தமிழ் සිංහල English
Breaking News

நோன்பு உங்கள் மீது கடமையாகிறது – ஒரு மகாஸிதியப் பார்வை

அஷ்ஷெய்க் அக்றம் அப்துஸ் ஸமத் (நளீமி) B.A. (Cey)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ — البقرة 183

டியூனிஸிய இஸ்லாமிய அறிஞரான கலாநிதி நூருத்தீன் காதிமி அவர்கள் கூறுவது போல், இந்த அல்குர்ஆன் வசனம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது.

முதலாவது ஈமானியப் பகுதி, இரண்டாவது சட்டப்பகுதி, மூன்றாவது மகாஸிதியப் பகுதி. “ஈமான் கொண்டவர்களே” என்ற அழைப்புடன் ஆரம்பிக்கும் வசனம் இரண்டாவதாக நோன்பு உங்களுக்குக் கடமையாகிறது என்ற சட்டத்தை முன்வைக்கிறது, மூன்றாவதாக நோன்பு ஏன் கடமையாகிறது என்பதற்கான நோக்கத்தைத் தெளிவு படுத்துகிறது.

ஈமான் கொண்டவர்களே, என்ற அழைப்பின் தத்துவம் என்ன? அது வெறுமனே ஒரு விழிப்புக் குறி மாத்திரமா? எங்கள் கவனங்களை ஈர்ப்பதற்கான ஒரு முயற்சி மாத்திரமா? நிச்சயமாக இல்லை. அதனைத் தாண்டிய ஒரு தத்துவம் அதன் பின்னால் மறைந்திருக்கிறது. அதுதான், “ஒரு நம்பிக்கைப் பின்புலத்திலிருந்தே ஒரு செயல் தோற்றம் பெறுகிறது” என்ற தத்துவம். இங்கு குறித்ததொரு நம்பிக்கையுடன் இருப்பவர்களைப் பார்த்துதான் அல்குர்ஆன் இந்த சட்டத்தைப் பேசுகிறது. ஏனெனில் ஒரு சட்டம் அல்லது செயல் ஒரு மனிதனிடத்தில் அவன் ஆழ்ந்து நம்புகின்ற ஒரு கருத்தியலின் அடிப்படையிலேயே தோற்றம் பெற முடியும்.

இங்கு மனிதன் ஆழ்ந்து நம்புகின்ற விடயம் என்ன? அல்லது எதனை மனிதன் ஈமான் கொண்டிருக்கிறான்? அதற்கும் நோன்பு என்ற சட்டத்திற்குமிடையிலான் தொடர்பு என்ன?

மிகவும் எளிமையாகச் சொன்னால் இந்தப் பிரபஞ்சத்திற்குப் பின்னால் படைப்பாளன் ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை, இந்த உலக வாழ்வுக்குப் பின்னால் அதன் விளைவைக் காண்பதற்கான மறுமை வாழ்வு ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கை, அந்தப் படைப்பாளன் உலகில் தான் தெரிவு செய்யும் தூதுவர்கள் மூலம் வேதங்களை அனுப்பி மனித சமூகத்தை வழிநடாத்துகிறான் என்ற நம்பிக்கை. இதுதான் இஸ்லாம் பேசும் அடிப்படையான ஈமானியத் தத்துவம்.

இந்த நம்பிக்கை உலகில் மனித வாழ்வுக்கான மிகச் சரியான பெறுமானத்தைக் கொடுக்கிறது. உண்மையில் இது ஒரு நம்பிக்கை என்பதை விடவும் இதுதான் உலகின் நிஜம், உண்மை. இந்த உண்மையைத்தான் அல்குர்ஆன் உரத்துச் சொல்கிறது. இந்த உண்மைக்கு ஏற்ப வாழ்வு அமைவதே மனிதவாழ்வின் மிகப் பெரிய நலன். மனிதனின் நிம்மதி சந்தோசம் சுபிட்சம் அனைத்தும் இந்த உண்மைக்கு ஏற்ற வாழ்விலேயே தங்கியிருக்கிறது. இதுதான் மனிதனுக்கு நன்மையானது.

எனவே நம்பிக்கை என்பது அல்லாஹ்வும் மறுமையும் தூதுத்துவமும் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளுதல் மாத்திரமல்ல, மாற்றமாக அவை இருப்பது எனக்காக, எனது நன்மைக்காக என்ற மனநிலையும் இணைந்ததுவே நம்பிக்கையாகும்.

இப்பொழுது அந்த நம்பிக்கையின் செயல் வடிவமாகவே நோன்பு என்ற சட்டம் அல்லது செயல் இங்கு சொல்லப்படுகிறது. நோன்பு என்ற செயலின் சட்ட நிலைப்பாடு அது வாஜிப் என்பதாகும். அதாவது ஒவ்வொரு தனிநபர் மீதும் அது கடமையாகிறது.

இந்தக் கருத்தை அல்குர்ஆன் முன்வைக்கும் விதம் சற்று வித்தியாசமானது, சிந்தனையைத் தூண்டக் கூடியது. “நோன்பு உங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்படுகிறது”. இந்த வசனம் நோன்பு என்பது மனிதவரலாற்றில் எல்லா சமூகங்களுக்குமான பொதுக்கட்டளையாகக் காணப்பட்டிருக்கிறது என்ற கருத்தைத் தருகிறது. அதன் மூலம் நாம் புரிந்து கொள்ளும் உண்மை என்ன? நோன்பு என்ற செயல் மனிதவாழ்வில் அவனுக்குரிய நலனை நிலைநிறுத்துவதற்கான ஒரு அடிப்படையான மனித நடத்தை, இந்த நடத்தை மனிதவாழ்வில் என்றும் நிலைத்திருக்க வேண்டும், அது இல்லாமல் போகின்ற ஒரு சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது. ஏனெனில் இந்த நடத்தைதான் மனிதவாழ்வுக்கு என்றும் நன்மையானது. அதனால்தான் அல்லாஹ்தஆலா அது உங்களுக்குக் கடமை என்று மாத்திரம் சொல்லாது, உங்களுக்கு முன்புவாழ்ந்த எல்லா சமூகத்தவர்களிடமும் காணப்பட்ட ஒரு பொது நடத்தை என்ற நியாயத்தையும் இணைத்துச் சொல்கிறான்.

இதனை மற்றொரு வகையில் கூறினால் கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்கள் கூறுவது போல், நோன்பு என்ற நடத்தையும் ஒரு வகையில் மகாஸித்களில் ஒன்றுதான். ஏனெனில் மனிதவாழ்வில் அழியாது நிலைத்து இருக்க வேண்டிய ஒரு பண்பாகவே நோன்பு இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்து நோன்பின் நோக்கம் என்ன? என்பதை அல்குர்ஆன் கூறுகிறது. “நீங்கள் தக்வா உடையவர்களாக மாறலாம்” . நோன்பின் தனிமனித சமூக விளைவுதான் தக்வா. தக்வாவின் பொருள் என்ன? நாம் பொதுவாகவே தக்வா எனும் போது தவிர்ந்து கொள்ளுதல், ஒதுங்கியிருத்தல் போன்ற எதிர்மறைப் பொருள் ஒன்றையே அதற்கு வழங்குவோம்.

ஆனால் கலாநிதி அஹ்மத் ரைஸுனி அவர்கள் கூறுவது போல், தக்வா என்பது “தாதிய்யா” எனும் சுயமாய் செயற்படுதல் என்பதே அதன் உள்ளார்ந்த பொருளாகும். நோன்பு ஒரு மனிதனில் பயிற்றுவிக்க விரும்புகின்ற அடிப்படையான பண்பு, அவன் எந்த சூழலிலும் எந்த இடத்திலும் எந்த நிகழ்வுக்கு முன்னாலும் கட்டளைக்கு மாத்திரம் செயற்படுபவனாக இருக்க மாட்டான். உள்ளார்ந்த தூண்டுதலின் அடிப்படையில் அவனாகவே முன்வந்து செயற்படுவான். அதுபோல் ஒரு நன்மையான விடயத்தை செய்வதாக இருப்பினும் தீய விடயம் ஒன்றினை தவிர்ந்து கொள்வதாக இருப்பினும் அவனது சுயதூண்டுதல், சுயகட்டுப்பாட்டின் அடிப்படையிலேயே பெரிதும் தொழிற்படுகின்றவனாக இருப்பான். இதனைத்தான் நாம் தக்வா என்போம்.

ஒரு மனிதனில் இந்தப் பண்பை பயிற்றுவிக்கும் பணியை நோன்பு செய்கிறது. நோன்பின் புறசெயற்பாடுகள் எவ்வாறு காணப்பட்டாலும் அவை அனைத்தின் மூலமும் பிரதானமாக உள்ளத்தைப் பயிற்றுவிக்கின்ற ஒரு பணியே முக்கியமாக நடைபெறுகிறது. அதன் மூலம் மனிதனின் சுயசெயற்பாட்டுக்கான தயார்நிலை அவனில் வளர்க்கப்படுகிறது.

இந்த வசனத்தில் “நீங்கள் தக்வா உடையவர்களாக மாறலாம்” என்று பன்மை வடிவத்தையே அல்குர்ஆன் பிரயோகித்திருக்கிறது. அதன் மூலம் தக்வா என்பது அல்லது சுயசெயற்பாடு என்பது, சமூகப் பொதுப்பண்பாகக் காணப்படல் வேண்டும். இது வெறுமனே ஒரு தனிமனித அடைவல்ல, மாற்றமாக ஒரு சமூக அடைவு. எனவே சமூக வடிவில் அதனை சாத்தியப்படுத்துவதற்கான செயற்றிட்டங்களும் பொறிமுறைகளும் காணப்படல் வேண்டும். நோன்பு அதிலும் குறிப்பாக ரமழான் மாத வாஜிபான நோன்பு, ஒரு சமூகக் கடமை.

உண்மையில் சுயசெயற்பாடு என்ற உன்னதமான சமூகப்பண்பு, சமூகத்திற்கு ஒரு பொறுப்புணர்வை வழங்குகிறது. உண்மையில் பொறுப்புணர்வு என்பதும் கூட, யாரும் முடுக்கிவிடும் வரை எதிர்பார்த்திராமல் அல்லது கோரிக்கைகளோ, விமர்சனங்களோ, எதிர்குரல்களோ எழுவதற்கு முன்னர், சுயமாய் செயலாற்றுதலையே குறிக்கிறது. சமூகத்தில் நன்மைகளை விதைப்பதாக இருக்கலாம், தீமைகளை அகற்றுவதாக இருக்கலாம், ஏன் ஒரு அரசின் பொறுப்பை விசாரிப்பதாகவும் இருக்கலாம், இந்த அனைத்திற்கும் அவசியமானது சமூகப் பொறுப்புணர்வு. இதனை தக்வா வழங்குகிறது.

மொத்தத்தில் இஸ்லாத்தின் மூலம் மனித நலன் நிலைநாட்டப்படுகிறது என்பதற்கு இந்த ஒரு வசனம் மட்டுமே போதுமான சாட்சி.

இறுதியாக இந்த மூன்று பரப்புக்களையும் இணைத்துப் பார்க்கும் பொழுது மற்றொரு விடயம் தெளிவாகிறது. அதாவது, ஒரு செயலின் வெற்றிகரமான அமுலாக்கம் தங்கிநிற்கும் காரணிகள் என்ன? என்ற கேள்விக்கு விடை கிடைக்கிறது. ஒன்று, சாதகமான மனப்பாங்கு பொசிடிவ்வான பார்வை, இரண்டு, செயலின் முக்கியத்துவம் அவசியம் குறித்த அறிவு, மூன்று, செயலின் நோக்கங்கள் பயன்கள் குறித்த தெளிவு. இதனைத்தான் ஈமான், முன்னைய சமூகங்களில் நோன்பு கடமையாக இருந்தமை, தக்வா போன்ற அம்சங்கள் ஊடாக அல்லாஹ் விளங்கப்படுத்துகிறான்.

இவ்வருட ரமழானில் நோன்பை விளைவை உணர்ந்து நோற்பதற்கு அல்லாஹ்தஆலா எம் அனைவருக்கும் தௌபீக் செய்வானாக.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com