தமிழ் සිංහල English
Breaking News

“விருது” பட்டங்கள் சில்லறைக்கடைகளில் விற்பனை .!

 மகா சகா

“விருது” என்றாலே எப்போதும் சர்ச்சை அல்லது பிரச்சினை என்றொரு அபிப்பிராயம் பொதுவாகவே உள்ளது. சில வேளைகளில் அது “நோபல் பரிசு” போன்ற உயர் விருகளையும் விட்டு வைக்கவில்லை.

எல்லாவற்றிலும் தெரிந்தும் தெரியாமலும் அரசியல் விளையாட்டுகள் உள்ளன.

அதற்கப்பால் பிற செல்வாக்குச் செலுத்திகளும் உண்டு.

அரசியலுக்கு அப்பால் சிலர் வேறு வழிகளில் புகுந்து விளையாடி விடுவார்கள். தமிழில் இதைப்பற்றிய கதைகளைச் சொல்லவே  தேவையில்லை. அந்தளவுக்கு ஏராளம் சுழிப்புகள்.

இந்தியாவில் சாகித்திய அகாடமி தொடக்கம் அநேக அரச விருதுகளுக்குப் பின்னும் முன்னும் உள்ளும் புறமும் என ஏராளம் தில்லுமுல்லுகள் நடக்கும் வரலாறே உண்டு. ஆண்டுதோறும் இதனால் ஏற்படும் சர்ச்சைகள் நடந்தாலும் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுவதில்லை. நீங்கள் என்னதான் சொன்னாலும் நாங்கள் இப்படித்தான் செய்வோம் என்ற கணக்கில் அதே தவறுகள். அதே வெட்கமற்ற – கூச்சமற்ற செயல்கள்.

இலங்கையிலும் இதுதான் நிலைமை. இதனால் பல சந்தர்ப்பங்களிலும் தவறான கைகளுக்கே விருதுகள் போய்ச்சேருகின்றன. அபூர்வமாகச் சிலவேளை தகுதியானவர்களுக்குக் கிடைக்கிறது. அல்லது தகுதியான படைப்புகள் தெரிவாகின்றன.

இதனால் “விருது பெற்றவர்கள்” அல்லது “பரிசு பெற்றவை” என்ற பிம்பத்தோடு விடயங்களை அணுகினால் ஏமாற்றமே கிடைக்கிறது. இன்று வாசக நிலை தாழ்ந்து போனதற்கும் கலை பற்றிய பிரக்ஞையில் வீழ்ச்சியேற்பட்டதற்கும் ஒரு வகையில் இதெல்லாம் காரணமே.

இப்படிச் சொல்வதையிட்டு விருதுகளை வாங்கியவர்களும் பரிசு பெற்றவர்களும் பொங்கியெழவோ குமுறி அழவோ வேண்டியதில்லை. ஏனென்றால் இந்த விருது வழங்கும் நடைமுறையே பல இடங்களிலும் தவறாக உள்ளது. இதனால்தான் தகுதியற்றவர்கள் வெற்றியடைந்து விடுகிறார்கள். முதல் தவறு, “போட்டிக்கு விண்ணப்பிக்க வேண்டும்” என்பது.  இது விருது வழங்கும் – பரிசு கொடுக்கும் நிறுவனங்களின் நிபந்தனை.  கேள்வியற்று, சிந்தனையற்றுத் தொடரும் நடைமுறை. இதுவே நிகழும் தவறுகளுக்கு அடிப்படையாகும்.

விருதளிக்கும் தரப்புகள் தமது நிர்வாகச் செயற்பாடுகள் இலகுவாக இருப்பதற்காக இவ்வாறான நடைமுறையைப் பின்பற்றலாம். அல்லது இதைத் தவிர்த்து வேறு விதமாக முயற்சிப்பதற்கான “றிஸ்க்”கை எடுப்பதற்கு அவை விரும்பவில்லை. இந்தச் சோம்பேறித்தனமும் தப்பித்தலும் நல்லவற்றையும் சரியானவற்றையும் இனங்காண்பதற்குத் தடையாகின்றன.

இரண்டாவது, தாம் விருதளிக்கும் துறையைப் பற்றிய போதிய அறிவு இவர்களுக்கிருப்பதில்லை. அந்தத் துறையில் எத்தகைய ஆளுமையுள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய பங்களிப்பு என்ன என்று இவர்களுக்குத் தெரிவதில்லை. அதிலும் அரசின் கலாச்சார அமைச்சு, பண்பாட்டுத் திணைக்களம், மாகாண கலாச்சாரத்துறை போன்றவற்றில் இருப்போருக்கு இதைப்பற்றியெல்லாம் தெரியாது. மிகச் சிலரே தேறியவர்கள். ஏனையவர்கள்  ஏதோ ஒரு உத்தியோகம் கிடைத்திருக்கிறது. அந்த உத்தியோகத்துக்கு உரிய பணிக்கான சுற்று நிருபத்துக்கு ஏற்ற மாதிரி எதையாவது செய்தால் சரி என்ற அளவில்தான் காரியம் செய்கிறார்கள். இதனால் தவறுகள் தாராளமாகின்றன. இதைக் குறித்து யாரும் சுட்டிக் காட்டுவது குறைவு. இல்லை எனலாம்.

போட்டிக்கு விண்ணப்பியுங்கள், புத்தகங்களை அனுப்புங்கள் என்ற அறிவிப்பைப் பார்ப்பதற்கும் போட்டியில் பங்கு பற்ற வேணும் என்ற நிபந்தனையை ஏற்றுக்கொள்வதற்கும் எழுத்தாளர்களிலும் கலைஞர்களிலும் பெரும்பாலானவர்கள் அக்கறைப்படுவதில்லை. அதிலும் தகுதியான படைப்பாளிகளும் ஆற்றற் சிறப்புடைய கலைஞர்களும் இதையிட்டெல்லாம் கவலைப்படவே மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அப்படிப் பொருட்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. விருதை மனதிற் கொண்டு அவர்கள் எழுதுவதோ இயங்குவதோ இல்லை. இதை ஒரு புன்னகையுடன் கடந்து சென்று விடுவார்கள். ஆகவே அவர்கள் இதற்கு வெகு தொலைவிலேயே நின்று கொள்கிறார்கள். யாராவது வலியுறுத்தி இவர்களுடைய பெயர்களைத் தேர்வு செய்தாலே தவிர, வேறு சந்தர்ப்பம் இவர்களுக்குக் கிடையாது.

ஆனால், அந்த இடத்தை நிரப்பிக் கொள்வதற்கு விருதுக்கும் பரிசுக்குமாகவே எழுதிக் கொண்டிருப்போரும் இயங்கிக் கொண்டிருப்போரும் இந்தப் போட்டி பற்றிய அறிவிப்புகளையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். அறிவிப்புகள் வந்தவுடன் அதற்குத் தோதாக இயங்கி, பொறுப்பானவர்களின் காலையோ கையையோ பிடித்துக் காரியத்தைச் சாதித்துவிடுகிறார்கள்.

இதனால் அவர்களே அநேகமான சந்தர்ப்பங்களிலும் விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுக் கொள்கிறார்கள். இதற்கு இதுவரையான சாகித்திய மண்டலப்பரிசு, ஆளுநர் விருது, முதலமைச்சர் விருது, மாகாண விருது உள்ளிட்ட “விருது – பரிசு, பாராட்டு” ப்  பெற்றவர்களின் பட்டியலை யாரும் தொகுத்துப் பார்த்துக் கொள்ளலாம். விருது பெற்றவர்களிலும் பரிசு பெற்றவர்களிலும் எத்தனைபேர் அதற்குத் தகுதியானவர்கள் என்று. விருதும் பரிசும் பெறாத பலர் வெளியே இருக்கிறார்கள். அவர்கள் சிறந்த ஆளுமைகளாக – நல்ல எழுத்துகளைத் தந்தோராக – சிறந்த கலை வெளிப்பாட்டாளர்களாகவே இருக்கிறார்கள்.

இதற்கு எளிய ஒரு உதாரணத்தைச் சொல்ல முடியும். இதுவரையில் வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன், அஸ்வகோஸ், நிலாந்தன், பா. அகிலன், எஸ்போஸ், றஸ்மி, மைத்திரேயி, ஔவை, ஸர்மிலா ஸெய்யித்  போன்றவர்கள் இலங்கையில் எந்த விருதையும் பெற்றதாக இல்லை. எந்தப் பரிசுக்கும் தேர்வு செய்யப்படவுமில்லை. ஆனால், கடந்த முப்பது ஆண்டுகாலக் கவிதைப் பங்களிப்புகளில் இவர்களை மிஞ்சி யாரும் இருந்தில்லை.

இதைப்போல திருக்கோவில் கவியுவன், ரஞ்சகுமார், இரவி அருணாசலம், திசேரா, இராகவன் போன்ற முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களுக்கும் எந்த விருதோ பரிசோ வழங்கப்பட்டதில்லை. நாடகத்துறை, ஓவியத்துறை, இசைத்துறையிலும் ஏறக்குறைய இதுதான் நிலைமை.

எனவே விருதையோ பரிசையோ பெறாத முக்கியமான எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் கலைஞர்களையுமே நாம் வெளியில் காணமுடியும். சில ஆளுமைகளைத் தவிர்த்து, பெரும்பாலும் விருது பெற்றவர்களும் பரிசு பெற்றவர்களும் சிறுத்தே தெரிவார்கள்.

இதிலே இன்னொரு வேடிக்கையும் உண்டு. இந்தப் போட்டிகளில் வெளிப்படையாகவோ இரகசியமாகவோ ஈடுபட்டு, போட்டித் தெரிவுகளில் தங்கள் செல்வாக்கைச் செலுத்திப் பரிசு பெறுகின்றவர்கள், வெளியே காட்டுகின்ற “புனிதப் பிம்பம்” பெரிது. விருக்காக அரசின் ஆசீர்வாதத்தையும் தயவையும் நாடுகின்ற இவர்கள், வெளியே தோற்றம் காட்டும்போது தாம் தீவிர அரச எதிர்பாளர்களாகப் பாவனை செய்வார்கள். இதையிட்டு நாம் சிரித்துக் கொள்கிறோம். அல்லது மெல்லியதொரு கேலிப்புன்னகையோடு கடந்து செல்கிறோம். ஆனால், இவர்களோ காரிய சித்தர்களாக அரச விருதையும் பெற்றுக்கொண்டு, அரச எதிர்ப்பையும் செய்து கொள்வார்கள். கூடவே நேர்மையாக இருப்போரைப் பார்த்து ஒரு இகழ் சிரிப்பை உதிர்ப்பர்.

இதைச் செய்வதெல்லாம் வேறு யாருமே இல்லை. இன விடுதலை, சமூக மாற்றம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சில்லறைப்படைப்பாளிகள்தான். மெய்யான எழுத்தாளர்களும் நிறுவனங்களும் இந்தத் தவறுகளின் திசையில் ஊடாடவே மாட்டார்கள்.

போலிகளும் சப்பிகளும் அரசியலில் மட்டுமல்ல, அரசியல் புனிதம் பேசும் எழுத்தாளர்கள், ஊடகத்துறையினர், கலைஞர்களிடத்திலும்தான். வழிகாட்டிகள், திசைகாட்டிகள், மனச்சாட்சிகள், அறக்காவலர்கள், பண்பாட்டுப் பாதுகாவலர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே அதற்கு மாறாகச் செயற்படுவோர் சில்லறைகளின்றி வேறென்ன?

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com