தமிழ் සිංහල English
Breaking News

நாட்டிற்கு முறையான தலைமைத்துவம் அமைந்து விட்டதா?வாக்களித்தவர்கள் முட்டாள்களா?

முறையான தலைமைத்தும் அமையவில்லை என்ற குற்றச்சாட்டுகள், விமர்சனங்களைத் தொடர்ந்து புதிய மாற்றம், புதிய அரசியல் திருப்பம் என்ற வகையில் மஹிந்த அரசாங்கம் வீழ்ச்சியடைந்து, நல்லாட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியில் அமர்ந்தார்.

எனினும் தற்போதும் நாட்டிற்கு முறையான தலைமைத்துவம் அமைந்து விட்டதா? என்ற பல்வேறுபட்ட கேள்விகள் அரசியல் அவதானிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உட்பூசல்கள் அதிகார போட்டிகள் காரணமாக பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றார்களா, அல்லது முட்டாளாக்கப்படுகின்றார்களா என்ற விமர்சனங்களே தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்ரமித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் அமரும் முன்னரும், பதவியில் அமர்ந்த பின்னரும், தற்போதும் வெவ்வேறு விதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றமையே ஆகும்.

நாட்டை அபிவிருத்தி பாதைக்கு கொண்டுவருவதே முக்கியம் என அப்போது கூறிய மைத்திரி மக்கள் மத்தியில் பகிரங்கமாகக் கருத்து வெளியிட்டார். இவ்விதமாக… “நாட்டை முன்னேற்றுவதற்றாகவும், இதன் பின்னர் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளே 100 நாள் வேலைத் திட்டமாக காணப்படுகின்றது. இந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நாம், நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என உறுதி கூறுகின்றேன்”. இது மைத்திரி பதவியில் அமர்ந்த பின்னர் பகிரங்கமாக கூறிய சபதம்.

இதே ஜனாதிபதி நேற்று முன்தினம் பொது மக்கள், அரசியல்வாதிகள் உட்பட பலர் கூடியிருந்த இடத்தில் “100 நாள் வேலைத்திட்டம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, இதனை அமைத்தவர்கள் யார் என்பதும் எனக்குத் தெரியாது. இந்த நிலையில் தான் சிலர் கூறுகின்றார்கள் நான் செயற்திறன் மிக்க தலைவர் இல்லை என. மஹிந்தவை எதிர்க்க யாரும் இல்லாத போது சிங்கம் போன்று முன்னால் வந்தது நான்” என பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.

அன்று ஒரு கருத்தையும், இன்று அதற்கு முற்றிலுர்ம் முரண்பட்ட மாற்றுக் கருத்தையும் ஜனாதிபதி மைத்திரி முன்வைத்துள்ளார். குறிப்பாக அவரது அண்மைய உரையின் போது பிரதமர் ரணிலுக்கு எதிரான வகையிலான கருத்துகளையே வெளிப்படுத்தினார் என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.

இது மட்டுமல்ல, அண்மையில் மேடையில் உரையாற்றிய ஜனாதிபதி “ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்த பின்னர் அவர் தங்காலை செல்வதற்காக ஹெலிகொப்டர் கொடுத்தது யார்? நானா கொடுத்தேன்?. இதற்கு பதில் கூற வேண்டியவர்கள் கூற வேண்டும். மஹிந்தவிற்கு ஹெலிகொப்டர் கொடுத்தது யார் என நான் விமானப்படைத் தளபதியிடம் வினவிய போது, நீங்கள் கூறியதாக ஒருவர் கூறினார் என பதில் அளித்தார். அதற்கு நான் கூறினேன் நான் உத்தரவு பிறப்பிக்கவில்லை, எனக்கு எதுவும் தெரியாது” என்ற வகையில் கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

எனினும் 2016.04.09 அன்று பொது மேடையில் மைத்திரி உரையாற்றிய போது “ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்த பின்னர் அவர் தங்காலை செல்வதற்காக இரு ஹெலிகொப்டர்களை நான் கொடுத்தேன். தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அரசு ஹெலிகொப்டரில் முன்னாள் தலைவர் ஒருவர் வீடு செல்ல அனுமதித்தது எந்த நாட்டிலாவது நடந்துள்ளதா?. ஆனால் நான் கொடுத்தேன்” என மைத்திரி தெரிவித்திருந்ததை மறந்துவிட்டார்.

இவ்வாறான இருவேறு விதமான கருத்துகளை ஜனாதிபதி முன்வைத்துள்ளமை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர நல்லாட்சிக்கு எதிராக மஹிந்த புதுக்கட்சி ஆரம்பிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்த காலகட்டத்தில் “எனக்கெதிராக யாரேனும் கட்சி ஆரம்பித்தால் அவர்களுடைய இரகசியங்களை அம்பலப்படுத்தி வீதியில் அழைய விடுவேன்” என மைத்திரி கூறியிருந்தார்.

இருந்தபோதும் இன்று பொதுஜன எனும் கட்சி மஹிந்த ஆதரவுத் தரப்பினரால் ஆரம்பிக்கப்பட்டு நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்டு வருவதோடு, நாட்டின் எதிர்கட்சியாக அமைய வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றது.

எனினும் மைத்திரி அன்று கூறி இரகசிய அம்பலப்படுத்தல் கதை, இரகசியமாகவே போய்விட்டது. குறித்த இரகசிய விடயம் முழு நாட்டுக்கும் அவசியமானதாக இருக்கும் என்பது சுட்டிக்காட்டப்படத்தக்க விடயம்.

மஹிந்தவின் ஊழல்களை அம்பலப்படுத்துவோம், கோட்டாபயவின் கொலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து நீதியை நிலைநாட்டுவோம் என பிரச்சார பீரங்கிகளாக முழங்கி அதிகாரத்தைக் கைப்பற்றிய நல்லாட்சி இன்று “கோட்டாபயவை தண்டிப்பது எவ்வாறு என்றே தெரியவில்லை” எனக் கூறி வருகின்றது. அன்று தொடர்ந்த அதே யுகமே இன்றும் தொடர்கின்றது.

இவ்விதமாக மக்களை ஏமாற்றி பதவி அதிகாரத்தில் அமர்ந்து செயற்பட்டு வரும்போது, வாக்களித்தவர்கள் முட்டாள்களா என்ற கேள்வியே எழுந்து வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com