தமிழ் සිංහල English
Breaking News

நாட்டின் சகல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்திய , தற்போதைய அரசியல் நெருக்கடி.!

நாட்டின் சகல துறைகளிலும் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதற்கு சகல மதங்களின் தலைவர்களும் சமூகத் தலைவர்களும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மூத்த பிரஜைகளும் தலையீடுசெய்ய முன்வரவேண்டும் என்று இலங்கையின் பிரபலமான அரசியல் விஞ்ஞானி பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இன்று மாலை கொழும்பு புதிய நகரமண்டபத்தில் மாதுளுவாவே சோபித தேரோ நினைவுப்பேருரையை நிகழ்த்திய பேராசிரியர் அத்தகைய தலையீட்டினால்  மாத்திரமே நாட்டை இன்றைய சகதிக்குள் இருந்து மீட்டெடுக்கமுடியும் என்றும் குறிப்பிட்டார்.

” சகல குழுக்களினதும் ‘ தார்மீகத் தலையீடு ‘ ஒன்றே இன்றைய தருணத்தில் எமக்குத் தேவை. தற்போதைய நெருக்கடிக்கு அரசியல் கட்சிகளினாலும் குழுக்களினாலும் மாத்திரம் தீர்வைக் கண்டுவிட முடியாது.வண.மாதுளுவாவே சோபித தேரோ தார்மீகத் தலையீடுகளைச் செய்யக்கூடியதாக இருந்த சிவில் சமூக இயக்கமொன்றின் செயற்பாடுகளுக்காக தன்னை அர்ப்பணித்திருந்தார். அதேபோன்ற அணுகுமுறையே இன்று – முன்னென்றும் இல்லாத வகையிலான அரசியல் நெருக்கடிக்குள் முழு நாடுமே அகப்பட்டிருக்கும் ஒரு நேரத்தில் எமக்குத் தேவைப்படுகிறது.

அத்தகைய அணுகுமுறை இல்லாத பட்சத்தில் இன்றைய நெருக்கடி பெரும் இரத்தக்களரியாக மாறக்கூடிய பேராபத்து இருக்கிறது. எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையே கடுமையான மோதல் ஒன்று ஏற்படும் என்றே எனக்குத் தெரிகிறது. இணக்கத்தீர்வு ஒன்று இல்லாத பட்சத்தில் தற்போதைய நெருக்கடி வன்முறைகளில் போய் முடியலாம்” என்று அவர் எச்சரிக்கை செய்தார்.

பாராளுமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையிலான பலப்பரீட்சை பரந்தளவிலான பாதக விளைவுகளைக் கொண்டுவரக் கூடும். சகலரும் ஒன்றிணைந்து நெருக்கடியைக் கட்டுப்படுத்த உதவவேண்டியது எமது பொறுப்பாகும் என்றும் உயன்கொட வலியுறுத்தினார்.

அதேவேளை அந்த நிகழ்வில் உரையாற்றிய பேராசிரியர் சரத் விஜேசூரிய ” சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்காகவும் போராடிய வண.மாதுளுவாவே சோபித தேரோ இன்று உயிருடன் இருந்திருந்தால்  தான் ஆதரித்துப் பிரசாரம் செய்த பொதுவேட்பாளரின் நடத்தையைக்கண்டு  பெரும் விரக்தியடைந்திருப்பார்” என்று குறிப்பிட்டார்.

தனது ஆலோசகராக சிறிலால்  லக்திலகவை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த தினத்தில் அவரின் அநாகரிகமான நடத்தையின் முதல்  அறிகுறிகளை சோபித தேரோ அவதானித்தார். என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட தேரோ ஜனாதிபதியின் செயலை நன்றிகெட்டவேலை என்று வர்ணித்தார். 2015 ஜனவரிக்குப் பிறகு இந்த நன்றிகெட்ட குணத்தின் வெளிப்பாடுகளை பலதடவைகள் எம்மால் காணக்கூடியதாக இருந்தது. அக்டோபர் 26 ஜனாதிபதி செய்த காரியம் திடுதிப்பென நடந்தேறியதல்ல. அது நனகு திட்டமிட்டே அரங்கேற்றப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் கொண்டுவருவார் எனற எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் தனக்கு வாக்களித்த சகலரினதும் அபிலாசைகளுக்கு முரணாக அமைந்த இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கான சூழ்நிலையை  சிறிசேன மிகவும் ஆறுதலாக தயார்செய்தார் என்பதை இப்போது புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது என்று பேராசிரியர் விஜேசூரிய கூறினார்.

முன்னைய ஆட்சியுடன் தொடர்புடைய ஊழல்காரரகளுக்கும் கொலைகாரர்களுக்கும் கிறிமினல் பேர்வழிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முயற்சித்தபோது அதற்கு குறுககே நின்றவர் ஜனாதிபதி சிறிசேனவே.நிதிக்குற்றங்கள் விசாரணைப்பிரிவின் சட்டபூர்வத்தன்மை குறித்து முதலில் சவால் விட்ட நபர் சுசில் பிரேம ஜெயந்தவே. அவருக்கு எதிரான ஊழல் விசாரணையொன்றை நிறுத்துவதற்கு ஜனாதிபதி தலையீடு செய்தார்.இன்று அதே பிரேம ஜெயந்த நாட்டின் நீதியமைச்சராக சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்திருக்கிறார் என்றும் விஜேசூயிய சாடினார்.

ஜனாதிபதி மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்த பேராசிரியர் விஜேசூரிய ” ஜனவரி 8 வாக்குறுதிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கிளர்ந்தைழுந்த ஒவ்வொரு தருணத்திலும் அதற்குப் பின்னணியில் சிறிசேனவே இருந்தார். அவர் துரோகத்தனமான முறையிலும் பண்பற்ற முறையிலும் செயற்பட்டு தன்னை நாகரிகமற்ற ஒருவராக நிரூபித்திருக்கிறார்” என்றும் குறிப்பிட்டார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com