தமிழ் සිංහල English
Breaking News

மலையக மக்களின் வரலாற்றை மோடிக்கு தெரியப்படுத்துங்கள்-திலகராஜ்!

இலங்கையில் வாழும் மலையக மக்கள், தொடர்ந்தும் சந்தித்துவரும் பிரச்சினைகளை நினைவூட்டிய நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மலையக மக்களின் வரலாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டுமெனவும் கோரினார்.

இந்திய அரசியன் நிதியுதவியுடனான வீட்டுத்திட்டத்துக்கான இரண்டாம் கட்டத்தின் முதலாவது ஆரம்பகட்ட நிகழ்வு, கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட மடகும்புர தோட்டத்தில், நேற்று முன்தினம் (04) இடம்பெற்றது.

மலையக மக்களுக்கு, 14,000 வீடுகளை அமைத்துக் கொடுக்கும் இந்திய அரச வீட்டுத்திட்டத்தில், மடகும்புர தோட்டத்தில், 250 வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட, இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் அரிந்தம் பக்சி உள்ளிட்ட அதிகாரிகளிடமே, இக்கோரிக்கையை, நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்தார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் திரேந்திர சிங் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

அங்கு உரையாற்றிய திலகராஜ் எம்.பி, “இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரே, இலங்கை நாடாளுமன்றத்துக்கு மலையக மக்களின் பிரதிநிதியை அனுப்பி வைத்த பெருமை, மடகும்புர மண்ணுக்குரியது. எனினும் அதே காலப்பகுதியில் இலங்கை சுதந்திரமடைந்த ஆண்டில், நாங்கள் இந்த நாட்டில் குடியுரிமையற்றவர்கள் ஆக்கப்பட்டதனால், அத்தகைய வாய்ப்புகளைத் தொடர்ந்து இழந்தோம்” என்றார்.

இலங்கையில் நாடற்றவர்களாக இருந்தோருக்குக் குடியுரிமையை வழங்கும் நோக்கில் கைச்சாத்திடப்பட்ட சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தை இதன்போது விமர்சித்த திலகராஜ் எம்.பி, மலையக மக்கள் மீதான கரிசனை இல்லாமல், இவ்வொப்பந்தத்தின் மூலமாக, இரு நாட்டு அரசாங்கங்களும் அம்மக்களைக் கூறுபோட்டுக் கொண்டனர் எனக் குறிப்பிட்டார்.

“எமது மறைக்கப்பட்ட வரலாறு, இந்தியாவுக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும். சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தை நினைவுபடுத்துகின்றேன்.

“எங்கள் மக்களின் வரலாற்றை, இந்தியப் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு செல்லுங்கள். அவர் இலங்கை வந்தபோது, சந்தித்த மக்களின் உண்மை வாழ்வுநிலையை எடுத்துச் சொல்லுங்கள். சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தில் இந்தியா சென்ற எமது உறவுகள், தமிழ்நாட்டில் சிலோன் கொலனிகளில் சிலோன்காரர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

“நாங்கள் இலங்கையில் இன்றும் இந்திய தமிழர்களாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதுதான் எமது வரலாறு. இது, இந்திய உயர்பீடத்துக்குச் செல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

மலைய மக்களின் அவல வாழ்வாக அமைந்துள்ள லயன் வாழ்க்கை முறையை மாற்றியமைக்க, இன்னும் அதிக உதவிகள் தேவைப்படுகின்றன எனக் குறிப்பிட்ட எம்.பி, மலையக மக்கள் மீது இந்தியாவுக்கு, இன்னமும் அதிகமான பொறுப்புக் காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், “மலையக மக்களுக்குத் தேவையான வீடுகள் இரண்டு இலட்சத்தைத் தாண்டும். இந்தியா இப்போது 14,000 வீடுகளை வழங்கி, அதன் பங்களிப்பை வழங்கியிருக்கிறது. அதற்காக நன்றி தெரிவிக்கின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com