தமிழ் සිංහල English
Breaking News

பழைய தேர்தல் முறைக்கு சு.க. எதிர்ப்பு:

பழைய தேர்தல் முறையிலாவது தேர்தலை நடத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டில் பெரும்பாலான கட்சிகள் உள்ளன என்றும், எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதற்கு உடன்படவில்லையென்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்றிரவு (புதன்கிழமை) அலரி மாளிகையில் இடம்பெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே மனோ மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின் போது ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஈ.பி.டி.பி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன பழைய தேர்தல் முறையிலாவது தேர்தலை நடத்த வேண்டுமென தெரிவித்த போதும், சு.க. மாத்திரம் புதிய தேர்தலை நடத்த வேண்டுமென குறிப்பிட்டதாக மனோ கூறினார்.

இக்கலந்துரையாடலில் மக்கள் விடுதலை முன்னணி கலந்துகொள்ளவில்லை. பொது எதிரணியும் கலந்துகொள்ளவில்லை. எனினும், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவித்த பின்னர் தமது முடிவை அறிவிப்பதாக தெரிவித்து பொது எதிரணியினர் கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக மனோ குறிப்பிட்டார். எந்த தேர்தல் முறையிலாவது தேர்தலை நடத்த வேண்டுமென ஊடகங்களுக்கு கூறிவந்த பொது எதிரணி, தற்போது கூட்டத்தை புறக்கணித்துவிட்டு கடிதத்தை அனுப்பியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், பழைய தேர்தல் முறையில் தேர்தலை நடத்த வேண்டுமென நேற்று கலந்துரையாடப்பட்ட விடயத்தை சபாநாயகருக்கு அறிவிக்கவுள்ளதாக மனோ மேலும் குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம், ரவூப் ஹக்கீம், பைஸர் முஸ்தபா, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com