தமிழ் සිංහල English
Breaking News

விரைவில் ஜனாதிபதிக்கெதிராக ஒரு குற்றப்பிரேரணை .!

வை எல் எஸ் ஹமீட்

1. நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தொடர்ந்து மீண்டும் அமைச்சரவை மாற்றம் இடம்பெற இருக்கின்றது. சமூகத்திற்கு எந்த அபிவிருத்தியும் செய்ய முடியாத, அதேநேரம் ஊழல் அமைச்சு என்று முழு நாட்டிலும் விமர்சிக்கப்படுகின்ற அந்த அமைச்சு கைவிடப்பட்டு ஒரு அபிவிருத்திசெய்யக்கூடிய அமைச்சு பெறப்படுமா? இல்லை இதே அமைச்சுதான் தொடருமா?

கடந்த தேர்தலில் குறிப்பாக கிழக்கில் குறித்த அமைச்சரின் பிரச்சார கருப்பொருள் அடுத்த கட்சி பல ஆண்டுகளாக அபிவிருத்தி எதுவும் செய்யவில்லை; என்பதாகும். அதேநேரம் குறித்த அமைச்சரும் இதுவரை எதுவித அபிவிருத்தியும் செய்யவில்லை. எதிர்காலத்திலாவது அபிவிருத்திகள் செய்வதற்கு தன்னிடம் அவ்வாறான ஒரு அமைச்சு இல்லாத நிலையில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் அவ்வாறான ஒரு அமைச்சைப்பெற முயற்சிக்காமல் பலத்த போராட்டத்திற்கு மத்தியில் அதே அமைச்சே தொடரப்பட்டது. ( அதற்காக செய்த முயற்சிகள் விலாவாரியாக தகவல் இருக்கின்றன)

இன்று இந்த அமைச்சின் காரணமாக, முஸ்லிம் சமூகமே ஒரு ஊழல் சமூகம்போன்று பேரினவாதத்தினால் பார்க்கப்படுகின்றது. அதேநேரம், ஒருவருடத்திற்கு இந்நாட்டில் இரண்டு லட்சம் கோடிக்குமேல் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படுகின்றது. அவை சரியாக செலவு செய்யப்படுகின்றதா? என்பதை ஆய்வுசெய்கின்ற பாராளுமன்றத்தினால் சுயாதீனம் பேணப்படுகின்ற ஒரே அதிகாரியான கணக்காய்வாளர் நாயகம் குறித்த அமைச்சில் பாரிய ஊழல் நடைபெற்றிருக்கின்றது; என வெளிப்படையாகத் தெரிவித்திருந்தும் அரசு இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதை கணக்காய்வாளர் நாயகமே பகிரங்கமாக சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்குக் காரணம் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பலம்; என்பதாகும்.

மறுபுறம் குறித்த அமைச்சர் தன் கரங்கள் சுத்தமானவை. பச்சைத் தண்ணீரும் ஹலாலாகத்தான் குடிப்பேன்; எனக் கூறிவருகின்றார். அவ்வாறாயின் ஒரு விசாரணை நடாத்தப்பட்டு இந்த அமைச்சில் கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டதுபோல் எந்த ஊழலும் நடைபெறவில்லை; என்று ஏன் நிரூபிக்கப்பட முடியாது? என்று தெரியவில்லை.

பாராளுமன்றத்தின் கீழ் நேரடியாக செயற்படுகின்ற உயர் அதிகாரியான கணக்காய்வாளர் நாயகத்தின் கூற்றைத்தான் நாட்டுமக்கள் நம்புவார்கள். எனவே அவ்வாறான ஒரு விசாரணையை வைத்து இது பச்சத்தண்ணியும் ஹலாலாய்க் குடிக்கின்ற ஒரு அமைச்சரின்கீழ் இயங்கும் அமைச்சு என நிரூபித்துவிட்டால் முஸ்லிம்கள் மீதுள்ள களங்கமும் துடைக்கப்பட்டுவிடும்.

சீனிக்குள் வைத்து போதைப்பொருள் கடத்தப்பட்ட விடயத்தில் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனி அரச நிறுவனமான ச தொ ச வினால் ஏன் கொள்வனவு செய்யப்பட்டது? என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை. அந்த விசாரணைக்கு என்ன நடந்தது? என்றும் இதுவரை தெரியாது?

இந்நிலையில் மக்களுக்காகவும் அபிவிருத்தி செய்யமுடியாத, தானும் எதுவும் ( ஊழல் செய்து) சம்பாதிக்காத அந்த அமைச்சை ஏன் இன்னும் கட்டிப்பிடித்திருக்க வேண்டும்.

எனவே, குறித்த அமைச்சை கைவிட்டு அபிவிருத்தி செய்யக்கூடிய அமைச்சொன்றைப் பெறுவதன்மூலம் தன்மீதும் தன் சமூகத்தின்மீதும் ஏற்படுள்ள களங்கத்தைப்போக்க முற்படுவதோடு, அபிவிருத்திகள் செய்து கடந்த தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற குறித்த அமைச்சர் முன்வர வேண்டும். இதற்குரிய அழுத்தத்தை சமூகமும் வழங்கவேண்டும்.

இம்முறையும் அதே அமைச்சு மீண்டும் பெறப்படுமானால் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் அவர் ஏற்றுக்கொள்வதாகிவிடும். அடியாட்களை வைத்து தான் சுத்தம் என எழுதுவதால் எதுவும் சுத்தமாகிவிடாது.

2. ஜனாதிபதிக்கெதிராக ஒரு குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட இருப்பதாக சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது எவ்வளவுதூரம் சாத்தியமோ தெரியாது. அதே நேரம் JVP ஜனாதிபதி முறைமையை ஒழிக்க பிரேரணை கொண்டுவருகிறது.

இதற்கு ஐ தே கட்சியும் மஹிந்த தரப்பும் ஆதரவளிக்க வாய்ப்பிருக்கிறது. இது நடந்தால் அப்போது நாம் கண்விழிக்காமல் இப்போதே சமூகத்திற்கு மத்தியில் இதன் சாதக பாதகம் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com