தமிழ் සිංහල English
Breaking News

முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை விலை பேசி விற்கும் அரசியல் தலைமைகள் .!

சஹாப்தீன் –

இலங்கை முஸ்லிம்கள் நாதியற்றதொரு சமூகமாக மாற்றப்பட்டு விடுவார்களோ என்று அச்சப்படும் வகையில் முஸ்லிம்களுக்கு பலதரப்பட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.

கடந்த அரசாங்கத்தில் பௌத்த இனவாத அமைப்புக்களினால் முஸ்லிம்களுக்கு இருந்த நெருக்கடிகள் இன்றும் இருக்கின்றன.

இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் துணிச்சலுடனும், விவேகத்துடனும், தியாகத்துடனும் செயற்பட வேண்டியுள்ளது.

ஏனெனில், முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்படும் திட்டமிட்ட சதிகளை முறியடிப்பதற்கு அரசியல் தலையீடுகள் அவசியமாகும். சட்டம் அதன் கடமையைச் செய்தாலே முஸ்லிம்கள் நிம்மதியுடன் வாழலாம்.
இதனை முஸ்லிம் அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து செய்வதற்கு முன் வருதல் வேண்டும். ஆனால், முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும், அவர்கள் சார்ந்த கட்சிகளின் தலைவர்களும் சொத்துச் சேகரிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டியதொரு உள்ளகப் போராட்டத்தை ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டியதொரு சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த பல வருடங்களாக முஸ்லிம் சமூகம் முஸ்லிம் அரசியல் தலைவர்களினால் விலை கூறி விற்;கப்பட்டுள்ளது. அது பற்றிய தகவல்கள் அக்கட்சிகளின் உச்ச பீட உறுப்பினர்களினால் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகத்தின் கனவுகளை நிறைவேற்றாது தங்களது பக்கட்டுகளை நிரப்பும் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சமூகத்தின் குரல் என்ற கட்சிகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இது வேதனைக்குரியதாகும்.

நாட்டில் அரசியல் யாப்பு மாற்றம் போன்ற முக்கியமான விவகாரங்கள் பற்றி கலந்துரையாடிக் கொண்டிருக்கும் தருணத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இவ்விவாகரங்களில் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில்தான் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு சில கலந்துரையாடல்கள் நடைபெற்றாலும் அவை முஸ்லிம் சமூகத்தின் நியாயமான கோரிக்கைகளை தணிப்பதற்கானதொரு திட்டமாகவே இருக்கின்றது. இக்கலந்துரையாடல்களில் பெறப்படும் தகவல்கள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டு முஸ்லிம் சமூகத்தினை சமாளிப்பதற்குரிய வழிகள் ஆராயப்படுகின்றன.

தமிழர்களின் காணி மற்றும் சில பிரச்சினைகளில் அரசாங்கத்தினால் காட்டப்படும் ஈடுபாடு முஸ்லிம்களின் பிரச்சினைகளில் காட்டப்படுவதில்லை. முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு பதவிகளை வழங்கினால் போதுமென்பதே தேசியக் கட்சிகளின் முடிவாக இருக்கின்றன. முஸ்லிம் அரசியல் தலைமைகள் சமூகத்தின் முதுகில் சவாரி செய்வதற்கு பழக்கப்பட்டுள்ளார்கள். சன்மானங்கள் கிடைக்குமாக இருந்தால் தனித்துவத்தை தனி அறையில் விட்டுவிடுகின்றவர்களாகவே முஸ்லிம் அரசியல் தலைமைகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

முஸ்லிம்களின் குரலாக தனித்துவமானதொரு கட்சி என்று உருவாக்கப்பட்ட கட்சிகள் பொருள் தேடுவதற்கே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேற் போட்டியிட முடியாதென்பதனை மாற்றி ஒருவர் எத்தனை தடவையும் போட்டியிடலாம் என்பதற்காக கொண்டு வரப்பட்ட 18வது திருத்தச் சட்ட மூலத்திற்கு அரசாங்க தரப்பில் இருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சாதகமாக வாக்களித்தார்கள். இந்த சட்ட மூலத்திற்கு வாக்களித்தமைக்கு கைசேதப்படுவதாகவும் தெரிவித்தார்கள். கட்சியை பாதுகாத்துக் கொள்வதற்காகவே குறிப்பிட்ட சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கினோம். கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவதற்கு முடிவு செய்து விட்டார்கள். இந்த இயக்கத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக கழுத்தைக் கொடுத்தோம் என்று தெரிவிக்கப்பட்டது.

கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றிய போது கட்சிக்கு ஆபத்து என்று ஆதரவாளர்கள் புலம்பிக் கொண்டார்கள். பெரும்பாலும் அரசியல்வாதிகளின் கைகள் சுத்தமென்று சொல்லுவதற்கில்லை. ஆனால், சமூகம் என்ற போர்வைக்குள் தங்களது திருட்டுத் தாளங்களை மறைக்க முற்படக் கூடாது. நாங்கள் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொண்டு சமூகத்தை கொள்ளையிட அனுமதிக்க முடியாது. சமூகத்தை அடமானம் வைத்து கோடிகளை ஈட்டிக் கொள்வதனை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கொள்ளையர்களிடம் இருந்து முஸ்லிம்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான இந்த உள்ளகப் போராட்டத்தில் முஸ்லிம்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளல் வேண்டும். நமது கட்சியை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று சமூகத்தை அழிவுப் பாதையில் நிறுத்த முடியாது. ஒரு சிலர் கோடிகளை சம்பாதிக்க சமூகத்தின் நாடிகளை அறுக்க இடமளிக்கக் கூடாது. ஆதலால், இன்று ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் கட்சிகளின் நேர்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்கு இறைவனின் ஏற்பாடு என்று நம்ப வேண்டியுள்ளது.

முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் முஸ்லிம்களின் தனித்துவம், குரல் என்பதற்கெல்லாம் இடமில்லை. இவர்களை கட்சியை பாதுகாத்துக் கொள்வதற்காக அரியாசனத்தில் வைத்திருக்க முடியுமா என்று முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும். இன்று எற்பட்டுள்ள முரண்பாடுகள் தோன்றாதிருந்தால் அனைத்துத் திருட்டுக்களும் மறைக்கப்பட்டிருக்கும். முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை விலை பேசி விற்கும் அரசியல் தலைமைகள் மாற்றப்பட வேண்டும்.

தேர்தல் முடிந்தும் எதிர்க்கட்சியில் இருப்பார்கள். அரசாங்கத்துடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளாமல், முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றித் தருமாறு கோராமல், நிபந்தனையின்றி ஆதரவு வழங்குவார்கள். பின்னர், அரசாங்கத்திலிருந்து எதிர் அணிக்கு செல்வதற்கு விலையையும் தீர்மானித்துக் கொள்வார்கள். கோடிகளைப் பெற்று சமூகத்தின் வாயில் மண் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் உருபெருத்துக் கொண்டு செல்லுகின்றார்கள். முஸ்லிம் சமூகம் நலிவடைந்து செல்லுகின்றது. இத்தகைய முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளினால் முஸ்லிம் சமூகத்தை வாழ வைக்க முடியாது. கடந்த பல வருடங்களாக ஏற்படாத சமூக அக்கறை இனியும் வருமென்று நம்பவும் முடியாது.

18வது திருத்தச் சட்ட மூலத்திற்கு வெறுமனமே ஆதரவு அளிக்காது, கரையோர மாவட்ட கோரிக்கையை நிறைவேற்றுமாறு கேட்போம் என்று இச்சட்ட மூலம் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்ற போது, கடும் கோபத்துடன் கிளர்ந்தெழுந்த கரையோரத்தைச்; சேர்ந்த ஒருவர் அக்கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக முஸ்லிம் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார். எல்லாம் பூச்சியங்கள் படுத்தும்பாடு. இன்று அரசியல் என்பது வியாபாரமாக மாறியுள்ளது. இந்த வியாபாரத்தில் ஏமாற்றத் தெரிந்தவர்கள் அதிகம் இலாபமடைந்து கொள்கின்றார்கள். முரண்பாடுகள் ஏற்படும் போதுதான் குறைபாடுகளும் வெளிவருகின்றன. தாமதம் என்றாலும் இப்போதாவது நிஜம் புரிகின்றதே என்று எண்ணுவதனை விட வேறு எதனையும் செய்ய முடியாது.

முஸ்லிம்களிடம் பல கட்சிகள் இருந்தாலும் ஒரு கட்சிக்கு அதிக பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுள்ளது. எல்லாக் கட்சிகளும் தங்களை தனித்துவமான கட்சி என்றே அழைத்துக் கொண்டிருக்கின்றன. பொதுவாக முஸ்லிம் தனித்துவக் கட்சிகளின் பாதைகள் சமூகம் சார்ந்தாகயில்லை. இது குறித்து உச்ச பீடத்தினர் கேள்வி கேட்டால், நான் என்ன செய்வது, என்னைச் சிலர் வழி கெடுத்து விட்டார்கள் என்று சிறு பிள்ளைத்தனமான பதில்கள் தலைமைகளினால் அளிக்கப்படுகின்றன. தமது பதவிக் காலம் முழுவதும் மற்றவர்களினால் வழி கெடுக்கப்பட்டவர்கள் எப்படி தலைவர் என்று அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.

தேசியப்பட்டியல் விடயத்தில் துணிச்சலுடன் முடிவுகளை எடுக்க முடியுமாக இருந்தால், நினைத்த மாத்திரத்தில் கட்சியிலிருந்து ஒருவரை இடை நிறுத்த சக்தி இருக்குமாக இருந்தால், தேர்தலில் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு அதிகாரம் இருக்குமாயின், குறிப்பிட்ட முக்கியஸ்தர்களை போட்டியிட தடுக்க முடியுமாக இருந்தால் அதாவது தன்னை வழி கெடுத்தவர்கள் என்று சுட்டிக் காட்டப்படுகின்றவர்களுக்கே தேர்தலில் டிக்கட் வழங்க முடியாதென்று சொல்ல முடியுமாக இருந்தால், எவ்வாறு தன்னை மற்றவர்கள் வழி கெடுத்து விட்டார்கள் என்று சொல்ல முடியும். இப்படியாக வழிநெடுகளிலும் ஏராளமான குப்பைக் கதைகள் உள்ளன.

இன்று முஸ்லிம் கட்சிகளில் காணப்படும் சமூகம் சார்ந்திராத நடவடிக்கைகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டால், விமர்சனம் செய்யப்பட்டால் அதற்கு கட்சிகளின் செயலாளர் பதிலளிப்பதில்லை. தலைவர்களும் பதிலளிப்பதில்லை. தலைவர்களின் பினாமிகளும், உறவுகளும்தான் பதிலளித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களுக்கும் கட்சிகளின் வளர்ச்சிக்கும் சம்பந்தமில்லை.

எந்த அரசியல் கட்சியில் குடும்ப ஆதிக்கம் காணப்படுமோ அக்கட்சியில் பிரச்சினைகளும், ஊழல்களும் ஏற்படுவதனை தடுக்க முடியாது. குடும்ப ஆதிக்கத்தின் உச்சக் கட்டமாக கட்சியின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படும். இவ்வாறான சம்பவங்கள் உலகில் பல நாடுகளில் நடைபெற்றுள்ளன.

ஆதலால், முஸ்லிம் கட்சிகளின் உண்மைத் தொண்டர்கள் கட்சிகளில் காணப்படும் குடும்ப ஆதிக்கத்தை ஒழித்து ஜனநாயகத்தை தங்களது கட்சிகளில் ஏற்படுத்த வேண்டும்.

முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் அதிக அதிகாரங்களைக் கொண்டுள்ளார்கள். கட்டுப்படுத்த முடியாத அதிகாரங்கள் துஸ்பிரயோகத்திற்கு அழைத்துச் செல்லும்.

முஸ்லிம் சமூகத்தின் மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகார தரப்பினால் வேண்டியவைகள் கொடுக்கப்படுகின்றன. அவற்றிக்காக முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகள் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளன. மேடைகளில் வெறும் கொள்கைள் மக்களைக் கவர்வதற்காக சொல்லப்படுகின்றன. ஆனால், சொல்லுகின்றவர்களிடம் தியாகங்களை காண முடியவில்லை.

உலகில் கொள்கைள் தனியே வெற்றி பெற்றதாகயில்லை. நல்ல கொள்கையும், அதனை அடைந்து கொள்வதற்கான தியாகமும்தான் வெற்றியைக் கொடுக்கும். மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் தியாகங்கள் செய்துதான் முஸ்லிம் கட்சிகளின் தாய் கட்சியாக கருதப்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கினார். ஆலவிருட்சமாக முஸ்லிம்களுக்கு நிழல் கொடுக்க வேண்டுமென்று கனவு கண்டார். அவரின் கனவுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கட்சிகளின் அரசியல் யாப்பில் நல்ல கொள்கைள் காணப்பட்டாலும், அக்கொள்கைகளில் பற்றில்லாதவர்கள் தலைவர்களாகவும், மக்கள் பிரதிநிதிகளாகவும் நியமிக்கப்படுவார்களாயின் அங்கு தியாகத்தை எதிர் பார்க்க முடியாது. அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்காக தங்களை தியாகம் செய்வதற்கு முன்வர வேண்டுமென்ற அடிப்படையில்; இணைத்துக் கொள்ளாமல், பணம் படைத்தவர்கள்தான் செலவு செய்வார்கள் என்பதற்காக இணைக்கப்படுவார்களாயின், இத்தகையவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றதும் சமூகத்திற்காக உழைக்காது, தங்களுக்காக உழைப்பார்கள். இதனை தவிர்க்க முடியாது. முஸ்லிம் அரசியலில் இதனை தெளிவாகக் காணலாம்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com