தமிழ் සිංහල English
Breaking News

சும்மா கூடி கலையும் புதிய அரசியலமைப்பு சபை .!

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை தரவும், ஏனைய பிரதான பிரச்சினைகளுக்கு முடிவை தரவும் புதிய அரசியலமைப்பு ஒன்று அவசியம் என்பது எங்கள் உறுதியான நிலைப்பாடு. ஆனால், இப்படி சொல்லி ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு செயற்பாடு இன்று ஒரு நம்பிக்கையற்ற கட்டத்தை அடைந்துள்ளது.

புதிய அரசியலமைப்பு செயற்பாட்டின் பிரதான குழுவான வழிகாட்டல் குழு சும்மா கூடி கலையும் குழுவாக ஏறக்குறைய மாறி விட்டது. இதுவே இன்றைய உண்மை. இந்த உண்மைக்கு, புறம்பான போலி நம்பிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்த என்னால் முடியாது. அத்தகைய ஒரு முயற்சிக்கு துணை போகவும் முடியாது என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ மேலும் கூறியதாவது,

தாம் பாராளுமன்றத்தில் முன்வைக்க போகின்ற, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் திருத்த யோசனையை பற்றி, ஜேவிபி தலைவர் நண்பர் அனுர திசாநாயக்க, நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த வியாழக்கிழமை கூடிய வழிகாட்டல் குழு கூட்டத்தின் போது, என்னிடம் விளக்கி கூறினார். இந்த யோசனையை நாம் ஏற்க போகவில்லை என அவருக்கு நான் சொன்னேன். ஆனால், தனது யோசனையை முன்வைக்கும் அவரது நிலைப்பாட்டுக்கு அவர் கூறிய காரணத்தை நான் ஏற்றுக்கொள்வதாக நான் அவரிடம் கூறினேன்.

போகிற போக்கை பார்த்தால் புதிய அரசியலமைப்பு வருவதாக தெரியவில்லை. எனவே வராத ஒன்று வரும் என்று சும்மா காத்திருந்து, மக்களுக்கு தாம் அளித்த வாக்குறுதியை தாம் மீற முடியாது. ஆகவேதான், புதிய அரசியலமைப்பு செயற்பாட்டுக்கு வெளியே 20வது திருத்தமாக இந்த யோசனையை தாம் கொண்டு வருவதாக, நண்பர் அனுர திசாநாயக்க என்னிடம் கூறினார். அவரது யோசனையை ஏற்காவிட்டலும்கூட, அரசியலமைப்பு செயற்பாட்டுக்கு வெளியே அதை கொண்டுவரும் அந்த காரணத்தை ஏற்றுக்கொள்வதாக அவரிடம் நான் கூறினேன்.

அதுபோல, இன்றைய அரசியலமைப்பின் மொழி தொடர்பான அத்தியாயத்தில், ´சிங்களம் இலங்கையின் ஆட்சி மொழியாகும்´ என்று முதல் வரியில் கூறிவிட்டு, அடுத்த வரியில் ´தமிழும் ஒரு ஆட்சிமொழி´ என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏதோ தமிழுக்கு போனால் போகிறது என ஒரு இரண்டாம் தர அந்தஸ்த்தை தருவது போல் இருக்கிறது. இதை மாற்றி புதிய அரசியலமைப்பில், ´சிங்களமும், தமிழும் இலங்கையின் இரண்டு ஆட்சி மொழிகள்´ என்று ஒரே வரியில் சொல்லப்படும் யோசனையை தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாக நான் வழிகாட்டல் குழுவில் தெரிவித்து இடைக்கால அறிக்கையில் குறிப்பிட செய்துள்ளேன்.

இப்போது புதிய அரசியலமைப்பு என்ற ஒன்று வருவதில் பாரிய தாமதமும், சந்தேகமும் ஏற்பட்டு உள்ளதால், இன்றைய அரசியலமைப்புக்கு 21வது திருத்தமாக, ´சிங்களமும், தமிழும் இலங்கையின் இரண்டு ஆட்சி மொழிகள்´ என்று ஒரே வரி யோசனையை, புதிய அரசியலமைப்பு செயற்பாட்டுக்கு வெளியே கொண்டு வர போவதாக வழிகாட்டல் குழுவுக்கு நான் அதிகாரபூர்வமாக அறிவித்தேன்.

ஜேவிபியின் ´நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும்´ யோசனை 20வது திருத்த யோசனையாகவும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ´ஆட்சி மொழி சமத்துவ யோசனை´ 21வது திருத்த யோசனையாகவும் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்த யோசனைகளாக முன்வைக்கபடும்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com