தமிழ் සිංහල English
Breaking News

கிளிநொச்சி பாடசாலைகள் அபிவிருத்திக்கு 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்..!

தென்கொரியாவின் கொய்கா அபிவிருத்தி செயற்திட்டத்தின் மூலம் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில் கிளிநொச்சி மாவட்டத்தின் 13 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தென்கொரியாவின் கொய்கா சர்வதேச அபிவிருத்தி செயற்திட்டத்தின் மூலம் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை கல்வி அமைச்சிற்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது.

இதற்கான கைசாத்து நேற்றைய தினம் கல்வி அமைச்சில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் முன்னிலையில் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சிக்கும், தென்கொரியாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி வீடொங்கூ தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஏ.எம்.பி ரத்நாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள், பணிப்பாளர்கள் உட்பட தென்கொரிய நாட்டின் கொய்கா நிறுவன அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சி திட்டத்தின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதன்படி பளை, கண்டாவளை, கரைச்சி, பூநகரி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த கிளிநொச்சி இந்து ஆரம்ப பாடசாலை, பிரமந்தநாறு மகா வித்தியாலயம், இயக்கச்சி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, முழங்காவில் ஆரம்ப வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளும் மாதிரி பாடசாலைகளாகவும்,

சென்.தெரேசா பெண்கள் கல்லூரி, கனகாம்பிகை குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை¸ சிவபாத கலையகம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, இராமநாதபுரம் (கிழக்கு) அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, பளை இந்து ஆரம்ப பாடசாலை, சோரன்பட்டு இலங்கை கிறிஸ்தவ தமிழ் கலவன் பாடசாலை, முக்கம்பன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை,

கரையாலை நாகபடுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, இரணைதீவு ரோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலை ஆகிய ஒன்பது பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இந்த அபிவிருத்தியில் பாடசாலை கட்டிடங்கள், விசேட தேவை உடையோருக்கான வகுப்பு உபகரணங்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், கல்வி பணிப்பாளர்கள் ஆகியோருக்கான வெளிநாட்டு உள்நாட்டு பயிற்சிகள், மாணர்களுக்காள தொழில் வழிகாட்டல், கணணி தொழில்நுட்பம் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இந்த திட்டத்திற்கு கல்வி இயல் அளவை மேம்படுத்தும் செயற்திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com