தமிழ் සිංහල English
Breaking News

மெஸ்ஸி, ரொனால்டோ அணிகள் வெளியேற்றம்: .!

1970ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து இதுவரை நாக்அவுட் சுற்றில் அதிக அளவிலான கோல்கள் அடிக்கப்பட்ட நாளான நேற்று, இந்த உலகக்கோப்பையின் கதாநாயகர்களாக கருதப்பட்ட லயோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரின் அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளன.

சரியான நேரத்தில் குறிப்பிடத்தக்க முடிவுகளை எடுத்து போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தாத மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணியும், ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியும் உலகக்கோப்பை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

நேற்று, பிரான்ஸுடன் நடந்த போட்டியில் அர்ஜெண்டினாவும், உருகுவே அணியுடன் நடந்த போட்டியில் போர்ச்சுகல்லும் தோல்வியைத் தழுவின. இதனால், 31 வயதான மெஸ்ஸியும், 33 வயதான ரொனால்டோவும் தங்களை உலகக்கோப்பையை வென்ற அணியில் பங்கேற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் வாய்ப்பை முற்றிலுமாக இழந்துள்ளனர்.

மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவுக்கு இதுவே கடைசி உலகக்கோப்பை போட்டியாக இருக்குமென்றும் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

டியாகோ மாரடோனாவுக்கு பிறகு உலகளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட அர்ஜெண்டினா வீரராக பல்வேறு சாதனைகளுடன் வலம் வந்தார் லயோனல் மெஸ்ஸி.

இதுவரை, இரண்டுமுறை உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றிபெற்றுள்ள அர்ஜெண்டினா அணி, தனது கடைசி உலகக்கோப்பையில் விளையாடுவதாக கருதப்படும் மெஸ்ஸி தலைமையில் களமிறங்கியது. இந்த அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், தொடக்கம் முதலே சோபிக்காத அர்ஜெண்டினா அணி காலிறுதி சுற்றுக்குள் நுழையுமா, நுழையாதா என்பதை முடிவுசெய்யும் நேற்றைய போட்டியில் பிரான்ஸை எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் 3-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸிடம் தோல்வியுற்ற அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது.

இதுவரை நான்கு உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளார் மெஸ்ஸி. ஆனால், அதில் ஒருமுறை கூட அர்ஜெண்டினா உலகக்கோப்பையை வென்றதில்லை.

போர்ச்சுகல் அணியின் ஒரே நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மெஸ்ஸியை போன்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்த உலகக் கோப்பையில் முதல் போட்டியில் ஸ்பெயினுக்கு கடுமையான போட்டியாக இருந்த போர்ச்சுகல் போட்டியை சமன் செய்துவிட்டது. மொரோக்கோவுடனான போட்டியில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்ற போர்ச்சுகல், இரானுடனான போட்டியில் மீண்டும் சமன் செய்தது. இந்நிலையில், போர்ச்சுகல் அணியின் காலிறுதி வாய்ப்பை நிர்ணயிக்கும் உருகுவே அணியுடனான நேற்றைய போட்டியில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்ததன் மூலம் இந்த உலகக்கோப்பை தொடரிலிருந்து போர்ச்சுகல் நடையை கட்டியுள்ளது.

தற்போது 33 வயதாகும் ரொனால்டோவுக்கும் இதுவே கடைசி உலகக்கோப்பை தொடராக இருக்குமென்று கருதப்படுகிறது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com