் நாங்கள் தவறவிட்டோம், அதைச் செய்திருந்தால்  மன்னிப்பு மற்றும் சமரசம் என்பனவற்றுக்கான ஒரு கடினமான நீண்ட பாதைக்கான வழி பிறந்திருக்கும் அல்லவா?

கேள்வி என்னவென்றால் நல்லிணக்கம் என்கிற வார்த்தைக்கு ஆழம் கொடுக்க நாங்கள் முயற்சித்திருக்கிறோமா? அப்படிச் செய்திருந்தால் ஸ்ரீலங்காவின் தேசிய கீதத்தை தமிழில் பாடியதை எதிர்த்து முட்டாள்தனமான எதிர்வாதங்கள் எப்போதாவது எழுந்திருக்குமா? உண்மையான நோக்கம் நல்லிணக்கம் தான் என்றால்; தமிழர்களுடன் காணி, மொழி, மற்றும் வடக்கு கிழக்கில் மக்கள் சார்ந்த அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட யுத்தத்துக்கு பிந்தைய கொள்கைகள் வகுப்பது தொடர்பாக நன்கு ஒருங்கிணைந்த ஒரு ஆலோசனையைப் பயன்படுத்த சிங்கள அரசியல்வாதிகளுக்கு ஞானம் பிறந்திருக்காதா?

அத்தகைய ஆலோசனைகள் தமிழ் மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தப் பட்டன, எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் நல்லிணக்கத்துக்கான ஒரு வாய்ப்பினை வழங்கவில்லை.

இந்தக் கட்டுரை இராணுவத்தில் உள்ள ஒரு மேஜரின் கதையுடன் நிறைவு பெறுவது சிறப்பானதாக இருக்கும். நான்கு வருடங்களுக்கு முன்பு இந்த எழுத்தாளர் ஒரு கல்வி ஆய்வுப் பிரசுரத்துக்காக அவரை நேர்காணல் செய்திருந்தார்.

அவர் பொலன்னறுவவைச் சேர்ந்தவர் மற்றும் அவரது குடும்பம், சொந்த பந்தங்கள் என அனைவரும் அசாதாரணமாக எல்.ரீ.ரீ.ஈ யின் கரங்களால் பாதிக்கப்பட்டிருந்தார்கள், எல்.ரீ.ரீ.ஈ இனர் வழக்கமாக இரவு வேளைகளில் அவர்களின் கிராமத்தில் ஆக்கிரமிப்பு நடத்தி கண்ணில் பட்டவரையெல்லாம் கொலை செய்து வந்தார்கள். இதற்கு மாறாக முப்பதுகளில் உள்ள இந்த இளைஞர் தனது இதயத்தில் எந்தவித வெறுப்பையும் கொண்டிருக்கவில்லை, அதற்கு மேலும் சிறப்பம்சமாக உள்ளது பயிற்சிபெற்ற சிறந்த குணாதிசயங்களை கொண்ட ஒரு பௌத்த குடும்பத்தைச் சேர்ந்தவராக இவர் இருப்பதுதான். சமாதான கற்கையில் எம்.ஏ பட்டப்பின்படிப்பினை பெறுவதற்காக அவர் கற்று வருவதுடன் எனது ஆராய்சிக்காக தனது கதையைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வமுள்ளவராக இருக்கிறார்.

கீழே அவரது கதை அவரது வார்த்தைப்படியே தரப்பட்டுள்ளது: “நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லப்போகிறேன். இதுபோன்ற கதைகளை மக்கள் கேட்க முடியாது. இதுபோன்ற ஏராளமான சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. இந்தச் சம்பவம் 2008ம் ஆண்டளவில் நடந்தது, நான் எனது ஆட்களுக்குத் தலைமையேற்று மோசமாக சண்டை செய்து கொண்டிருந்தபோது நடந்தது. பெண் போராளிகள் எங்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்துவதை நாங்கள் அறிந்திருந்தோம்.

எப்படியோ சிறிது நேரத்தக்குப் பின்பு அவர்கள் பக்கம் இருந்து துப்பாக்கிச் கூடு நடத்துவது நின்றுபோனது. அவர்கள் யாரும் உயிருடன் இல்லை என நாங்கள் நினைத்தோம். திடீரென ஒரு இளம்பெண் தனது கழுத்தை தொடுவதற்கு போராடிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம். அவளது துப்பாக்கி அவளிடம் இருக்கவில்லை. நான் உடனடியாக எனது ஆட்களுக்கு சுடவேண்டாம் எனக் கட்டளை பிறப்பித்தேன். அவள் காயமடைந்திருந்தாள். ஆயுதம் இல்லாமல் காயமடைந்த நிலையில் உள்ள ஒருவரைச் சுடக்கூடாது என எனது மனச்சாட்சி சொன்னது. அவள் மிக மோசமாகக் காயம்பட்டிருந்தாள் மற்றும் எங்களைக் கண்டு அவள் பயமடைந்திருந்தாள் அதனால் அவளது கழுத்தில் தொங்கும் சயனைட்டை எடுப்பதற்கு அவள் போராடிக் கொண்டிருந்தாள்.

அப்படிச் செய்யவேண்டாம் என அவளிடம் நான் விண்ணப்பித்தேன் மற்றும் நான் அவளுக்கு முதலுதவி செய்ய விரும்புகிறேன் அதனால் அவளது இரத்தப்போக்கு நிற்கும் அவளது ஆட்கள் அவளைக் கண்டுபிடிக்கும் வரை அவளால் உயிர்வாழ முடியும் ஆகையால் எனக்கு தீங்கு செய்யாதே என அவளிடம் நான் சொன்னேன். அவள் மிகவும் பலவீனமாக இருந்தாள். அவள் கீழே விழுந்தபோது நான் அவளுக்கு தண்ணீர் கொடுத்து அவளது கைக்கு கட்டுப்போட்டேன் சிறிதளவு நீரையும் வேறு சில உணவுப்பொருட்களையும் அவள் அருகில் வைத்தேன். சிறிது நேரம் அங்கேயே நின்றுவிட்டு கிளர்ச்சியாளர்கள் அணுகும் சத்தம் கேட்டதும் அங்கிருந்து நகர்ந்தோம். நான் இன்னமும் அந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்க்கிறேன்.

அவள் யுத்தத்தில் இருந்து பிழைத்திருப்பாள் என நான் நம்புகிறேன்  மற்றும் இப்போது அவள் இயல்பு வாழ்க்கையை வாழ்வாள்”.

இதுபோல எத்தனை கதைகள் ஸ்ரீலங்கா இளைஞர்களின் மனதில் வாழந்து கொண்டிருக்கும் அவர்கள் இராணுவத்தை சேந்தவர்களோ அல்லது எல்.ரீ.ரீ.ஈ இனைச் சேர்ந்தவர்களோ யாராக இருந்தாலும். இத்தயை குரல்கள் கேட்கப்பட்டு இந்த நாட்டுக்கு மிகவும் அவசியம் தேவையான உண்மையான மனித நேயத்தை கொண்டுவருவதற்கு அரச அனுசரணையுடனான வாய்ப்புகள் அவசியம் இல்லையா?

கடந்த ஒன்பது வருடங்களாக எந்தவித நடவடிக்கையயும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படாமல் எல்.ரீ.ரீ.ஈ செயல்பாடுகளில் ஈடுபட்டார்கள் எனச் சந்தேகிக்கப்பட்டு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாமல் சிறையில் வாடுபவர்களின் வழக்குகளை அரசாங்கம் துரிதப்படுத்தினால் சமாதான காலத்தில் இயல்பான தன்மை உருவாக வழி எற்படாதா? காலம் கடந்தாலும் சரி அரசாங்கம் 1983ம் ஆண்டு நடந்த பேரழிவுக்கு துக்கம் அனுட்டிப்பதை ஆரம்பித்து தேவைப்படும் பொறுப்புக்களை எற்றுக்கொண்டால் அது நல்லெண்ண நடவடிக்கைகளுக்கு உதவும் அல்லவா?

இந்த ஜூலை மாதத்தில் தமிழ் பொதுமக்களை எல்.ரீ.ரீ.ஈ இனது கரங்களுக்குள் நாம் எவ்வாறு தள்ளிவிட்டோம் என்கிற கொடூரமான தொடக்கத்தை நாம் மீண்டும் நினைவு கூரும் அதேவேளை பௌத்த மதத்தின் அனுதாபம், இரக்கம் மற்றும் ஞானம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் வகுக்கப்படுவதை நாம் எப்போதாவது காண்போமா?

எஸ்.குமார்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com