தமிழ் සිංහල English
Breaking News

எனக்காக அழதே ஸ்ரீலங்காத் தாயே, நான் உனக்காக அழுகிறேன்..!

காமினி துலாவே

பன்முக கலாச்சாரம் மற்றும் பன்முக மதம் உள்ள சமூகத்தில் வெவ்வேறு மதங்கள் மற்றும் வெவ்வேறு இனங்கள் உடன் ஒத்துழைக்க இயலாததின் காரணமாக இந்த நாட்டில் அதிகளவு எண்ணிக்கையிலான பிரச்சினைகள் உருவாகின்றன, இதற்கு பிரதானமாக சிங்களவர்கள் அதேபோல தமிழர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே தங்களின் தோற்றத்தின் வரலாறு பற்றிய அறிவு குறைவாக இருப்பதே காரணமாகும்.

சிங்களவர்கள் நம்புவது, சிங்களவர் அல்லாத குருவான மகிந்த என்பவரால் எழுதப்பட்ட மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதைப்போல சிங்களவர்கள் இந்த நாட்டை ஆக்கிரமிப்புச் செய்ய ஆரம்பித்தது இளவரசர் விஜயாவும் மற்றும் அவரது பரிவாரங்களான 700 வீரர்களின் வருகையின்போது என்று. இருப்பினும் இளவரசர் விஜயா ஒரு சிங்களவரல்ல. அப்படியானால் அவர்களின் சந்ததிதான் சிங்களவர்கள் என்கிற ஒரு முடிவுக்கு ஒருவர் வருவது சிந்தனைக்குரிய ஒரு விஷயம். தவிரவும் இன்றைய சிங்களவர்கள் ஒரு தூய இனம் அல்ல,  ஆனால் ஒரு குறிப்பிட்ட காலமாக நாட்டின் சனத்தொகையுடன் இணைந்துள்ள பல்வேறு தேசிய இனங்களின் கலவையினாலானவர்கள்தான் தம்மைச் சிங்களவர்கள் என அழைத்துக் கொள்கிறார்கள்.

அரைவாசிக்கும் அதிகமானவர்கள் போர்த்துக்கேயப் பெயர்களைக் கொண்டுள்ளார்கள். அதேவேளை தமிழர்கள்கூட தென்னிந்தியாவில் இருந்து குடியேறியவர்கள்தான் அநேகமாக அப்போது நிலப்பகுதி இணைக்கப் பட்டிருந்திருக்கும். எனவே யார் முதலில் வந்தவர்கள் என்பதைத் தீர்மானிப்பது கோழி முதல் வந்ததா அல்லது முட்டை முதல் வந்ததா என்கிற நிலமையில்தான் உள்ளது.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரின் வருகைக்கு வெகு காலத்துக்கு முன்பே நாட்டில் சிங்களவர்களும் மற்றும் தமிழர்களும் வசித்து வந்தார்கள் மற்றும் கண்டியின் கடைசி மன்னனான இந்தியாவில் இருந்து வந்த நாயக்கர்கள் உட்பட சிங்கள மற்றும் தமிழ் அரசர்கள் நாட்டின் பல பகுதிகளில் ஆட்சி செய்து வந்தார்கள்.

கலவையான இந்த சிங்கள இனத்தின் பெரும்பான்மையோர் நாட்டின் தெற்கு மேற்கு பகுதிகளிலும் மற்றும் கணிசமானளவு சிறுபான்மையினர்களான தமிழர்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளிலும் வசித்து வந்தார்கள். பின்னர் வர்த்தக தொடர்புகளால் சோனகர்களும் இங்கு குடியேறி சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் ஆகிய இருபகுதியினருடனும் திருமணம் செய்து நாட்டின் சனத்தொகையில் ஒரு சிறிய அளவான முஸ்லிம்களை உருவாக்கினார்கள்.

அரசர்களின் கீழ் இருந்த முன்னைய காலத்தில் நிலப்பிரபுத்துவ முறையிலான ஒரு ஆட்சி நடைமுறையில் இருந்தது, அதில் இப்போது உள்ளதைப் போல வேலையோ அல்லது வேலையில்லாமையோ இருக்கவில்லை. அனைவரும் பணியாளர்களாக அரசர்களால் ஆளப்பட்டார்கள், சில பிரபுத்துவ குடும்பங்கள் அரசர்களுக்கு உதவி செய்தன. அந்த அமைப்பில், தகுதி பெற்ற மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், வழக்கறிஞர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், தாதிமார், எழுதுவினைஞர்கள், அலுவலக உதவியாளர்கள் அல்லது வேறு வேலைகள் எதுவும் இருக்கவில்லை. அந்த அமைப்பில் நோயாளிகளைக் கவனிக்க  பரம்பரையாக வந்த குடும்பத்தைச் சேர்ந்த நாட்டு வைத்தியர்கள் இருந்தார்கள்.

பொறியியலாளர்களாக சுயமாக உருவாக்கப்பட்ட நபர்கள் இருந்தார்கள், சிகிரியா, அனுராதபுர, பொலன்னறுவ போன்ற இடங்களில் உள்ள கலைநயமிக்க கட்டிடங்களுக்கும் மற்றும் விவாசாயத்துக்கான நீர்ப்பாசன வலையமைப்புக் கால்வாய்களையும் கட்டுவதற்கு அவர்கள் பொறுப்பாக இருந்தார்கள். அது ஒரு எளிமையான சமூகக் கட்டமைப்பு  அதில் யாரும் இன்றைய நாட்களைப் போல செல்வம் குவிக்கவில்லை. அனைத்து நிலங்களும் அரசருக்கே சொந்தமாக இருந்தது மற்றும் கடமையில் செயல் திறன்மிக்கவர்களின் தகுதிக்கு ஏற்றபடி அவரவருக்கு நிலங்கள் ஒப்படைக்கப்பட்டன.

பிரித்தானியர்கள்தான் ஆட்சிமுறை ஒன்றை அறிமுகப்படுத்தி அனைத்தையும் மாற்றியமைத்தார்கள். இந்த மாற்றங்களுடன் சேர்த்து கல்வி முறை ஒன்றையும் அறிமுகப்படுத்தினார்கள், அதில் புதிய அமைப்பை கவனிப்பதற்காக பொதுமக்கள் பதவிகள் பெறும்வகையில் அவர்களை தூண்டுவதற்கு கிறீஸ்தவ தேவாலயங்கள் ஒரு முக்கிய பங்கினை வகித்தன. முன்னர் பௌத்த மதத்தைப் பரப்புவதற்காக சிங்கள பாளி கல்வியாளர்களையும் மற்றும் பௌத்த பிக்குகளையம் உருவாக்குவதற்காக எற்படுத்தப்பட்ட பிரிவினைக் கல்வி நிறுவனங்கள் மட்டுமே இருந்தன.

ஆரம்பத்தில் பிரித்தானிய கிறீஸ்தவ மிஷனரிகளால் நிறுவப்பட்ட கிறீஸ்தவ பாடசாலைகள்pல் சேருவதற்காக உள்நாட்டவர்கள் கிறீஸ்தவ மதத்துக்கு மாறுவதை ஊக்குவித்தன. தங்கள் படிப்பை முடித்தபின்னர் உள்நாட்டவர்கள் அரசாங்க வேலைகளைப் பெறுவதற்கு இந்தக் கல்வி உதவியாக இருந்தது. அதனால் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த அநேக பௌத்தர்கள் கல்வியைப் பெறுவதற்கும் மற்றும் வேலைகளைக் கைப்பற்றுவதற்கும் தேவையான தகுதிகளைப் பெறுவதற்கும் ஏற்றவகையில் கிறீஸ்தவர்களாக மதம் மாறினார்கள்.

அப்போது கரையோரப் பகுதிகளில் ஏற்கனவே மதம் மாறிய பல கத்தோலிக்கர்கள் இருந்தார்கள், இந்த மதமாற்றம் அவர்கள் ஒரு கல்வியைப் பெறுவதற்கு உதவியாக இருந்தது. எனினும் மதமாற்றத்துக்கான தேவைகள் தளர்த்தப்பட்டன மற்றும் சில பௌத்தர்களும் ஒருவாறு கல்வி கற்றுக்கொண்டதால் புதிய அமைப்பு முறையில் ஒரு வேலையை பெறும் தகுதியைப் பெற்றார்கள். பிரித்தானியர்கள் நிருவாகத்தைக் கையாண்டபோது சிங்களவர்களோ அல்லது தமிழர்களோ எவரும் தகுதிகள் இல்லாமல் இந்த அமைப்புக்குள் உள்வாங்கப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அந்த நேரத்தில் நிருவாக சேவைக்குள் அநேக தமிழர்கள் உள்வாங்கப்பட்டதற்கான காரணம் என்னவென்றால் ஆரம்பகால தொடக்கமாக சிங்களவர்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் கல்வி கற்றதுதான். பெரும்பான்மையான சிங்களவர்கள் தங்கள் வாழ்க்கைப் பாணியில் மிகவும் திருப்தியுள்ளவர்களாக ஏதோ ஒரு சம்பளத்துக்காக வேலைசெய்து தன்னிச்சையான வாழ்க்கை வாழவே விரும்பினார்கள்.

மிகவும் கால தாமதமாகவே சிங்களவர்கள் ஒரு வேலையும் அதன்மூலம் கிடைக்கும் வேதனமும் சிறந்த வாழ்க்கைத் தரத்துகான வழியை தருகிறது என்பதைப் அறிந்து கொண்டார்கள். அதனால் அவர்களும் கல்வியில் கரிசனை காட்டத் தொடங்கினார்கள். இங்கு நினைவில் கொள்ளவேண்டியது என்னவென்றால் வெகுஜனங்களை அடிமைத்தளையில் இருந்து முதலில் விடுதலை பெறச்செய்தவர்கள் பிரித்தானியர்களே, இருந்தபோதும் சோஷலிசவாதிகள் நம்புவது பண்டாரநாயக்காதான் வெகுஜனங்களை சாதாரண பணியாள் தரத்திலிருந்து சமூகத்தில் தொழில்சார் வல்லுனர்களாகவும் கல்வியாளர்களாகவும் மாற்றினார் என்று, இந்தக் கல்விமுறை சுதந்திரத்துக்கு வெகு காலத்துக்கு முன்பே பிரித்தானியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.

அதன் பின்புதான் ஹென்றி ஸ்ரீல் ஒல்கொட் தீவிலுள்ள பௌத்தர்கள் கல்வி பெறுவதற்கு வசதியாக பௌத்த பாடசாலைகளை நிறுவினார்.  அப்போது யாருமற்றவர்களாக இருந்து இன்று சமூகத்தில் ஒரு ஆளாக நலன்கள் அனுபவிப்பவர்களுக்கு இதுதான் ஒரு புதிய ஆரம்பமாக இருந்தது.

நாட்டில் உள்ள அமைப்புகள் சுதந்திரம் கிடைத்த காலம் வரைக்கும் மற்றும் அதற்குச் சில வருடங்களுக்குப் பிறகும் பிரச்சினைகள் இன்றி ஒழுங்காக இயங்கின. 1956ல் தேர்தலில் பெற்ற துடிப்பான வெற்றியுடன் அரசியல்வாதிகளால் மோசமான செயல்கள் ஆரம்பிக்கப்பட்டன, சமூக ஏணியில் மேலேறுவதற்காகச் சமுதாயத்தில் பதவிகளைத் தேடும் சுயமொழிப் பண்டிதர்கள் தங்கள் ஆதரவின் மூலம் அனைத்தையும் மாற்றியமைப்பதற்காக அரசியல் தலைவர்கள்மீது செல்வாக்குச் செலுத்தினார்கள்.

அவர்களது பிரதான கோஷம் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதாக இருந்தது. அவர்கள் முதலில் தங்கள் இலக்கை சிங்களவர்கள் அல்லாதவர்கள் மீதும் மற்றும் பௌத்தர்கள் அல்லாத மேற்கத்தைய கல்விமான்கள்மீதும் குறிவைத்தார்கள். வெகு காலம் ஆவதற்கு முன்பே மேற்கத்தைய கல்வி பயின்ற பௌத்தர்களும் விட்டு வைக்கப்படவில்லை.

பிரித்தானியர்கள், சிங்களவர்களை விடச் சிறுபான்மைத் தமிழர்களுக்கு  சாதகமாக நடக்கிறார்கள், அதனால் நாட்டில் உள்ள சிங்கள பௌத்தர்கள் சமூகத்தில் அவர்களுக்கு உரிய இடத்தையும் மற்றும் பௌத்த மதத்தக்கு உரிய ஒரு இடத்தையும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்பத் தொடங்கினார்கள்.

இதில் உள்ள உண்மை என்னவென்றால் பௌத்த மதத் தத்துவத்தை கண்டறிந்த புத்த பகவான் அந்த நேரத்தில் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேலான மத நம்பிக்கைகள் இந்தியாவில் நடைமுறையில் இருந்தபோதும், பௌத்தத்துக்கு உரிய இடம் கிடைக்கவேண்டும் என்று ஒருபோதும் போராடியதில்லை. நான் முன்னர் சொல்லியதுபோல பிரித்தானியர்கள் தமிழர்களோ அல்லது சிங்களவர்களோ யாராக இருந்தாலும் முறையான தகுதிகள் இல்லாமல் எவருக்கும் ஒருபோதும் வேலைகளை வழங்கவில்லை.

இதன்படி தமிழர்களுக்கு உரிய நியாயப்படி, அந்த நேரத்தில் அரசாங்கத்தில் உத்தியோகம் வகித்த ஒவ்வொரு தமிழரும் தேவையான தகுதிகளைப் பெற்றிருந்தார்கள். அடுத்த கட்டுக்கதையாக பௌத்தர்களை பிரித்தானியர்கள் துன்பப்படுத்துவதாகச் சொல்லப்பட்டது. அந்த அமைப்பு தகுதிவாய்ந்த கிறீஸ்தவர்களுக்கு தயவு காட்டியது என்பது உண்மைதான், ஆனால் அந்த அமைப்பில் நியாயமான எண்ணிக்கையிலான பௌத்தர்களும் கூட உயர் பதவிகளை வகித்து வந்தார்கள். பிரித்தானியர்களின் தலையீடு காரணமாக நாட்டில் உள்ள எந்த ஒரு பௌத்த கோவிலும் மூடப்படும் நிலைக்கு வந்ததில்லை.

இதற்கு முரண்பாடாக 1948ல் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே நாட்டின் பிரதான நகரங்களின் மூலை முடுக்குகளில் எல்லாம் காகங்களால் பரப்பப்பட்டு முளைத்த அரசமரங்கள் உள்ள இடங்கள் எல்லாம் பௌத்த கோவில்கள் காளான்களைப்போல முளைத்திருந்தன. இது நிரூபிப்பது என்னவென்றால்  பௌத்த மதத்தினைப் பின்பற்றுவதற்கும் மற்றும் சமூக எணியில் விரைவாக ஏறி பதவிகளைப் பெறுவதற்கு, பௌத்த மதத்தினை பயன்படுத்தியவர்கள் கூறியது போல பௌத்தர்கள் துன்பப்படுத்தப்படவில்லை என்பதையே.

இன்றைய இந்த சிங்களப் பண்டிதர்கள், பிரித்தானியர்கள் பிரித்து ஆளும் தந்திரத்ததை கடைப்பிடித்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்துவது பொதுவான ஒன்று, உண்மையில் சுதந்திரம் பெற்றதின் பின்னர் அரசியல்வாதிகள்தான் பிரித்து ஆட்சி செய்வதை நிலைநாட்டினார்கள்,அதேசமயம் பிரித்தானியரின் கீழ் சிங்களவர் மற்றும் தமிழரிடையே இடையே ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிலவியது. சிங்களவர்கள் மற்றும் தமிழர்களிடையே நிலவிய இந்த ஒற்றுமை மறைய ஆரம்பித்தது, 1956ல் அறிமுகப்படுத்தப்பட்ட சிங்களம் மட்டும் சட்டத்தின் பின்னரே ஆகும்.

சுதந்திரத்துக்கு முன்பும் அதன் பின்னரும் நாட்டிலுள்ள பெரும்பான்மையான பௌத்தர்களுடன் ஒப்பிடும்போது, பண்டைக்கால பௌத்தர்கள் பௌத்த தத்துவத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்களாகவும், கருணை, கருத்து மற்றும் சகிப்புத்தன்மையுடையவர்களாகவும் இருந்தார்கள் என்பதை உணர முடியும். அவர்கள் ஏனைய மத விசுவாசிகளையும் மற்றும் அனைத்து இனங்களையும் பக்கத்துக்கு பக்கம் வாழ அனுமதித்தார்கள். இனமும் மதமும் இங்கு ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மசூதிகளும் தேவாலயங்களும் பௌத்தர்களின் எதிர்ப்பு இன்றி கோவில் நிலங்களில் கட்டப்பட்டன.

தற்போது ஓடும் இரத்த வெள்ளத்தை சற்று கற்பனை செய்து பாருங்கள், தற்போதைய பௌத்தர்களின் மனோபாவம் அப்போது நிலவியதா?  1956க்குப் பின்னரே அது பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது, தற்கால பௌத்தர்கள் பௌத்த மதத்தைப் புனரமைப்பதற்கான அடிக்கல் ஹென்றி ஸ்ரீல் ஒல்கொட் மற்றும் அனகாரிக்க தர்மபால ஆகியோரால் நாட்டப்பட்டது,அதனால் இன்றுள்ள பெரும்பான்மையான பௌத்தர்கள் போர்க்குணம் மிக்கவர்களாக இருக்கிறார்கள்.

இன்றுள்ள பௌத்தர்கள் போர்க்குணம் மிக்கவர்களாக இருப்பது மட்டுமன்றி, ஆயுதங்களை கையில் எடுத்து முப்பது வருடங்களாக போரை நடத்துவதற்கு எற்றவகையில் தமிழர்களை உருவாக்குவதிலும் அவர்கள் வெற்றி கண்டுள்ளார்கள். சுதந்திரத்துக்குப் பின்னர் தமிழர்கள் தங்களுக்கு சம அந்தஸ்து கோர ஆரம்பித்தபோது சானர் சபை நிலவியதா, அன்றைய அரசியல்வாதிகள் தமிழர்கள் நாட்டில் பாதியைக் கேட்கிறார்கள் எனத் திரித்துக் கூறினார்கள். அப்போது தாயகக் கொள்கைகள் எதுவும் இருக்கவில்லை.

முதல் இனக்கலவரம் வெடித்ததின் பின்னர்;  பண்டாரநாயக்கா – செல்வநாயகம் மற்றும் டட்லி – செல்வநாயகம் ஒப்பந்தங்கள் தெற்கிலுள்ள சிங்கள அரசாங்கங்களால் ஒருதலைப்பட்டசமாக நிராகரிக்கப்பட்டதின் பின்னரே தாயகத்துக்கான கோரிக்கை பிறந்தது. பௌத்தத்துக்கு புத்துயிரூட்டுவதை விட்டுவிடுங்கள், கடந்த காலங்களில் கேள்விப்படாத மட்டத்துக்கு இன்று பௌத்தம் சிதைவடைந்து விட்டது, இன்று பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்குள் நுழைவது உட்பட அரசியலில் அதிகம் தொடர்பு கொண்டுள்ளார்கள்.

அரசியல் ஆர்ப்பாட்டங்களில் புத்த பிக்குகள் ஆடையை உயர்த்திப் பிடித்தபடி உயிரைக் காக்க ஓடுவதையும், சட்டத்தின் நீண்ட கரங்களால்; பொல்லடி வாங்குவதையும் இன்று நாங்கள் காண்கிறோம். பௌத்த பிக்குகள் மட்டுமே பௌத்த மதத்தை தரக்குறைவுக்கு உள்ளாக்குகிறார்கள், ஆனால் பாமரரான பௌத்த மக்களும் மற்றும் அவர்களின் முதுகில் ஏறிச் சவாரி செய்யும் அரசியல்வாதிகளும் கூட இதற்குப் பொறுப்பாவார்கள்.

இப்போது யுத்தம் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது, நாடு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என அனைவரும் நம்புகிறார்கள். இதில் எனக்கு மிகவும் சந்தேகமே உள்ளது. நாங்கள் ஒரு தேசமாக எங்கும் முன்னேறிச் செல்லவில்லை நல்லிணக்கம் பற்றி வாய்வார்த்தைகள் மட்டுமே  செலவிடப்படுகின்றன. வேறு எதுவும் இல்லாத பட்சத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் அல்லது பறங்கியர் என பாகுபாடின்றி அனைவரும் சமமானவர்களாக ஏற்றுக்கொள்ளப் படாவிட்டால் தாயகம் மற்றும் சுயாட்சிக்கான தமிழர்களின் கூக்குரல் தொடரும்.

அப்படிச் செய்யத் தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் சில இடங்களில் பிரிவினைக்குத் தீர்வு காண்பதற்கான வெளிநாட்டுத் தலையீடு அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அப்போது புலம்பெயர் தமிழர்களைக் குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை, பெரும்பான்மையான தமிழர்கள் இங்கு தங்கள் வாழ்வும் சொத்தும் ஆபத்தான நிலையில் இருந்ததால் அந்தக் குழப்பங்கள் காரணமாக நாட்டை விட்டு வெளயேறி விட்டார்கள். சிங்களவர்களுக்கும் இதே கதி ஏற்பட்டிருந்தால் அவர்களும் தமிழர்கள் இப்போது செய்யும் அதையே தெளிவாகச் செய்வார்கள் என்பது நிச்சயம்.

இந்த நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு உள்ள ஒரே வழி, அனைத்துக் குடிமக்களுக்கும் சமமான வாய்ப்பையும் மற்றும் சமமான அந்தஸ்தையும் வழங்கி, மதச்சார்பற்ற சமுதாயம் ஒன்றை உருவாக்கி, அரசாங்கத்தின் பின்துணையுடன் மற்றவைகளைவிட பௌத்தமதத்துக்கு உயரிய இடம் வழங்க முயற்சிக்கும் கேலிக்கூத்தை தவிர்க்கவேண்டும். தற்போதைய நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்தால் சங்கம் எங்கே சென்று முடியும் என்பதை  எல்லோராலும் காணமுடியும்.

சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்த நாடு  சிங்கள பௌத்தர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியிலேயே நகர்ந்து கொண்டிருக்கிறது அதன் விளைவாக அனைவருக்கும் பெருத்த கெடுதலும் அழிவும் நேர்ந்துள்ளது. அனைத்து ஸ்ரீலங்காவாசிகளும் ஒரே குடும்பமாக வாழவேண்டும் என்று குமார் சங்கக்கார விண்ணப்பித்தபோது, அவரது முயற்சிக்குத் தடையாக பாரிய விமர்சனத்தை அவர் எதிர்கொள்ளவேண்டி நேர்ந்தது, அதேபோல இதை எழுதுவதால் என்மீது மலர்களை விட செங்கற்களே அதிகம் வந்து விழும் என்பது எனக்குத் தெரியும.;; நிச்சயமாக, முடிவில் இழக்கப்போவது நான் இல்லை என்பதினால் எனக்கு எந்த மன உறுத்தலும் கிடையாது. எனக்காக அழதே ஸ்ரீலங்காத் தாயே, நான் உனக்காக அழுகிறேன்.

 எஸ்.குமார்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com