தமிழ் සිංහල English
Breaking News

செய்தித்தாள் கண்ணோட்டத்தில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டமை.!

வை எல் எஸ் ஹமீட்

வசந்தம் தொலைக்காட்சியின் மேற்படி நிகழ்ச்சியில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டதைவைத்து “ஆடு கொழுத்தால் இடையனுக்கு வாசி” என்பதுபோல் ஒரு படுவேகமான எதிரும் புதிருமான அரசியல் நடந்துகொண்டிருக்கின்றது. இதில் யாரும் ஊடகவியலாளர்மீது அல்லது ஊடகத்துறைமீது கொண்ட அபிமானத்தினாலோ அல்லது அக்கறையினாலோ கருத்துக் கூறுவதாகத் தெரியவில்லை.

கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தம்அரசியல் வேக்காட்டை இதில் ஓர் கைபார்த்துவிட வேண்டும்; என்ற முனைப்பு நன்றாகத் தெரிகிறது. சிலர் இதனை ஊர்வாதமாக மாற்றி அரசியல் பழிவாங்கல் செய்யமுற்படுவது இன்னும் கொடூரமானது.

கருத்துச் சுதந்திரம்
————————-
மனித உரிமைகள், அவற்றிற்குட்பட்ட அடிப்படை உரிமைகள் எல்லாம் முழுமையான உரிமைகள் அல்ல. சில உரிமைகள் முழுமையானவை ( absolute rights), சில உரிமைமைகள் கட்டுப்பாட்டிற்குட்பட்டவை. ( subject to limitations).

உதாரணமாக ஒருவர் தாம் விரும்பிய மதத்தைப் பின்பற்றுவது ஒருவரின் முழுமையான உரிமை. யாரும் தலையிட முடியாது. அந்த மதத்தைப் பிரச்சாரம் செய்வது முழுமையான உரிமையல்ல. கட்டுப்படுத்தக் கூடியது. அதேபோன்றுதான் கருத்துச் சுதந்திரமும் கட்டுப்படுத்தக் கூடியது. முழுமையானது அல்ல.

கருத்துக்கூறும் தளம்
—————————
ஒரு ஊடகவியலாளனுக்கு தனது கருத்தை வெளிப்படுத்துகின்ற உரிமையை யாரும் மறுக்க முடியாது. அதில் அரசியல் விமர்சனமும் உள்ளடங்குகிறது. ஆனால் அந்தக் கருத்து வெளியிடப்படுகின்ற “தளம்” எது என்பது மிகவும் முக்கியமானது.

உதாரணமாக, ஒரு பத்திரிகையில் ஒரு ஊடகவியலாளன் ஒரு அரசியல்வாதிக்கெதிராக ஓர் விமர்சனக் கருத்தை தாராளமாக முன்வைக்கலாம். ( பொய்யாக, அவமானப்படுத்துவதாக இல்லாதவரை). அதற்கு மாற்றுக்கருத்தை பாதிக்கப்பட்டவரோ, இன்னுமொரு ஊடகவியலாளனோ அல்லது சாதாரணமான ஒருவரோ முன்வைக்கலாம். அங்கு சமசந்தர்ப்பமும் பதிலளிக்கும் உரிமையும் அடுத்த தரப்பினருக்கு இருக்கின்றது. பத்திரிகை போன்ற ஊடகங்கள் அதற்காகத்தான் இருக்கின்றன. அதுதான் அவற்றின் நோக்கமாகும்.

செய்தித்தாள் கண்ணோட்டம்
—————————————-
இந்நிகழ்ச்சி என்ன பெயரில் அழைக்கப்பட்டாலும் இதன் நோக்கம் அன்றைய தினசரிகளில் வருகின்ற பிரதான செய்திகளின் சாரம்சத்தை மக்கள்முன் கொண்டுவருவது. ஏனெனில் எல்லோரும் பத்திரிகைகள் வாங்குவதில்லை. வாங்குகின்றவர்களும் எல்லாப் பத்திரிகைகளும் வாங்குவதில்லை. இதற்கு மேலதிகமாக அந்நிகழ்சியை நடாத்துகின்ற அறிவிப்பாளர் அச்செய்திகளைத்தொட்டு விமர்சனம் செய்யலாமா? ஊடகவியலாளனுக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது; எனவே அவர் விமர்சனம் செய்யலாம் என்பது இங்கு பொருந்துமா?

இலங்கையில் ஐந்து மில்லியனுக்கு மேற்பட்ட தமிழ்பேசும் மக்கள் இருக்கின்றார்கள். குறித்த நிகழ்ச்சி ஒரு பிரபலமான நிகழ்ச்சி. ஒரு மில்லியனோ அல்லது அரை மில்லியன் மக்களோ தினசரி அந்நிகழ்ச்சியைப் பார்க்கலாம். அவ்வாறான நிகழ்ச்சியில் ஒரு அரசியல் ரீதியான விமர்சனம்; சரியா? பிழையா?, உண்மையா? பொய்யா?, அவமானப்படுத்தக்கூடியதா? இல்லையா? என்ற கேள்விகளுக்கப்பால் செய்யப்பட முடியுமா? என்ற கேள்வி முக்கியமானது.

மேலே குறிப்பிட்டதுபோல், ஒரு பத்திரிகையில் செய்யப்படுகின்ற விமர்சனத்திற்கு அதே பத்திரிகையில் பதில் வழங்க இடமிருப்பதால் கருத்துச் சுதந்திரத்தின் சமத்துவம் பேணப்படுகின்றது. ஆனால் குறித்த நிகழ்ச்சியில் செய்யப்படுகின்ற ஓர் விமர்சனத்திற்கு பதில் வழங்க அடுத்தநாள் அதே நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டவருக்கோ, அவரது சார்பில் இன்னொருவருக்கோ அல்லது இன்னொரு ஊடகவியலாளருக்கோ சந்தர்ப்பம் வழங்கப்படுமா?

வைக்கப்படுகின்ற விமர்சனத்திற்கு பதில்வழங்க அதேவிதமான சந்தர்ப்பம் வழங்கப்படும்போது அங்கு செய்யப்படுகின்ற விமர்சனம் இன்னுமொருவரின் உரிமையைப் பாதிக்கின்றது.

ஒரு உரிமை கடமை இல்லாமல் வருமானால் அது முழுமையான உரிமை. ( absolute right). முழுமையற்ற உரிமையெல்லாம் கடைமையுடன்தான் வருகின்றது. அதனால்தான் அவை முழுமையானதல்ல. கட்டுப்பாடுகளுடன் கூடியது.

எனவே, குறித்த நிகழ்சியில் ஒருதலைப்பட்சமாக கிடைக்கின்ற சந்தர்ப்பத்தைப் பாவித்து அச்சத்தர்ப்பம் இல்லாத ஒருவரின் உரிமையில் கைவைத்துவிட முடியாது.

அவ்வாறாயின் பத்திரிகையாளர் மாநாடு மூலமோ அல்லது வேறுவழிகளிலோ அவற்றிற்கு பதில் வழங்க முடியும்தானே, என்ற கூற்றுத்தொடர்பாக, முதலாவது பத்திரிகையில் பதிலளிப்பது என்பது குறித்த நிகழ்ச்சியினால் ஏற்படும் தாக்கத்திற்கு சமாந்தர பதிலீடாகாது.

நிர்வாகம் அனுமதித்தாலும் அனுமதிக்காவிட்டாலும் அங்கு செய்யப்படும் விமர்சனம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. இந்த நிகழ்ச்சியை இதற்கு முன்பு நடத்திய ஒருவரின் பொறுப்பற்ற விமர்சனத்தால் அன்று பாதிக்கப்பட்டவன் நான். அதன் வலியைப் புரிந்தவன்.

எனவே, நமது உரிமை என்ன, கடமை என்ன, என்பதைப் புரிந்து நடப்போம். எல்லா உரிமைகளையும் எல்லா இடங்களிலும் அனுபவிக்க முடியாது. இதனை வைத்து வக்கிர அரசியல் செய்வதன்மூலம் நாம் இன்னும் இருட்டில் தடவுகின்ற ஓர் சமூகமாக நடப்பதைத் தவிர்த்துகொள்வோம்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com