தமிழ் සිංහල English
Breaking News

எமதினத்தின் விடுதலைப் போராட்டத்தையும் பலவீனப்படுத்தினோம்..!

 தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளையினரால், கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.07.2018) அன்று சுவிஸ் சூரிச் மாநிலத்தில், “29 வது வீரமக்கள் தினம்”.நிகழ்வு மிகசிறப்பாக நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்து இருந்தார்.

அவர் தனது பிரதம உரையில் தெரிவித்த கருத்துக்களின் சுருக்கமானது..,கடந்த காலங்களில் தமிழ் இயக்கங்கள் மத்தியில், முக்கியமாக 2009 க்கு முன்பு, முரண்பாடுகளும் ஆயுத மோதல்களும் ஏற்பட்டு பல அழிவுகளையும் சந்தித்தது மாத்திரமல்லாது, எமதினத்தின் விடுதலைப் போராட்டத்தையும் பலவீனப்படுத்தினோம். இயக்க மோதல்களுக்கு எதோ ஒரு இயக்கம் மாத்திரம் காரணம் என்று குற்றம் சாட்டி விட முடியாது. அனைத்து இயக்கங்களும் பொறுப்பாளிகள் தான். ஆயினும் 2009 க்கு பிறகு அந்த நிலைமைகளில் மாற்றம் வந்து, இயக்கங்களிடையே ஒரு சுமூகமான உறவுகள் உருவாகி வருகிறது.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவைகளை இனி நல்லவையாக இருக்கணும் என்பதை மனதில் கொண்டு இனத்தின் விடுதலைக்கும், நமது மக்கள் நிரந்தரமான அமைதியையும் ஒரு சுபீட்ஷமான வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதுக்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

ஒற்றுமை என்பது வெறுமையாக ஓரணியில் நிற்பது மாத்திரமல்ல, இதயசுத்தியுடனும், ஒருவரையொருவர் மற்றவர்களுடைய தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் மதித்து நேர்மையுடன் ஓரணியில் நடப்பதே உண்மையான ஒற்றுமை ஆகும்.

இங்கு உரையாற்றிய சுவிஸ் விடுதலைப் புலிகளின் முன்னைநாள் முக்கியஸ்தரான தம்பி வடிவேலு அவர்கள், “ஆரம்பமாக வெளிநாடுகளில் இருக்கின்ற எமது தமிழ் இயக்கம், கடசிகள், அமைப்புக்கள் யாவும் யுத்தகால கசப்பான அனுபவங்களை மறந்து, ஒரு உண்மையான ஒற்றுமையை கட்டியெழுப்புவதுக்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் எனவும்; எங்கள் எங்களுடைய கடசிகளின் நலம் தான் முக்கியம் என்பதை புறந்தள்ளி தமிழ் மக்களுடைய, தமிழ் மக்களின் நலம் தான் முக்கியம் என்பதை வலியுறுத்தி செயல்படுவோமானால் எமது இலக்கை அடைய முடியும் என்று கூறி இருந்தார்.

தம்பி வடிவேலு கடந்த காலங்களில் சுவிஸ் நாட்டில் புலிகளின் முக்கியஸ்தராக கடமையாற்றியது உங்களுக்கு தெரியும், அவரும் இன்று தமிழ் மக்களுடைய ஒற்றுமையின் அவசியத்தைப் பற்றியும், போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து தமிழ் உறவுகளின் மறுவாழ்வு பற்றியும் மிகத்தெளிவான கருத்துக்களை கொண்டிருப்பது மாத்திரமல்ல, அதனை செயற்பாட்டில் காட்டவும் முயற்சி எடுக்கிறார்.

இதுபோன்று அனைவரும் ஒரு நேர்மையான, ஒற்றுமையான செயல்பாடுகளை முன்னெடுப்பதுக்கு இங்குள்ளவர்கள் மாத்திரமல்ல எமது தாயக பூமியில் உள்ளவர்களும் முயற்சிகளை எடுக்க வேண்டும்.

வெறும் வாய்ச்சொல்லில் மட்டும் ஒற்றுமையைப் பற்றிக் கூறிக் கொண்டு இருப்பதும், தத்தமது கடசிகளின் நலன்களில் மாத்திரம் அக்கறை காட்டுவதும் தமிழ் மக்களுடைய விடுதலைப் பயணத்துக்கு உதவ மாட்டாது எனவும் தெரிவித்தார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com