தமிழ் සිංහල English
Breaking News

‘ இனியும் தினகரன் பக்கம் இருப்பதால் எந்தப் பலனும் இல்லை..!

அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் கமிஷன் அளித்துள்ள அங்கீகாரம், தினகரன் ஆதரவு 18 தகுதிநீக்க எம்.எல்.ஏக்களை மிரள வைத்துள்ளது. ‘ இனியும் தினகரன் பக்கம் இருப்பதால் எந்தப் பலனும் இல்லை. இங்கே வந்துவிடுங்கள்’ என நேரடி அழைப்புவிடுத்து வருகின்றனர் ஆளும்கட்சி அமைச்சர்கள்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் நேற்று வெளியான அறிவிப்பு ஒன்றில், அ.தி.மு.கவின் புதிய சட்டவிதிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அதன்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு அங்கீகாரம் வழங்கியும் உத்தரவு வெளியாகியிருந்தது. இந்த அறிவிப்பை வரவேற்றுப் பேசிய அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன், ‘ கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு இந்த உத்தரவு துணைபுரியும்’ எனத் தெரிவித்தார்.

தேர்தல் கமிஷனின் இந்த உத்தரவைக் கடுமையாக எதிர்த்தார் டி.டி.வி.தினகரன். இந்நிலையில், தினகரன் பக்கம் உள்ள நிர்வாகிகளுக்கு தூது அனுப்பியுள்ளனர் ஆளும்கட்சி அமைச்சர்கள்.  இதுதொடர்பாக, நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், ” தேர்தல் ஆணையத்தில் இருந்து இப்படியொரு அறிவிப்பு வரும் தினகரன் அணியினர் எதிர்பார்க்கவில்லை. நேற்று எங்களிடம் பேசிய தினகரன் ஆதரவு பிரமுகர் ஒருவர், ‘ ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றதன் பின்னணியில் சில சிம்பதிகள் துணை நின்றன. திகார் சிறைக்குப் போனது, பா.ஜ.க எதிர்ப்பு, டோக்கன் சிஸ்டம் எனப் பல காரணங்கள் இயல்பாக அமைந்தன.

அவரும் நட்சத்திர வேட்பாளராக வெற்றி பெற்றார். இதே வெற்றியை மாநிலம் முழுவதும் எதிர்பார்க்க முடியாது. இரட்டை இலையை எதிர்த்து வெற்றி பெற முடியாது. அப்படியே போட்டியிட்டாலும் மூன்றாவது இடம்தான் கிடைக்கும். சின்னம் முடங்கியே இருந்திருந்தால், தேர்தல் களம் எங்களுக்குச் சாதகமாக இருந்திருக்கும்’ என ஆதங்கப்பட்டார்.

அவருடைய கருத்தையொட்டித்தான் அ.ம.மு.க நிர்வாகிகளும் இருக்கின்றனர். இப்படியெல்லாம் நடக்கும் என்பதை அறிந்துதான் கருணாஸ், அன்சாரி, தனியரசு உள்ளிட்டவர்கள், தி.மு.க மீது பாசத்தைக் காட்டி வருகின்றனர். ‘இந்தப் போட்டியில் நம்மால் நிலைத்து நிற்க முடியாது’ என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.

‘இரட்டை இலையை மீட்பேன்’ என தினகரன் கூறியதால்தான், சில நிர்வாகிகள் அவருடன் இருந்தனர். இனி அவர்களும் அ.தி.மு.க பக்கம் வருவதற்கே வாய்ப்பு அதிகம். இதை உணர்ந்து முதல்வர் தரப்பிலும், ‘ அந்தப் பக்கம் இருந்தால், அரசியல் எதிர்காலம் தொலைந்து போய்விடும். மீண்டும் கழகத்துக்கே திரும்புங்கள்’ எனப் பேசி வருகிறார். இனி வரும் நாட்களில் தினகரனுக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடிய சம்பவங்கள் நடக்கும்” என்றார் விரிவாக.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com