தமிழ் සිංහල English
Breaking News

வடக்கிலுள்ள பிரச்சினை அடுத்த தலைமுறைக்கு தொடரக்கூடாது-ரெஜினோல்ட் குரே!

வடக்கு மாகாணத்தில் தொடரும் வறட்சியால் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும், இப்பிரச்சினை அடுத்த தலைமுறைக்கும் தொடரக்கூடாதென்றும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வறட்சியை நிவர்த்திசெய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், அதன் பிரகாரம் மரநடுகை மாதத்தில் யாழ்ப்பாணத்தில் நான்காயிரம் மரக்கன்றுகளை நடவுள்ளதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜுன் மாதம் 5ஆம் திகதி மரநடுகை மாதம் ஆரம்பமாகவுள்ளது. அது தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு ஆளுநர் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற போது அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

அரசாங்கமும், ஆளுநர் அலுவலகமும், வடக்கு மாகாண சபையும், யாழ்.மாநகர சபையும் இணைந்து முன்னெடுக்கவுள்ள இந்த வேலைத்திட்டத்தில், வறட்சி பிரதேசங்களை கவனத்திற்கொண்டு தெங்கு, தேக்கு, மாமரம், நெல்லிமரம், ஜம்பு நாவல், சவுக்கு, சுந்தர வேம்பு, பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகளை நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் விளக்கமளித்தார்.

குறிப்பாக யாழ். பண்ணை கடற்கரை வீதி, காரைநகர், கொழும்புத்துறை, சென்.பற்றிக்ஸ் வீதி மற்றும் யாழ். கடற்கரை வீதி ஆகிய பகுதிகளில் மரங்களை நடவுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

மரங்களுக்கான உரம் இடும் நடவடிக்கைகளை யாழ்.மாநகர சபை மற்றும் பாடசாலைகள் முன்னெடுக்க வேண்டும் என்றும், நகரத்தினை பச்சை நிற தோற்றமுடையதாக மாற்றமுடியுமென்ற நம்பிக்கை உள்ளதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

இந்த இலக்கினை வெற்றியடையச் செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென குறிப்பிட்ட வடக்கு ஆளுநர், அதனூடாக வடக்கு மாகாணத்தை பசுமையாக மாற்றியமைக்க முடியுமென நம்பிக்கை வெளியிட்டார்.

இப்பத்திரிகையாளர் சந்திப்பில், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன், யாழ்.மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com