தமிழ் සිංහල English
Breaking News

பங்களாதேஷ் அணிக்கு மறக்க முடியாத பாடத்தை கற்பித்த ஆப்கானிஸ்தான்..!

ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் மொஹமட் நபியின் சகலதுறை ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்று, தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

இரண்டு அணிகளும் மோதிய இரண்டாவது டி20 போட்டி தெஹ்ரா துனில் நடைபெற்றது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி , ஆப்கானிஸ்தான் சுழலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய தமிம் இக்பால் ஒருபக்கம் நிலைத்து நிற்க, மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய வீரர்கள் மிகவும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, தொடர்ச்சியாக பெவிலியன் திரும்பினர்.

ஆப்கானிஸ்தான் அணியின் இரண்டாவது ஓவரை வீசிய சபூர் ஷர்டான், லிடன் டாஸை ஒரு ஓட்டத்துடன் வெளியேற்ற, அடுத்து வந்த சபீர் ரஹ்மான் 13 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து மொஹமட் நபியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய முஷ்பிகூர் ரஹீம் 22 ஓட்டங்கள், மொஹமதுல்லா 14 ஓட்டங்கள், அணித்தலைவர் சகிப் அல் ஹசன் 3 ஓட்டங்கள், சௌமிய சர்கார் 3 ஓட்டங்கள் மற்றும் மொஷ்டாக் ஹுசைன் ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணி நெருக்கடிக்கு உள்ளானது.

இறுதியாக தமிம் இக்பால் 43 ஓட்டங்களையும் அபு ஹய்டர் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

ஆப்கானிஸ்தான் அணிசார்பில் சிறப்பாக பந்து வீசிய ரஷீட் கான், 16வது ஓவரில் சகிப் அல் ஹசன், தமிம் இக்பால் மற்றும் மொஷ்டாக் ஹுசைன் ஆகியோரின் விக்கட்டுகளை வீழ்த்தியதுடன், 4 ஓவர்கள் பந்து வீசி 12 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை வீழ்த்தினார். மறுமுனையில் மொஹமட் நபி 19 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தானின் ஆரம்ப துடுப்பாட்டத்திற்கான இணைப்பாட்ம் மெதுவாக நகர்ந்தாலும், சிறப்பாக இருந்தது.
மொஹமட் சேஷாட் 24 ஓட்டங்களையும், உஸ்மான் கஹானி 21 ஓட்டங்களையும் பகிர்ந்துக்கொண்டனர்.

தொடர்ந்து களமிறங்கிய சமியுல்லா சென்வாரி சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படு்த்திக்கொண்டிருக்கையில், அணித்தலைவர் அஷ்ஹார் ஸடெனிக்ஷாய் வந்த வேகத்தில் நான்கு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சென்வாரி 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் நின்ற மொஹமட் நபி 15 பந்துகளில் 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் தொடர் வெற்றியை உறுதிசெய்தார்.

பங்களாதேஷ் அணியின் மொஷ்டாக் ஹுசைன் 21 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி 2-0 என கைப்பற்றியுள்ளனர். அதுமாத்திரமின்றி இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 தொடரை கைப்பற்றிய பெருமையையும் ஆப்கானிஸ்தான் அணி பெற்றுக்கொண்டது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com