தமிழ் සිංහල English
Breaking News

தேர்தலின் முடிவுகள்:பா.ஜ.க. 111 தொகுதிகளில் வெற்றி..!

கர்நாடகா சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் பா.ஜ.க. 111 தொகுதிகளில் வெற்றி பெற்று தனித்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மையை பெற்றுள்ளது.

தேர்தல் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் எண்ணப்பட்டு வந்த நிலையில், ஆரம்பத்தில் முன்னிலையில் நின்ற காங்கிரஸை பின்தள்ளி பா.ஜ.க. முன்னிலை வகித்துள்ளது.

காங்கிரஸ் 71 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாவது நிலையிலும், ம.ஜ.த.கட்சி 38 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது நிலையிலும் உள்ளன.

தேர்தலுக்கு முன்னதான கருத்து கணிப்புக்களின் பிரகாரம், பா.ஜ.க. அல்லது காங்கிஸ் முதன்மை வகிக்குமென்றும், எது முன்னிலை வகித்தாலும் தொங்கு நிலையிலான முடிவே அமையப்பெறும் என்றும் கருதப்பட்டது.

இவ்வாறு தொங்கு நிலையிலான சட்டசபை அமையுமிடத்து, ம.ஜ.த.கட்சியின் ஆதரவை நாடவேண்டியேற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எனினும் கருத்துக்கணிப்புக்களையும் மீறி பா.ஜ.க. அதீத வாக்குகள் வித்தியாசத்திலும், பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றியும் தனித்து ஆட்சியமைக்கும் தகுதியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கர்நாடகா தேர்தல்: வெற்றியை உறுதிபடுத்தியது பா.ஜ.க.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் 222 தொகுதிகளுக்குமான வாக்கெண்ணும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 121 தொகுதிகளில் முன்னிலைப்பெற்றுள்ள பா.ஜ.க. கர்நாடகாவில் ஆட்சியை உறுதிபடுத்தியுள்ளது.

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகியன இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இரு கட்சிகளும் மாறிமாறி முன்னிலை பெற்று வந்தன. இதனால், அங்கு தொங்கு சட்டசபையே உருவாகும் என அரசியல் ஆர்வலர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

கர்நாடகாவில் ஆட்சியமைப்பதற்கு 112 பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில், அதனை தாண்டி 120 இடங்களில் பா.ஜ.க. முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 57 தொகுதிகளிலும், ஜனதா தளம் 43 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. இதனால், பா.ஜ.க.-வின் ஆட்சி உறுதியாகியுள்ளது.

அதன்படி, பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

கர்நாடகா தேர்தல்: கேள்விக்குறியாகும் பா.ஜ.க.-வின் வெற்றி

கர்நாடகா சட்டசபை தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி வருகின்ற நிலையில், பா.ஜ.க.-வே முன்னிலையில் திகழ்கின்ற போதிலும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது சாத்தியமற்றது என கணிக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மையை நிரூபிக்க 112 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயமுள்ளது. ஆனால் இதுவரை 214 தொகுதிகளுக்கான வாக்கெண்ணும் பணிகள் பூர்த்தியாகியுள்ளன.

இதுவரை முடிவுகளின் பிரகாரம் பா.ஜ.க. 89 தொகுதிகளிலும், காங்கிரஸ் 83 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இன்னும் எட்டு தொகுதிகளுக்கான வாக்கெண்ணும் பணிகளே எஞ்சியுள்ள நிலையில், அவை அனைத்திலும் பா.ஜ.க. வெற்றி பெற்றாலும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது என்பது சாத்தியப்படாது.

எனவே கர்நாடகாவில் தொங்கு சட்டசபையே உருவாகும் என்பதனை தீர்மானமாகக் குறிப்பிடக்கூடியதாக உள்ளது.

தேசிய கட்சிகளை எதிர்த்து போட்டியிட்டுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், கர்நாடகாவின் ஆட்சியை தீர்மானிக்கப்போகும் ஆயுதமாக ஜனதா தளம் விளங்கப் போகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கர்நாடகா தேர்தல் முடிவுகள்: காங்கிரஸை பின்தள்ளியது பா.ஜ.க.

வாக்கெண்ணும் பணிகள் மிகவும் விறுவிறுப்பான முறையில் இடம்பெற்றுவரும் நிலையில், இதுவரை முன்னிலையில் திகழ்ந்த காங்கிரஸை பா.ஜ.க. பின்தள்ளியுள்ளது.

தேர்தல் நடைபெற்ற 222 தொகுதிகளில் இதுவரை 211 தொகுதிகளுக்கான வாக்கெண்ணும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பா.ஜ.க. 88 தொகுதிகளிலும், காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

தேர்தல் முடிவுகள் நொடிக்கு நொடி இவ்வாறு மாறி வருகின்ற நிலையில், கர்நாடகாவின் அரியாசனம் யாருக்கு என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது.

முதலமைச்சர் வேட்பாளர் சித்தாராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தொடருமா அல்லது தெற்கு மாநிலத்தை பா.ஜ.க. மீண்டும் கைப்பற்றுமா அல்லது தொங்கு சட்டசபை உருவாகுமா போன்ற கேள்விகளுக்கு இன்னும் சில மணி நேரங்களில் விடை கிட்டும்.

கர்நாடகா தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் முன்னிலையில்

கர்நாடகா சட்டசபை தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.

இதுவரையிலான முடிவுகளின் பிரகாரம் காங்கிரஸ் 71 இடங்களையும், பாரதிய ஜனதா கட்சி 70 இடங்களையும், மத சார்பற்ற ஜனதா தள கட்சி 32 இடங்களையும்  கைப்பற்றியுள்ளன.

இரண்டு தேசிய கட்சிகளும் ஒரு வாக்கு வீத வித்தியாசத்தில் உள்ளமையானது  கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர ஏனைய 222 இடங்களுக்கும், கடந்த 12 ஆம் திகதி தேர்தல் இடம்பெற்றது.

இம்முறை தேர்தலில் 72.36 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், வாக்கெண்ணும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com