தமிழ் සිංහල English
Breaking News

மட்டக்களப்பு மாநகரசபையினை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைவோம்- தி.சரவணபவன்!

இன, மத மற்றும் கட்சி பேதங்களுக்கு அப்பால் மட்டக்களப்பு மாநகரசபையினை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) காலை மட்டக்களப்பு மாநகரசபையின் முதலாவது அமர்வு முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் ஆரம்பமானது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று இடம்பெற்ற சபை அமர்வில் மட்டக்களப்பு மாநகரசபைக்கு தெரிவுசெய்யப்பட்ட 38 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது, மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகளை சிறந்த முறையில் முன்னெடுப்பது தொடர்பில் கல்வி, சுகாதாரம், காணி,விளையாட்டு,கலை, கலாசாரம், அபிவிருத்தி உட்பட எட்டு மாநகர கட்டளை நியதிக்குழுக்கள் அமைக்கப்பட்டன.

தலா ஆறு உறுப்பினர்களைக் கொண்டதாக அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்புடன் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட 2018ஆம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாநகரசபைக்காக உருவாக்கப்பட்டுள்ள பாதீடுகள் சபையில் முன்வைக்கப்பட்டது.

குறித்த பாதீடுகள் தொடர்பில் பல்வேறு கருத்துகள் உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டன. பின்னர் பாதீட்டில் ஏதாவது இணைப்பதாக இருந்தால் குறை நிரப்பு பிரேரணை மூலம் சபையின் ஏகோபித்த தீர்மானங்கள் மூலம் சேர்க்கமுடியும் எனவும், உருவாக்கப்பட்டுள்ள பாதீட்டில் ஏதாவது மாற்றத்தினை சபையின் அனுமதியுடன் எதிர்காலத்தில் செய்யமுடியும் எனவும் சபை முதல்வரினால் தெரிவிக்கப்பட்டதுடன் சபை அமர்வுகள் நிறைவுக்கு வந்தன.

மட்டக்களப்பு மாநகரசபையின் இன்றைய அமர்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com