தமிழ் සිංහල English
Breaking News

முல்லைத்தீவில் சிங்களக்குடியேற்றம்:இந்தியா அரசுக்கு வலியுறுத்தல்!

“முல்லைத்தீவில் தற்போது நடைபெறுகின்ற சிங்களக்குடியேற்றம் ஆனது சட்டங்களை மீறுவதாக அமைக்கின்றது. இந்தியா அரசு இதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டிய தேவை உள்ளது” என வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை உறுப்பினர்கள் நேற்று (10) முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சிங்கள குடியேற்றங்கள் உள்ளிட்ட மக்களது வாழ்வியல் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய கள விஜயம் ஒன்றை மேற்கொண்டதோடு, மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான  மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடமாகாண கல்வி அமைச்சர்,

“முல்லைத்தீவு மாவட்டத்தில் போரின் பின்னர் அதிகரித்து வரும் சிங்கள குடியேற்றங்கள் பௌத்த விகாரைகளை உருவாக்குதல் போன்ற விடயங்களை நேரில் பார்வையிட்டுள்ளோம்.

சிங்கள குடியேற்றங்கள் என்பது 30 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கு கிழக்கு இணைப்பின் தொடர்ச்சியை பிரிப்பதுக்காக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் இடையில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்கின்ற தமது கோரிக்கையை தடுத்து நிறுத்துகின்ற செயற்பாடாக தொடர்சியாக நடைபெற்று வருகின்றது. இது ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் மணலாறு உட்பட்ட பிரதேசத்தை அண்டி பெருமளவான இடங்கள் குடியேற்றங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் போர் காரணமாக அவற்றை செயற்படுத்த முடியாத நிலையில் இன்று அவற்றை வேகப்படுத்தியுள்ளார்கள்.

இன்று புதிய புதிய இடங்களில் பௌத்த விகாரைகள், சிங்கள குடியேற்றங்கள், பாடசாலைகளை நிறுவி அவற்றை சேர்த்து மிகப்பெரிய சிங்கள பிரதேசமாக வெலிஓயாவை அமைத்துள்ளார்கள். இது முல்லைத்தீவுக்கான பாதையினை விழுங்கும் செயற்பாடாக அமைந்துள்ளது.

இந்த நில ஆக்கிரமிப்புக்கு முப்படையினரை நிலைநிறுத்தி இருப்பது என்பது இந்த ஆக்கிரமிப்பு செயற்பாட்டை பாதுகாக்கும் நோக்கில் அமைந்துள்ளது.

மணலாறு என்பது வெலிஓயாவாக மாற்றப்பட்டது. வவனியாவில் பல தமிழ் கிராமங்கள் சிங்கள பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் மிகத்தெளிவாக கூறப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ்மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

13 ஆவது திருத்தச்சட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலம் தொடர்பில் பயனாளிகளை தெரிவு செய்கின்ற உரிமை மாகாணத்துக்கு உரியது என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

இன்று நடைபெறுகின்ற சிங்களக்குடியேற்றம் ஆனது சட்டங்களை மீறுவதாக அமைக்கின்றது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது.

ஐ.நா பேரவையில் நிலம் தொடர்பிலான தீர்மானத்தை மீறுவதாக இருக்கின்றது. 13 ஆவது திருத்த சட்டத்தை மீறுவதாக இருக்கின்றது. பௌத்த கோவில்களும் சிங்கள குடியேற்றங்களும், சர்வதேச சட்டம் உள்ளிட்ட இலங்கையின் சட்டங்களை மீறும் நடவடிக்கையாக அமைந்துள்ளது. இந்த விடயத்தில் மாகாணசபை தெளிவான தீர்மானத்தை உருவாக்கி ஐ.நா சபைக்கு இதனை எடுத்து செல்லவேண்டும். இலங்கையின் நீதிமன்றத்துக்கு எடுத்து செல்ல வேண்டும். இந்தியா அரசு இதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டிய தேவை உள்ளது” என தெரிவித்தார்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com