தமிழ் සිංහල English
Breaking News

மக்களை ஏமாற்றுவதற்காக அமைச்சர் ரிசாத் அபிவிருத்தி நாடகம் .!

முஸ்லிம் காங்கிரஸ் எந்தவித அபிவிருத்தியும் செய்யவில்லை என்றால் நீங்கள் செய்யும் அபிவிருத்தி இதுதானா ?

நேற்று ஞாயிற்றுக்கிழமை நிந்தவூரிலும், சம்மாந்துறையிலும் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அபிவிருத்தி மழை பொழிந்ததாக அவரது கட்சி ஆதரவாளர்கள் முகநூல்களில் கொண்டாடினார்கள்.

நிந்தவூரில் தாகிர் மற்றும் ஹசனலி ஆகியோர்களின் ஆதரவாளர்களும், சம்மாந்துறையில் நவுசாத், வீசி இஸ்மாயிலின் ஆதரவாளர்களும் இந்த அபிவிருத்தி மழையில் நனைந்ததுடன் வெளியூர்களிலிருந்து வந்தவர்களும் அமைச்சர் ரிசாத்தை ஊர்வலமாக கோலாகலமாக அழைத்து சென்றார்கள்.

இதனை ஒரு பெரும் எழுட்சி விழாவாக அவர்களே கொட்டை எழுத்துக்களால் விளம்பரம் செய்திருந்தார்கள்.

அம்பாறை மாவட்டம் முழுவதும் பெரும் அபிவிருத்தி விழா என்றதும் மக்கள் ஒவ்வொரு ஊர் மூலை முடுக்குகளிலும் தேடத் துவங்கினார்கள். புதிதாக ஏதும் பல்கலைக்கழகம் கட்டப்படுகின்றதா ? அல்லது பாடசாலைகலிலோ அல்லது வைத்திய சாலைகளிலோ புதிய கட்டிடம் நிர்மாநிக்கப்படுகின்றதா ? அல்லது பாலங்கள் கட்டப்படுகின்றதா ? அல்லது வீதிகளுக்கு காப்பட் போடப்படுகின்றதா ? என்றெல்லாம் தேடிய மக்களுக்கு அனைத்தும் ஏமாற்றமே.

ஆக குறைந்தது கொங்ரீட் வீதிகலாவது போடப்படுகின்றதா என்றால் அதுவுமில்லை. எதுவும் புரியாத நிலையில் அபிவிருத்தி மழை என்று இவர்கள் எதனை கூறுகின்றார்கள் ? என்று ஆச்சர்யத்தில் மக்கள் எங்காவது உள்ளக வீதிகளுக்கு “களி” அல்லது கிரவலாவது போடுகின்றார்களா ? என்று தேடிப்பார்த்தால் அதுவுமில்லை. ஏமாற்றத்துக்கு மத்தியிலும் அம்மக்களை ஓர் ஆச்சர்யம் வரவேற்றது.

அந்த ஆச்சர்யம்தான் ஆங்காங்கே மக்கள் கண்ட சட்டியும், முட்டியும், பானையும், அகப்பையும், சுத்தியலும், உளியும், தையல் மிசினுமாகும்.

மக்களுக்கு ஒரே திகைப்பு. “அபிவிருத்தி” என்ற சொல்லின் அர்த்தத்தையே மாற்றிவிட்டார்களோ என்ற அங்கலாய்ப்பில் சிலர் அபிவிருத்தி என்ற சொல்லுக்கு அகராதியில் அர்த்தம் தேடினார்கள். அதில் வழமையான அர்த்தமே இருந்தது. அவர்களால் எங்கும் சட்டி, முட்டி, பானை, என்ற சொற்களை அபிவிருத்திக்கு அர்த்தமாக காணமுடியவில்லை.

இது ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும். குறித்த அமைச்சரின் ஆதரவாளர்கள் “இதையாவது அமைச்சர் கொடுக்கின்றாரே” என்று ஆறுதலையும் திருப்தியையும் அவர்களின் உள்ளத்தில் இருந்த ஏமாற்றத்தினை மறைப்பதற்காக வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இதில் நாங்கள் சிந்திக்க வேண்டிய விடயம் என்னவென்றால், குறித்த அமைச்சரின் கட்சிக்கு கடந்த பொது தேர்தலில் 33 ஆயிரம் வாக்குகளை வழங்கினார்கள். தேர்தல் முடிவடைந்து கிட்டத்தட்ட வருடங்கள் மூன்று ஆகின்றன. சில சில்லற கடைகள் திறந்ததும், சில தையல் மிசின்கள் கொடுத்தது என்பதனையும் விட வேறு எதனையும் மக்கள் காணவில்லை.

மீண்டும் கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக அமைச்சர் அம்பாறை மாவட்டத்துக்கு வலம் வந்தார். மு.கா அபிவிருத்தி செய்யவில்லை. நான் அபிவிருத்தி செய்வேன் என்றார். மு.கா மக்களின் காணிப் பிரச்சினைகளை தீர்த்துவைக்கவில்லை. நான் அதனை தீர்த்து தருவேன் என்றார்.

தேர்தல் முடிவடைந்ததும் தனது கட்சிக்கு மக்கள் ஆதரவளித்ததாக நிந்தவூரில் தாஹிரின் வாக்குகளையும், சம்மாந்துறையில் நவுசாத்தின் வாக்குகளையும் சேர்த்து கணக்கு காட்டினார்.

எனவே அம்பாறை மாவட்ட மக்கள் அவரை ஆதரித்தார்கள் என்பது அவரது நிலைப்பாடு. அப்படியானால் மு.கா ஒன்றும் செய்யவில்லை என்றும், தான் செய்வேன் என்றும் வாக்குறுதி அளித்த அபிவிருத்தி எங்கே ?

அந்த அபிவிருத்திதான் இந்த சட்டியும், பானையும், முட்டியுமா ? அப்படியாயின் அம்பாறை மாவட்ட மக்கள் ஏமாந்தவர்களா ? இந்த சட்டிக்கும், பானைக்கும், முட்டிக்குமாகவா வாக்களித்தார்கள் ?

முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை. நான் செய்து தருவேன் என்று கூறிய அபிவிருத்தி இதுதானா ?

படித்தவர்கள் நிரம்பி வாழும் அம்பாறை மாவட்ட மக்களை வன்னியிலிருந்து வந்து இலகுவாக ஏமாற்றிவிட முடியும் என்று ரிசாத் தப்புக்கணக்கு போட்டுள்ளாரா ? சட்டியையும், முட்டியையும், பானையையும் காட்டி இதுதான் அபிவிருத்தி என்றால் அம்பாறை மக்கள் நம்பிவிடுவார்கள் என்ற ஏளனமான எண்ணம் அமைச்சர் ரிசாத்திடம் உள்ளதா ?

“இதையாவது அமைச்சர் ரிசாத் கொடுக்கின்றாரே” என்று அமைச்சர் ரிசாத்துக்கு வக்காலத்து வாங்குகின்றவர்களிடம் நாங்கள் கேட்பது உங்கள் அமைச்சரின் கூற்றுப்படி முஸ்லிம் காங்கிரஸ் அபிவிருத்தி செய்யவில்லை. சரி அதனை விடுவோம். “நீங்கள் அபிவிருத்தி செய்யுங்கள்” என்றுதானே பெரும் தொகையான வாக்குகளை அம்பாறை மக்கள் வழங்கினார்கள்.

அபிவிருத்தி செய்வேன் என்று வாக்குறிதி வழங்கி அந்த வாக்குகளை பெற்ற அமைச்சர் இந்த சட்டி முட்டிகளை காட்டி இதுதான் அபிவிருத்தி மழை என்று அம்பாறை மாவட்ட மக்களை உலகம் தெரியாதவர்கள் என்று நினைத்துக்கொண்டு கேவலப்படுத்துகிணற இந்த அமைச்சரை எந்தவகையில் நீங்கள் நியாயப்படுத்தலாம் ?

அன்று தேர்தல் மேடைகளில் அபிவிருத்தி செய்வேன் என்று கூறியபோது அவரிடம் அபிவிருத்தி செய்யக்கூடிய அமைச்சு இல்லை. அவரால் அபிவிருத்தி செய்ய முடியாது என்று நாங்கள் கூறினோம். இல்லை அவரால் அபிவிருத்தி செய்ய முடியும். என்று நீங்கள் வாதாடிநீர்கள். இதுதானா அந்த அபிவிருத்திகள் ? எங்கே அந்த அபிவிருத்திகள் ?

அன்று மக்களை ஏமாற்றுவதற்காக அமைச்சர் ரிசாத் அபிவிருத்தி நாடகம் அரங்கேற்றுகின்றார். என்று கூரியபோது மறுத்தீர்கள். இன்று சட்டியையும் முட்டியையும் கொண்டுவந்து அன்று கூறியதை உண்மைப்படுத்தி அபிவிருத்தி நாடகத்தை அவர் மேடையேற்றும்போது அவர் வாக்குறுதி அளித்த அபிவிருத்தி எங்கே ? என்ற கேள்விக்கு பதிலளிக்காகமல் முஸ்லிம் காங்கிரஸ் புராணம் பாடுவது எந்தவகையில் நியாயம் ?

உங்கள் வாதப்படி ரவுப் ஹக்கீம் அம்பாறை மாவட்ட மக்களை ஏமாற்றுகின்றார் என்றால் “நானும் எனது பங்கிற்கு அம்பாறை மாவட்ட மக்களை ஏமாற்றபோகின்றேன்” என்று அமைச்சர் ரிசாத் வந்திருக்கின்றாரா ? அதற்கு நீங்களும் துணை போகின்றீர்களா ?

அப்படியானால் அம்பாறை மாவட்ட மக்கள் ஏமாளிகல்தானென்று நீங்களும், உங்கள் அமைச்சர் ரிசாத்தும் முடிவெடுத்துவிட்டீர்களா ?

முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com