தமிழ் සිංහල English
Breaking News

பாதுகாப்பைப் பலப்படுத்தினால் வருகை அதிகரிக்கும்-சிவன்ஜோதி !

நுவரெலியாவின் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, அப்பகுதியின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் பட்சத்தில், கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்களை மறந்து, உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக, சட்டத்தரணியும் நுவரெலியா மாநகரசபை உறுப்பினருமான சிவன்ஜோதி யோகராஜன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் ஆரம்பமாகியுள்ள வசந்தகால நிகழ்வுகள் தொடர்பில், ஊடகங்களுக்கு அவர் இன்று (10) கருத்துத் தெரிவிக்கும்போதே, இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நுவரெலியா மாநகரத்தின் எதிர்கால அபிவிருத்திக்கென நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு, வசந்தகால நிகழ்வுகளைக் கண்டுகளிக்க வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகையும் முக்கியத்துவமாக அமைகின்றது எனத் தெரிவித்த அவர், உல்லாசப் பயணிகள் வருகை தந்து, நிம்மதியாகவும் உல்லாசமாகவும் தமது பொழுதை கழிக்க, பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளில், நுவரெலியா மாநகர சபை கவனத்திற்கொண்டு செயற்பட்டு வருகின்றது எனவும் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில், நகரில் இடம்பெற்ற கொள்ளைகள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கசப்பான சம்பவங்களால், இவர்களின் வருகையில் சற்று வீழ்ச்சியை ஏற்படுத்தியது எனக் குறிப்பிட்ட அவர், இதற்கமைவாக நகரத்தின் பாதுகாப்பு பலமடங்காக உயர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் இரண்டு தினங்களில், நாட்டின் பல பாகங்களிலும் இருந்து இலட்சக் கணக்கானோர், வசந்தகால நிகழ்வுகளைக் கண்டுகளிக்க வருவதோடு, உள்ளூரில் உள்ளவர்களும் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாட, பொருட்களைக் கொள்வனவு செய்ய வருவார்கள் எனத் தெரிவித்த அவர், இதில் அதிகப்படியாக, நுவரெலியா பிரதேச தோட்டத் தொழிலாளர்களும் கிராமவாசிகளும் அடங்குவார்கள் என்றும், இவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஆகையால், இது தொடர்பில் மாநகர சபையின் உறுப்பினர் என்ற வகையில், நகரின் பாதுகாப்பையும் நகருக்கு வருகை தருபவர்களின் பாதுகாப்பையும் மாநகர சபையினூடாக உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பதோடு, நகரின் வர்த்தகர்கள், வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், நகருக்கு வருகைதரும் பொதுமக்களுக்கு, அவர்கள் நுகரக்கூடிய அனைத்துப் பொருட்களையும் தரமானதாக வழங்க, சம்பந்தப்பட்ட திணைக்களத்துடன் தொடர்புகொண்டு, நடவடிக்கை எடுக்க, மாநகரசபையின் பொதுச் சுகாதாரப் பிரிவு ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

அதேபோன்று, வசந்தகால நிகழ்வுகளை கண்டுகளிக்க வருகைதரும் தூரப் பிரதேசவாசிகளுக்கான போக்குவரத்தைச் சீராக்கும் நடவடிக்கைகளை, மாநகரசபையின் ஊடாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com