தமிழ் සිංහල English
Breaking News

தற்போது நிலவும்   சூழ்நிலைக்கு ஜனநாயக வழிமுறைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் ..!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் இன்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

சுமார் ஒரு மணிநேரம் நடந்த இந்தச் சந்திப்புத் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

“நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் அமெரிக்கத் தூதுவருக்குத் தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், “கடந்த வாரத்தில் பிரதமரை நீக்கியமை உள்ளடங்கலாக இடம்பெற்ற சம்பவங்கள் அரசியலமைப்பிற்கு விரோதமானவையாகும்.

நாடாளுமன்றம் கூடுவதை காலந்தாழ்த்தும் செயலானது, ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக செய்யப்பட்ட ஒரு செயலை-  கட்சி தாவும் நபர்களுக்கு பல்வேறு பதவிகளையும் வேறு காரியங்களையும் கொடுத்து,-  சட்டபூர்வமான ஒன்றாக காட்டுவதற்கு வழிவகுக்கின்றது.

உடனடியாக செயற்பட்டு நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் சபாநாயகரை எழுத்து மூலமாக கேட்டுக் கொண்டேன்.

அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை போதியளவு கையாளவில்லை. அரசியல் கைதிகளின் விடுதலை,மீள்குடியேற்றம் புனர்வாழ்வு, படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை, போன்ற விடயங்களில் அரசாங்கம் மந்தகதியிலேயே செயற்பட்டது .

இந்த விடயங்களில் போதியளவு முன்னேற்றம் காணப்படாமையானது, தமிழ் மக்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பிளவுபடாத -பிரிக்கமுடியாத நாட்டிற்குள் உண்மையான ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய தீர்வொன்றினை அடைவது அவசியம்.

அத்தகைய தீர்வை அடைய முடியாத பட்சத்தில், இந்த நாடு எதிர்நோக்கியுள்ள எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியாது போகும்.

சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துலகத்துக்கும், ஐ.நா.மனித உரிமை பேரவைக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில், அமெரிக்கா தொடர்ந்தும் சிறிலங்கா தொடர்பில் ஆக்கபூர்வமான பங்களிப்பை கொடுக்க வேண்டும்  என அமெரிக்கத் தூதுவரிடம், இரா.சம்பந்தன்  கேட்டுக்கொண்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அமெரிக்க தூதுவர், “ஜனநாயக வழிமுறைகள் பின்பற்றப்படுவதை, அமெரிக்கா வலியுறுத்துகின்றது. தற்போது நிலவும்   சூழ்நிலைக்கு ஜனநாயக வழிமுறைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் .

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தின் நோக்கத்திற்கும் அதன் நடைமுறைப்படுத்தலுக்கும் அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும்” என உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில் அமெரிக்கத் தூதுவருடன்,  பிரதித் தூதுவர்  ரொபேர்ட் ஹில்டன் மற்றும் அரசியல் விவகாரப் பிரிவின் பொறுப்பாளர் அந்தனி ரென்சூலி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com