தமிழ் සිංහල English
Breaking News

கிழக்கின் அரசியல் வரைபடத்தில் மாற்றங்களை யார் கொண்டு வருவது?

சீனாவால் அமைக்கப்பட்டுவரும் கொழும்புத் துறைமுக நகரத்தையும் சேர்த்த கொழும்பின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டிருக்கிறது. நில அளவையாளர் நாயகம்
பி.எம்.பி. உதயகாந்த இதை வெளியிட்டு வைத்ததுடன், இலங்கையின் புதிய வரைபடத்திலும் பல மாற்றங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், கிழக்கின் அரசியல் வரைபடத்தில் மாற்றங்களை யார் கொண்டு வருவது என்பதுதான் இப்போதுள்ள கேள்வியாகும்.

அரசியலை வெறுக்காதவர்கள், அடி மட்டம் முதல் உயர்நிலை வரையில் இருக்கத்தான் செய்கிறார்கள். இருந்தாலும் அரசியலைத் தூக்கி எறிந்து விட்டு, எதைத்தான் செய்துவிட முடியும். ‘அரசியலும் மண்ணாங்கட்டியும்’ என்று இப்போது இருந்துவிட முடியாது. அப்படி இருந்துவிட நினைப்போமானால் அதிக காலம் பட்டினிதான் இருக்க வேண்டிவரும்.

கிழக்கின் அரசியல் களநிலைவரம்,  பரஸ்பரம் புரிதலில்லாத ஓர் இருண்ட  சூழலில் பயணிக்கும் தன்மையில் காணப்படுகிறது. இந்தப் புதிய அரசியல் களம், எதிர்காலத்துக்குச் சிறப்பானதாக ஒருபோதும் இருக்கமாட்டாது.

கிழக்கில் தமிழ் அரசியல்வாதி ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கையில், மற்றவர்களைப் பற்றிய வசையும் விமர்சனமும், ஏச்சும் பேச்சும் என்று போய்க் கொண்டே இருந்தது. இடையில் ஒரு குறுக்கறுப்பு; இவையெல்லாம் இல்லாமல் அரசியல்வாதியாக இருக்க முடியுமா என்றார் அருகிலிருந்த இன்னொரு நண்பர்.

தமிழர் விடுதலைப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே, ஆரம்பித்திருக்கும் தமிழர்களது அரசியல் களம், இப்போது காத்திரமானதாக இல்லாமல் போனது ஏன்? என்பதற்குத் தமிழர்களின் மனோநிலையும்தான் காரணம். ஒருவரிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்துவிட்டால், அது அவரது பாடு என்று விட்டுவிடுவது, தவறான மனோநிலைகளில் ஒன்றாகும்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இணைந்திருந்த இரு மாகாணங்கள் 22 வருடங்களின் பின்னர் பிரிக்கப்பட்டு, கிழக்கு மாகாணம் தனியாக்கப்பட்டதன் பின்னர், பிள்ளையானைத் தலைவராகக் கொண்டு உருவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்குத் தளபதி கருணாவைத் தலைவராகக் கொண்ட தமிழர் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பு, வடகிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த வரதராஜப் பெருமாளால் மீளமைக்கப்பட்டுவரும் தமிழர் சமூக ஜனநாயகக்கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி, நாம் திராவிடர், ஈரோஸ், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் எனப் பல கட்சிகள், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் புதிதாக உருவாக்கம் பெற்றிருக்கின்றன; சில மீள்உருவாக்கம் பெற்றுள்ளன. மே மாத இறுதி நாள்களில் ‘எமது தலைமுறைக்கட்சி’ என்றொரு புதிய கட்சி, மட்டக்களப்பில் உதித்திருக்கிறது.

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; கட்சியைத் தொடங்கலாம் என்கிற நிலைமை ஊக்குவிக்கப்படுகின்ற அல்லது வளர்ந்து வருகின்ற சூழலில் கிழக்கின் அரசியல் நிலைவரம் எப்படியிருக்கும், அதன் எதிர்காலம் குறித்து, சமூக அக்கறையுடன் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இவ்விடத்தில்தான், இதற்கான தேவை எனக்கு என்ன இருக்கிறது; ஏன் நான் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்ற கேள்விகள் தோன்றும். அவ்வாறானால் அந்தக் கேள்விகள் யாவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கியே செல்லும்.

நான்குக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளை, தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கிற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதை வழிநடத்தும் அரசியல்வாதிகளும் மக்களின் அரசியல் தேவைகளை நிறைவேற்றி வைப்பதில் காட்டுகின்ற அக்கறையும் ஏற்படுத்துகின்ற இடைவெளிகளும் தான் அவையாகும்.

கடந்த காலங்களில் மக்களது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற ஆயுதம் தூக்கிப் போராடி, ‘முடியாமல்’ மீண்டும் அரசியலுக்குள் வந்தவர்கள், ஆயிரக்கணக்கில் அரசியல் கட்சிகளுக்குள் இருக்கிறார்கள். அதேபோன்று பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் என்று கிழக்கின் அரசியல்வாதிகளின் தொழில்சார் பட்டியல் நீண்டு செல்லும். ஆனால், கிழக்குத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுகின்றனவா, அக்கறையாவது செலுத்தப்படுகிறதா?

யுத்தகாலம் என்பது எல்லோரையும் துன்புறுத்தியதாகவே இருந்தது. அந்த யுத்தத்தில் இழந்தவற்றை இன்னமும் அடைந்து கொள்ளாத போது, இப்போது எதைப்பற்றித்தான் மக்களால் சிந்திக்க முடியும் என்ற நியாயத்தை சிலர் முன்வைக்கிறார்கள் .

இருந்தாலும், எமது எதிர்கால சந்ததிகளின் சுபீட்சமான எதிர்காலம் கருதி, அரசியல் செல்நெறி குறித்துச் சிந்தித்துத்தான் ஆகவேண்டும்.

‘எனக்குக் கிடைக்காவிட்டால் அது எதிரிக்கும் கிடைக்கக்கூடாது; எனக்கு இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு ஒரு கண்ணேனும் போகவேண்டும்’ இவ்வாறு இறுக்கமாயிருக்கின்ற பலரை, உள்ளூராட்சித் தேர்தலில் பார்க்க முடிந்தது. இதற்கான காரணமாகத் தேர்தல் முறையைத்தான் பலர் குறைசொல்வார்கள்.

சரி, அரசியல் அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு, எதிர்க்கட்சியாக இருந்தாலும் மாகாண சபையில், உள்ளூராட்சி சபைகளில் ஆளும் கட்சியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்காக சொல்லிக்கொள்ளத்தக்கதாக எதைச் செய்தது என்றொரு கேள்விக்கு என்னதான் பதிலுண்டு?

கிழக்கைப் பொறுத்தவரையில், வட மாகாணத்தின் அரசியல் நிலைமைக்கு முற்றிலும் மாறுபட்டதே. தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் என மூவினங்களும் பரவலாக வசிக்கும் மாகாணம் என்ற வகையில், தமிழினம் பாதிப்படையும் வகையில் முடிவுகள் எடுக்கப்படுகையில், அதை இராஜதந்திர ரீதியாகக் கையாளும் துணியும் நேர்மையும் வேண்டும். அது கட்சியின் விஞ்ஞாபனக் கொள்கைக்கு முரண்பட்டதாக இருக்குமானாலும் பொறுப்புள்ள அரசியலை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் கிழக்கிலுள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு உண்டு.

கடந்த 2015 ஜனாதிபதி மாற்றத்துடன் உருவான அரசியல் சூழலில், கிழக்கு மாகாண சபை ஆட்சியமைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு அமைச்சுகளைப் பெற்றுக் கொண்டது. ‘அரசியல் என்பது சாக்கடை’ என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும், அமைச்சர்களாக நியமிக்கப்ட்ட இருவரும் மிகக்கவனமாகவும் எந்த ஒரு கறைபடிதலுக்கும் இடம்கொடுக்காமலும் அரசியலையும் கடமையையும் செய்ய வேண்டும் என்றே நினைத்துக் கொண்டனர். ஒருவர் முதல் தடவையாக அரசியலுக்கு வந்து மாகாண சபை உறுப்பினரானவர். மற்றையவர் முதிர்ந்த அரசியல்வாதி. இருந்தாலும் இருவரது நிதானத்தின் பெறுபேறுகளாக ஒன்றையும் காணமுடியவில்லை.

 போராட்டமே தோற்றுப்போன களத்தில், நிதானமும் சாந்தமும் எதையும் சாதித்துவிடப் போவதில்லை. அதற்கான சந்ததியின் வருகைக்கு, இன்னும் நிறையக் காலம் இருக்கிறது.

மிகவும் தெளிவானதும் இறுக்கமானதுமான சமூகமயமாக்கப்பட்டதான தமிழர் சமூகத்தின் கட்டமைப்புகளை யுத்தம் சிதைத்துவிட்டது என்பது உண்மைதான். அதற்காக இந்தச் சிதைப்பை, காலம்காலமாகத் தொடர்ந்து, எடுத்துச் சென்று அழிவுக்குள்ளாக வேண்டும் என்ற எந்தத் தேவையும் கிடையாது.

இப்போதுள்ள பிரச்சினை என்னவென்றால், இந்தச் சிதைவைச் சீர் செய்வதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் எந்தவோர் அரசியல்வாதியும் இதுவரையில் எடுக்கவில்லை; அதற்கான திட்டங்கள் குறித்தும் சிந்திக்கவில்லை. இதைக் கைவிட்டு சிதறுதேங்காய்த்தனமான அரசியலே கிழக்கில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.

இந்த இடத்தில், இலங்கையின் வரைபடத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது போன்றதான ஓர் அரசியல் மாற்றம், கிழக்கின் அரசியல் வரைபடத்திலும் ஏற்பட வேண்டும் என்பதுதான் மக்கள் எல்லோருடைய அபிலாஷைகளாக இருக்கிறது.

 நான் மாத்திரமே குற்றி அரிசி வரவேண்டும் என்று எண்ணுகின்ற அரசியல் மனோபாவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். யார் குற்றி வந்த அரசியானாலும் மக்களின் பசி தீர்க்கப்பட வேண்டும் என்ற மனநிலை அரசியல்வாதிகளிடத்தில் உருவாக வேண்டும்.

தமக்குள் இருக்கின்ற வெப்புசாரங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, கிழக்கின் அரசியலுக்கு விடிவை யாரேனும் கொண்டு வரவேண்டும்.

அதேவேளை, அரசியல்வாதிகளிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டோம்; அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற மனோநிலையில் இருந்தும் மக்கள் வெளியில் வந்தாகவேண்டும்.

 கல்விஞானம் உடையவர்கள், நேர்மையாளர்கள், பணத்துக்கு அடிமையாகாதவர்கள், துணிவு, வீரம், அடக்கம் போன்ற தலைமைத்துவப் பண்புகளைக் கொண்டவர்களை, கிழக்கின் தமிழ் அரசியல்வாதிகளாக மக்கள் தெரிந்தெடுப்பதிலும் இதன் வெற்றி தங்கியுள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com