தமிழ் සිංහල English
Breaking News

கஷோகி படுகொலையை மறைப்பதற்காக அவரது உடல் திரவத்தில் கரைக்க சவூதி திட்டம் .!

துருக்கியிலுள்ள சவூதி தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட செய்தியாளர் கஷோகியின் உடல், துண்டு துண்டாக வெட்டப்பட்டு திரவத்தில் கரைக்கப்பட்டதாக துருக்கி அதிபரின் ஆலோசகர் யாசின் அக்தே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஹூரியத் நாளிதழுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
இஸ்தான்புலில் உள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில் கொல்லப்பட்ட செய்தியாளர் கஷோகியின் உடல், துண்டு துண்டாக வெட்டப்பட்டது என்று ஏற்கெனவே கூறியிருந்தோம்.

தற்போது புதிதாகக் கிடைத்துள்ள தகவலின்படி, கஷோகி படுகொலையை மறைப்பதற்காக அவரது உடல் திரவத்தில் கரைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

தூதரகத்தில் இருந்தவர்கள் கஷோகியின் உடலை சிறு துண்டுகளாக்கியதே, அதனைக் கரைப்பது எளிதாக இருக்கும் என்பதற்காகத்தான் என்பது தெரிகிறது.

ஒரு அப்பாவி மனிதரைக் கொல்வது என்பதே பெரும் குற்றமாகும். அதிலும், அவரது உடலை இந்த அளவுக்கு மோசமாக அவமதித்திருப்பது குற்றத்திலும் குற்றமாகும் என்றார் அவர்.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கு வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் அவர் கட்டுரைகள் எழுதி வந்தார்.

சவூதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் அவர் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.

இந்தச் சூழலில், துருக்கி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு, அந்த நாட்டுச் சட்டப்படி அவரது முன்னாள் மனைவியிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்றதற்கான சான்றுகள் தேவைப்பட்டன. அதனைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு கடந்த மாதம் 2-ஆம் தேதி சென்றார். ஆனால், அதன் பிறகு அவரைக் காணவில்லை.

தூதரகத்துக்குள் அவரை சவூதி அனுப்பிய ஆட்கள் கொன்று விட்டதாக துருக்கி குற்றம் சாட்டியது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆரம்பத்தில் மறுத்து வந்த சவூதி அரேபியா, 18 நாள்களுக்குப் பிறகு தங்களது துணைத் தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்டது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com