தமிழ் සිංහල English
Breaking News

நீட் பரீட்சையில் தோல்வியடைந்துவிட்ட அதிர்ச்சியில் மாணவி தற்கொலை..!

நீட் பரீட்சையில் தோல்வியடைந்துவிட்ட அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டுள்ள பிரதீபாவிற்கு, கடந்த ஆண்டு தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டுக்கான நீட் பரீட்சை முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், பிரதீபா என்னும் தமிழகத்தை சேர்ந்த மாணவி பரீட்சையில் தோல்வியடைந்தமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தமிழகம் எங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, நீட் பரீட்சையை ரத்து செய்யக்கோரி கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டும் நீட் பரீட்சைக்கு தோற்றிய பிரதீபா, 155 மதிப்பெண்களை பெற்றும் அரச மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. எனினும் அவருக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

ஆயினும் பணம் இல்லாத ஒரு காரணத்தினால் அதை புறக்கணித்த பிரதீபா, இந்த ஆண்டு மீண்டும் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

அதன்படி இந்த ஆண்டு நீட் பரீட்சைக்கான தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், பிரதீபா வெறும் 39 புள்ளிகளையே பெற்ற நிலையில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரின் தாய் மற்றும் தந்தை ஆகியயோர் தொழிலுக்கு சென்று திரும்பும் வேளையில், பிரதீபா விஷ மருந்தருந்திவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவ்வேளை வீட்டுக்கு வந்த பெற்றோரிடம், தான் நீட் பரீட்சையில் தோல்வியடைந்து விட்டதாகவும், அதனால் விஷமருந்தருந்தி விட்டதாகவும் கூறியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் உயிர் பிழைக்கவில்லை.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை மேற்கொண்டுவரும் பொலிஸார், அவரின் வீட்டிலிருந்து ஒரு கடிதத்தை மீட்டுள்ளனர்.

குறித்த கடிதத்தில் தான் இந்த ஆண்டு தமிழ் மொழி மூலம் நீட் பரீட்சைக்கு தோற்றியதாகவும், பரீட்சை தாளில் வினாக்கள் சில ஆங்கிலத்திலிருந்து தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாகவும் பிரதீபா எழுதியுள்ளார்.

அத்துடன் தவறாக மொழி பெயர்க்கப்பட்ட வினாக்களுக்குரிய மதிப்பெண்ணை, அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், குறித்த சம்பவத்தை கண்டித்து நேற்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதோடு, நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com