தமிழ் සිංහල English
Breaking News

உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலிருந்து ஜெர்மனி வெளியேற்றம்.!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எதிர்பாராத நிகழ்வாக நடப்புச் சாம்பியனான ஜெர்மனி நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறாமல் போட்டியிலிருந்து வெளியேறியது. ஜெர்மனி, உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் சுற்றோடு வெளியேறுவது கடந்த 80 ஆண்டுகளில் இது முதல் முறையாகும்.

நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்ய தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள் வித்தியாசத்தில் வென்றிருக்க வேண்டிய ஜெர்மனி, மாறாக அந்த அணியிடம் 2 கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அத்துடன், எஃப்’ பிரிவில் 3 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்தது.

கஸான் அரினா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முழு நேரம் வரையில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் தென் கொரியா 2 கோல்கள் அடித்து வரலாற்று வெற்றி கண்டது.

ஜெர்மனி அணி எதனால் தோல்வி கண்டது? இந்தத் தோல்வியைச் சுற்றியுள்ள ஐந்து முக்கிய அம்சங்கள்:

பலமான பின்னணி = அதீத நம்பிக்கை?

* 1938-க்குப் பிறகு இப்போதுதான் முதல் சுற்றில் வெளியேறியிருக்கிறது ஜெர்மனி. அதாவது 80 வருடங்களில் முதல்முறையாக முதல் சுற்றிலேயே வெளியேறியிருக்கிறது. ஃபிஃபா தரவரிசைப் பட்டியலில் ஜெர்மனி முதலிடத்தில் உள்ளது.

உலக சாம்பியனாக நான்கு முறை (1954, 1974, 1990, 2014) கொடிகட்டிப் பறந்த அணிக்கு இந்த நிலைமை என்பதை யாரால் நம்பமுடியும்? 18 முறை உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடிய ஜெர்மனி அணி, 13 முறை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. 8 முறை இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்று நான்கு முறை சாம்பியன் ஆகியுள்ளது.

கடந்த 5 உலகக் கோப்பைப் போட்டிகளில் இது நான்காவது முறை. 2002-ல் பிரான்சும் 2010-ல் இத்தாலியும் 2014-ல் ஸ்பெயினும் 2018-ல் ஜெர்மனியும் நடப்பு சாம்பியன்களாக இருந்து முதல் சுற்றிலேயே வெளியேறிய அணிகள்.

உலகக் கோப்பை உள்ளிட்ட சமீபத்திய ஆறு பெரிய போட்டிகளில் ஜெர்மனி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதனால் ரஷியப் போட்டியிலும் குறைந்தபட்சம் அரையிறுதிக்குத் தகுதி பெறும் என அணி நிர்வாகமும் ரசிகர்களும் நம்பினார்கள்.

உலகக் கோப்பை 2006: அரையிறுதி
யூரோ கோப்பை 2008: இரண்டாம் இடம்
உலகக் கோப்பை 2010: அரையிறுதி
யூரோ கோப்பை 2012: அரையிறுதி
உலகக் கோப்பை 2014: சாம்பியன்
யூரோ கோப்பை 2016: அரையிறுதி

எங்கே இளம் வீரர்கள்?

* கடந்த வருடம் ரஷியாவில் நடைபெற்ற கான்ஃபெடரேஷன் கோப்பையை இளம் வீரர்களைக் கொண்டு ஜெர்மனி அணி வென்றது. இதனால் அதே ரஷியாவில் நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியையும் ஜெர்மனி வெல்லும் என்றே பலரும் நம்பினார்கள். ஆனால் முதல் சுற்றிலேயே வெளியேறியது யாருமே எதிர்பாராதது.

கான்ஃபெடரேஷன் கோப்பையில் மூத்த வீரர்களின் உதவியின்றி இளம் வீரர்களைக் கொண்டு வென்றது ஜெர்மனி. ஆனால் உலகக் கோப்பையில் டிமோ வெர்னரைத் தவிர இதர இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. மூத்த வீரர்களுக்குக் காயம் ஏற்படும்போது மட்டுமே லியோன், நிக்லாஸ், ஜூலியன் செபாஸ்டியன் ருடி போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. பிரீமியர் லீக் போட்டியில் சிறந்த இளம் வீரராகப் பட்டம் வென்ற லெராய் சேனை அணியில் சேர்க்காததும் பெரிய குற்றமாகத் தற்போது பார்க்கப்படுகிறது.

முதல் ஆட்டத்தில் மெக்ஸிகோவுடன் 0-1 எனத் தோற்றது ஜெர்மனி. இதையடுத்து ஸ்வீடனுக்கு எதிரான ஆட்டத்தில் மெசுட் ஓஸில், கெடிரா ஆகிய இருவரும் நீக்கப்பட்டார்கள். அதில் 2-1 என வென்றது ஜெர்மனி. எனினும் நேற்றைய ஆட்டத்தில் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இருவரும் சொதப்பி மீண்டும் ஏமாற்றினார்கள். 2014 உலகக் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்த தாமல் முல்லர் நேற்று எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. டோனி க்ரூஸும் அப்படியே. முக்கிய வீரர்களின் மோசமான பங்களிப்பால் இந்தத் தோல்விகளைச் சந்தித்துள்ளது ஜெர்மனி அணி.

வலையில் விழாத கோல்கள்

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் கோல்கள் அடிக்க முயற்சி செய்ததில் ஜெர்மனி அணிக்கே முதலிடம். அந்த அணி 72 கோல் ஷாட்களை அடித்துள்ளது. ஆனால் அதிலிருந்து அந்த அணிக்கு 2 கோல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. என்னவொரு பரிதாப நிலை. அடுத்த இடத்தில் உள்ள ஸ்பெயின் அணி, 49 ஷாட்களில் 6 கோல்கள் அடித்துள்ளது. ஜெர்மனிக்கு இந்த விதத்தில் 3% மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. ஒரு கோலும் அடிக்காத கோஸ்டா ரிக்கா மட்டுமே ஜெர்மனியை விடவும் மோசமான நிலையை இந்தப் போட்டியில் சந்தித்துள்ளது. நடப்பு சாம்பியனுக்கு இப்படியொரு நிலை வந்திருக்க வேண்டாம்.

2014 உலகக் கோப்பையில் ஜெர்மனிக்கு எதிராக ஏழு ஆட்டங்களில் நான்கு கோல்கள் மட்டுமே எதிரணிகளால் அடிக்கமுடிந்தது. ஆனால் இந்தமுறை சரியான தடுப்பாட்டம் இல்லாததால் 3 ஆட்டங்களிலேயே 4 கோல்களை விட்டுக்கொடுத்துள்ளது.

இந்த உலகக் கோப்பையில் ஜெர்மனி அணி, 2 கோல்களை மட்டுமே அடித்துள்ளது. 1938-ல் இரு ஆட்டங்கள் மட்டுமே விளையாடி 3 கோல்களை அடித்தது. இந்த இரு முறையும் அந்த அணி முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது.

ஆதிக்கம் எங்கே?

2014-க்கும் இந்த வருடப் போட்டிக்கும் எவ்வளவு வித்தியாசம்? அந்த வருட உலகக் கோப்பைப் போட்டியில் ஜெர்மனி அணி, ஒட்டுமொத்தமாக 8 நிமிடங்கள் மட்டுமே பின்தங்கியிருந்தது. அந்தளவுக்குப் போட்டி முழுக்க ஆதிகம் செலுத்தியது. ஆனால் இந்தமுறை, ஸ்வீடனுக்கு எதிராக ஒரே ஒரு நிமிடம் முன்னணியில் இருந்தது. அவ்வளவுதான். மற்ற எல்லா ஆட்டங்களிலும் பின்தங்கியிருந்தது. உலக சாம்பியன் அணி என்றால் எப்படி இருக்கவேண்டும்!

பின்விளைவுகள்

* ஜெர்மனி பயிற்சியாளர் ஜோவாசிம் லோயிவ்-வுக்கு 2022 வரை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 2006 முதல் ஜெர்மனி பயிற்சியாளராக உள்ளார். ஆனால் இந்த மோசமான தோல்விக்குப் பிறகு அவர் விரைவில் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்மனியின் பிரபல வீரர்களான முல்லர், ஹம்மல்ஸ், கெடிரா, போடங் ஆகியோர் அடுத்த கத்தார் உலகக் கோப்பையின்போது 32 வயதைத் தாண்டிவிடுவார்கள். இதனால் இந்த முக்கிய வீரர்களை அடுத்த உலகக் கோப்பையில் காண்பது கடினம் என்று அறியப்படுகிறது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com