தமிழ் සිංහල English
Breaking News

ஜப்பான் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு .!

மருத்துவமனையை வெள்ளம் சூழ்ந்ததால் நோயாளிகளை  படகுகள் மூலம் மீட்டுச் செல்லும் மீட்புப் படையினர்.

ஜப்பானில் தொடர்ந்து மூன்று நாள்களாக பெய்து வரும் கனமழைக்கு 76 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுகுறித்து ஜப்பான் அரசின் செய்தித் தொடர்பாளர் யோஷிடே சுஹா கூறியதாவது:ஜப்பான் தெற்குப் பகுதியில் உள்ள ஹிரோஷிமா மாகணத்தில் கடந்த மூன்று நாள்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால், மாகாணத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரையில் 76 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில், 48 பேரின் இறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 100-க்கும் அதிகமாக உள்ளது.

ஹிரோஷிமா பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அங்கு கடுமையான பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது முற்றிலும் முடங்கிப்போயுள்ளது.

மீட்பு நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள ஏதுவாக 40-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் அதற்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றார் அவர். கனமழை குறித்து ஜப்பான் வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கொச்சி மாகாண பகுதிகளில் கடந்த மூன்று மணி நேரமாக 26.3 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.

கடந்த 1976-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த அளவுக்கு மழைபெய்துள்ளது இதுவே முதல் முறை. கனமழை தொடர்ந்து நீடிக்கவே அதிக வாய்ப்புள்ளது. எனவே கியூஷு மற்றும் ஷிகோஷு தீவுகளில் புதிய புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பலத்த மழைக்கு இலக்காகியுள்ள பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதப்பதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து சேவை முடங்கிப் போயுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் காணப்படாத அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது என உள்ளூர் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

புயல் மழையில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட ஜப்பான் அரசு, நிலநடுக்கத்தின் போது ஏற்படுத்தும் அவசரகால உதவி மையங்களை போன்று அவசரகால அலுவலகங்களை உருவாக்கியுள்ளது.மீட்பு பணிகள் குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்ழ்ஸூ அபே கூறியுள்ளதாவது: நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினர் அனைவரும் நேரத்துடன் போராடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை வேகமாக மீட்டு வருகின்றனர். தம்மால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு மீட்பு குழுவினர் தங்களின் உயிரை பணயம் வைத்து பாதிக்கப்பட்டவர்களை மீட்க துரித கதியில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com