தமிழ் සිංහල English
Breaking News

தோளிலே கைபோட்டுக்கொள்ளும் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி.!

சந்தேகமேயில்லை, நாடு இன்னும் இரண்டுபட்டேயிருக்கிறது. தமிழ்த் தரப்பு, யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்காக முள்ளிவாய்க்காலில் நினைவு கூரலைச் செய்கிறது. பலத்த இழுபறிகள், போட்டிகளுக்குப் பிறகு ஒருவாறு ஒரு ஒழுங்குக்கு வந்து, தற்போது முள்ளிவாய்க்காலில் நினைவு கூரலைச் செய்கிறது.

மறுதரப்பான அரசு, யுத்தத்தில் மரணமடைந்த படையினருக்கான நினைவு கூரலை கொழும்பில் செய்யவுள்ளது என இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது (16.05.2018) கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

இங்கும் பிரச்சினைதான். பிரதமர் ரணில் தலைமையிலான ஐ.தே.க வெற்றிவிழாவைக் கொண்டாட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. காரணம், அப்படி யுத்த வெற்றியைக் கொண்டாடினால், அதில் ராஜபக்ஸக்களின் பங்களிப்புகளைப் பற்றிப் பேச வேண்டி வரும். ஆகவே அதைத் தவிர்க்கவே ரணில் தரப்பு விரும்புகிறது என.

ஆனால், ஜனாதிபதி மைத்திரி தரப்பு யுத்தவெற்றி விழாவைக் கொண்டாடவே விரும்புகிறது. யுத்தம் வெற்றியடைந்தபோது ஆட்சியிலிருந்தது சுதந்திரக் கட்சி என்பதுடன், அப்பொழுது பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக மைத்திரிபால சிறிசேனவே இருந்தார் என்பதால், இந்த வெற்றியின் அடையாளத்தைத் தாம் பெறலாம் என இந்தத் தரப்பு சிந்திக்கிறது.

எப்படியோ ஒரே நாள் இரண்டு விதமாக இருவேறு தரப்புகளால் நினைவு கொள்ளப்படுகிறது. இந்த இரண்டு வேறுபாடுகளும் சாதாரணமானவையல்ல.ஒன்று கொல்லப்படுவோரை நினைவு கூருவது. இது பொதுமக்களால் – அதிலும் சிறுபான்மை இனமொன்றினால் மேற்கொள்ளப்படுவது. மற்றது மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான தரப்பினரை நினைவு கூருவது. இதை அரசு செய்கிறது.

ஒரு நாட்டில் இது எப்படியாக இருக்க முடியும்?

இதை இன்னும் நேரடியாகச் சுட்டிச் சொல்வதாக இருந்தால், அரசாங்கம் தனது படையினருக்கான கௌரவித்தலாக இதைச்செய்கிறது.

வடக்கு மாகாணசபையோ, இதை இந்த யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காகச் செய்கிறது. மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இதற்கான தீர்மானத்தின் அரசியல் பெறுமானத்தை இதில் புரிந்து கொள்ளலாம்.

ஆகவே அரசு ஒரு நிலைப்பாட்டிலும் வடக்கு மாகாணசபை வேறொரு நிலைப்பாட்டிலும் நிற்பது தெளிவாகிறது.

இதற்கான தொடக்கம் கடந்த அரசாங்கத்தினாலேயே உருவாக்கப்பட்டது. யுத்தம் முடிந்த கையோடு அதைப்பெரிய வெற்றி விழாவாக, அப்பொழுது ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் கொண்டாடியது. யுத்தவீரர்கள் போற்றப்பட்டார்கள். மகிமைப்படுத்தப்பட்டார்கள். யுத்த நினைவுச் சின்னங்கள் யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களிலும் கொழும்பு போன்ற முக்கிய இடங்களிலும் நிறுவப்பட்டன.

ஆனால், அதே யுத்த வீரர்களை – படையினரை தமிழ் மக்கள் “யுத்தக் குற்றவாளிகள்” என்று குற்றம்சாட்டினார்கள். யுத்தக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இதற்கான சூழலை சர்வதேச சமூகம் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இந்த முரண் நிலை இன்றுவரை தொடர்கிறது. நியாயமான அரசியல் தீர்வு எட்டப்படாத வரை, தொடர்ந்தும் இது நீடிக்கும்போலவே தோன்றுகிறது.

யுத்த முடிவோ, நல்லிணக்க முயற்சிகளோ, நல்லாட்சியோ, சர்வதேச அழுத்தங்களோ, பன்னாடுகளின் அறிவுரைகளோ, எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் தோளிலே கைபோட்டுக்கொள்ளும் உறவோ நாட்டையும் சமூகங்களையும்  ஐக்கியப்படுத்தவில்லை. பதிலாக நாடும் சமூகங்களும் மேலும் மேலும் பிளவுண்டு செல்லும் நிலையில்தான் யதார்த்த நிலைமைகள் உள்ளன.

இதை எப்படிச் சீர்ப்படுத்துவது என்று யாரும் புதிதாக அறிவுரை சொல்ல வேண்டியதில்லை.

ஏனென்றால், நாட்டில் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் உருவாக்க வேண்டும் என்பதைப்பற்றியும் அதற்கான அவசியத்தைப் பற்றியும் அதற்குரிய வழிமுறைகளைப் பற்றியும் பல ஆண்டுகளாகப் பலரும் எழுதியும் பேசியும் விட்டார்கள்.

இனிப் புதிதாகச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

யார்தான் எத்தகைய நல்ல விடயங்களை எடுத்துச் சொன்னாலும் அதிகாரத்திலிருப்போர் – ஆட்சியாளர்கள் – நாட்டுக்குத் தேவையானதைச் செய்யத் தயாரில்லை.

ஏற்கனவே ஆட்சியிலிருந்தோரும் சரி, இனி ஆட்சிக்கு வருவோரும் சரி இப்படித்தான் உள்ளனர். நாட்டை விட, மக்களை விடக் கட்சி நலன், தங்கள் நலன் என்ற வகையில்தான் சிந்திக்கப்படுகிறது.

ஆட்சி அதிகாரத்திலிருப்போர் மட்டுமல்ல, விடுதலைக்காகப் போராடுவோரும்  உரிமை கோரும் அரசியலை நடத்துவோரும் கூட அப்படித்தான், மக்கள் நலனை விட தாம் சார்ந்த நலன் குறித்தே சிந்திக்கிறார்கள்.

ஆகவே மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

அப்படி மாற்றங்கள் நிகழ வேண்டுமாக இருந்தால், அது அதிகாரத்தரப்புக்கு வெளியே ஏற்பட வேண்டும். ஊடகத்துறையில், புத்திஜீவிகளில், சமூக செயற்பாட்டாளர்களில், மத பீடங்களில், பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களில் மாற்றத்தைக் குறித்த சிந்தனையுடன் ஒருங்கிணைந்த வேலைகள் அவசியம். இந்த வேலைகளை நினைப்பதைப்போல எளிதாகச் செய்து விட முடியாது. மிகக் கடுமையான நெருக்கடிகள், சவால்களின் மத்தியிலே, தீவிர முயற்சியின் மூலமே செய்ய முடியும்.

ஆனால், இங்கும் நிலைமை மோசமாகவே உள்ளது. மக்களுக்காகச் செயற்பட வேண்டிய இவையோ ஆட்சியாளர்களுடன் – அதிகாரத்தரப்பினரோடு – கூடிக் குலாவிக் கொண்டிருக்கின்றன. அல்லது “நமக்கேன் வீண் வம்பு?” என்ற மாதிரி “ஏதோ நடப்பவை நடக்கட்டும்” என்ற விதமாகக் கண்ணை மூடிக் கொண்டு விலகியிருக்கின்றன.

இதனால் எத்தகைய கேள்விக்கும் நெருக்கடிக்கும் உள்ளாகாமல் அரசாங்கம் – ஆட்சித்தரப்பு – வலு கூலாகத் தனது வழியில் வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றது.

ஒரு சிறிய மாறுதலாகக் கடந்த ஆண்டுகளில் அரசாங்கத்தின் சுதந்திர தின நிகழ்வு உள்ளிட்ட வைபவங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜவரோதயம் சம்மந்தன், எம்.ஏ.சுமந்திரன் போன்றோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாகத் தமிழ்த் தீவிர நிலைப்பாடுள்ளோரினால் கடுமையாகச் சர்ச்சைகள் உருவாக்கப்பட்டன. இதற்குப் பதிலளிக்கும்போது, “சிங்கள மக்களிடத்திலே நல்லெண்ண சமிக்ஞையை உருவாக்குவதற்காகவே தாம் இதைச் செய்திருந்ததாக சுமந்திரன் குறிப்பிட்டார். இதனால் சுமந்திரன் தமிழ்த்தரப்பினால் படுத்தப்பட்டபாடு சாதாரணமானதல்ல. மிக மோசமாக வறுத்தெடுக்கப்பட்டார்.

இருந்தும் அரசாங்கத்தரப்பிலோ சிங்கள அதிகார வர்க்கத்திடமோ நல்லெண்ண வெளிப்பாடுகள் திருப்தியளிக்கும் வகையில் இன்னும் உருவாகவில்லை. முன்னர் போரிலே இறந்தோரை நினைவு கூருவதற்கே அனுமதிக்கப்படாதிருந்தது. இப்பொழுது அதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு மேல் எதுவும் நிகழவில்லை.

ஆனால், போரிலே இறந்தோருக்கான நினைவு கூரலில் அரசாங்கமும் சிங்களச்சமூகத்தினரும் பங்கேற்கும் ஒரு நிலை உருவாக வேணும். அத்தகைய நிலை உருவாகினால் பாதிக்கப்பட்ட மக்களின் உளநிலையில் மாற்றமும் ஆற்றுப்படுதலும் நிகழும். அது புதிய புரிந்துணர்வுகளை வளர்க்கும்.

இது தனியே நினைவு கூரலில் மட்டும் ஏற்படக்கூடிய ஒன்றல்ல. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளித்தல், அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை மனங்கொண்டு செயற்படுதல், பாரபட்சமில்லாத வளப்பங்கீடு, காணாமல் போனோரைப் பற்றிய தெளிவான – பொறுப்பு மிக்க அறிவிப்புகள், அரசியல் கைதிகளின் விடுதலை, மக்களின் நிலங்களை விடுவித்தல் என யுத்த நெருக்கடிகளிலிருந்து முற்றாகவே மக்களை விடுவிக்க வேண்டும்.
அப்படிச் செய்யும்போது புதிய அரசியற் சூழல் ஒன்றுக்குள் பிரவேசிக்கக் கூடிய மனநிலை மக்களுக்கு ஏற்படும். அப்படிச் செய்யும்போதுதான் நாடு ஒரு முகப்படும். இல்லையென்றால், எப்போதும் அது உள்விரிவுகளால் கூறுபட்டேயிருக்கும்.

இது கூட அளவுக்கதிகமான அறிவுரையே. ஏனென்றால், இவ்வாறான அறிவுரைகளை ஏற்கனவே இந்தப் பத்தியாளர் உள்பட பல நூற்றுக்கணக்கானோர் சொல்லிச் சலித்து விட்டனர். ஆனாலும் வேறு வழியில்லை. சொல்லியே தீர வேணும். மாற்றம் ஏற்பட்டே ஆக வேண்டும்.

அப்படியென்றால், தேவையான மாற்றங்களை எப்படி ஏற்படுத்துவது? இது சவாலான ஒரு கேள்வியே.

இப்பொழுது யாரும் யாருடைய சொல்லையும் கேட்கும் நிலையில் இல்லை. அரசியல் முரண்பாடுகள் மிகக் கடுமையாகக் கூர்மையடைந்திருக்கின்றன. தமிழ்த்தரப்புகளுக்கிடையிலேயே ஏராளம் முரண் அணிகள். ஏராளம் பிரிவுகள். பல வகையான வேறுபாடுகள். அதிலும் தமிழ்த்தேசியவாதச் சக்திகளிடத்திலே இன்னும் கூரான முரண்கள். கடுமையான மோதல்கள்.

இதெல்லாம் எதிர்பார்க்கப்பட்டதே.

யுத்த கால நெருக்கடிகளினாலும் யுத்தத்திற்குத் தலைமை ஏற்ற அரசு – புலிகள் என்ற சக்திகளுக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டியதாலும் அப்பொழுது எல்லாக் குரல்களும் அடங்கியிருந்தன. ஏனைய தரப்புகளுக்கான செயற்பாட்டு வெளிகள் இல்லாதிருந்தன.

இப்போது அத்தகைய நெருக்கீடுகளில்லை.

எனவே இவ்வளவு காலமும் உள்ளடங்கியிருந்த குரல்கள் வெளிக்கிளம்புகின்றன. இதனால் உண்டாகியிருக்கும் இந்தக் கொந்தளிப்பான – முரண்நிலை மெல்ல மெல்ல வடிந்து யதார்த்தமான ஒரு நிலையை எட்டும். ஆனால், அதற்கு இன்னும் கொஞ்சக் கால அவகாசம் வேணும். அறிவார்ந்த சமூகத்தில் இது விரைவில் ஏற்படும். அறிவு நிலை தொய்ந்து, உணர்ச்சிநிலை மேவியிருக்கும் சமூகத்திலும் தேசத்திலும் இந்த மாற்றங்கள் ஏற்படுவதற்குக் காலம் எடுக்கும்.

இந்தக் காலத்தை விரைவு படுத்த வேண்டிய பொறுப்புப் பற்றியே நாம் சிந்திக்க வேண்டும். ஏனெனில் காலம் என்பது நம் வாழ்க்கையின் உயிரிழை. அதை இழக்கும் ஒவ்வொரு கணமும் நமக்கு மீள முடியாத பேரிழப்பே.

அதை எத்தகைய நினைவு கூரலினாலும் ஆற்றுப்படுத்தவோ மீளப்பெறவோ முடியாது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com