தமிழ் සිංහල English
Breaking News

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா நாட்கூலிக்கான கோரிக்கை மிகவும் நியாயமானது.!

அ.வரதராஜா பெருமாள்  (முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர்.)

மலையக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா நாளாந்தக் கூலி கேட்டுப் போராடி வருகிறார்கள். மலையகத்தில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.  மேலும், கொழும்பு காலி முகத் திடலில் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். தேயிலைத் தொழிலாளர் சங்கங்களுக்கும் தேயிலைப் பெருந்தோட்ட கம்பனிகளுக்கும் இடையே தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு தொடர்பான ஒப்பந்தம் ஏற்படும் வரை அவர்களின் போராட்டம் மேலும் வீறு கொண்டதாகத் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கள் தத்தமது அரசியல் வேறுபாடுகளுக்கு ஏற்ப  தனியாகவும், வௌவேறாக கூட்டிணைந்தும் தொழிலாளர்களைத் திரட்டி வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களின் கூலி உயர்வுப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதிலுமுள்ள பல்வேறு அரசியல் சமூக அமைப்புக்களும் தலைவர்களும் குரலெழுப்பி வருகின்றனர். இருந்தும் இந்த விடயத்தில் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான முன்னெடுப்பு எதனையும் இதுவரை மேற்கொள்ளாதது கவலையைத் தருகின்றது. மத்திய அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரம் தொடர்பாக தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை மீது அரசாங்கத்தின் அக்கறையை காலதாமதாக்கி விடுமோ என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா நாட்கூலிக்கான கோரிக்கை மிகவும் நியாயமானதும் அவர்களது அடிப்படை உரிமையுமாகும் – அவர்களது வாழ்வாதாரக் கோரிக்கையாகும். அந்த அடிப்படைகளில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டத்துக்கு எமது உணர்வு பூர்வமான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். அரசாங்கம் உடனடியாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாகக் கேட்டுக் கொள்கிறோம்.

தேயிலைக் கம்பனிகளுடன் வழமையாக பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் பலயீனப்படுத்தி விடாமல் உறுதியாகச் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். தேயிலைக் கம்பனிகளுக்கு பல்வேறு நிதி உதவிகளையும் மான்யங்களையும் சலுகைகளையும் வழங்குகின்ற அரசாங்கமானது தேயிலை உற்பத்திப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை – அடிப்படை உரிமையை நிலைநாட்டுவதில் அக்கறை செலுத்த வேண்டியது அதன் கடமையாகும் என்பதை வலியுறுத்துகிறோம்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களில் ஒரு சிறு பகுதியினரைத் தவிர ஏனைய அனைவரும் தமிழர்களே. இலங்கைவாழ் சிறுபான்மைத் தேசிய இனங்களின் முக்கியமான பிரச்சினைகளில் சிங்கள ஆளும் குழுக்களைச் சேர்ந்த தலைவர்கள் பாரபட்சமாகவும், புறக்கணித்தும், காலதாமதமாகவும் செயற்படுவது போல தோட்டத் தொழிலாளர்களின் கூலி உயர்வு விடயத்திலும் நடந்து கொள்ளக் கூடாது. அது நாட்டின் பொருளாதாரத்தைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்குவதோடு இலங்கையின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிகளையும் பாதிக்கும் என்பதை அரசாங்கம் உணர்ந்து செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

தேயிலை உற்பத்திக் கம்பனிகளின் தோட்டங்களில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இத்தொழிலாளர்கள் சுமார் மூன்று லட்சம் ஏக்கர் நிலங்களைக் கொண்ட தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள்;. தேயிலை உற்பத்திக் கம்பனிகளின் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களே வருடாவருடம் தங்கள் கூலி உயர்வுக்காக போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அவர்கள் போராடாமலேயே அவர்களது கூலியை வாழ்க்கைச் செலவின் உயர்வுக்கு ஏற்ப கம்பனிகளே உயர்த்திக் கொடுக்க வேண்டிய வகையில் கூலிக் கொடுப்பனவு சட்ட ஏற்பாடுகளை உருவாக்கி அதனை கம்பனிகள் கட்டாயமாக கடைப்பிடிக்கும் நிலையை அரசாங்கம் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

இலங்கையில் தேயிலை உற்பத்தியை மேற்கொள்ளும் சுமார் இரண்டரை லட்சம் சிறு நில உடைமையாளர்கள் சராசரியாக ஒர் ஏக்கர் நிலத்தையே கொண்டிருக்கின்றனர். இவர்களது நிலத்தினதும் உழைப்பினதும் தேயிலை உற்பத்தித் திறன் ஒப்பீட்டளவில் சிறப்பாகவே உள்ளது. இவர்கள் தாம் கொண்டுள்ள சிறு நிலத்திலேயே மாற்று உற்பத்தி வருமானங்களையும் பெறக் கூடியதாக உள்ளது. எனவே, தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பான உடனடி நடவடிக்கையை மேற்கொள்கின்ற அதேவேளை, சிறு தேயிலைத் தோட்டங்களின்  அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டும், மலையகத் தேயிலைத் தோட்ட நிலங்களை நாட்டின் விரைந்த தேசிய பொருளாதார வளர்ச்சிக்குப் பொருத்தமான வேறு உற்பத்திகளை நோக்கி மாற்றங்களை ஏற்படுத்துவது பற்றிய சிந்தனைகளுடனும் பெருந் தோட்டக் கம்பனிகளின் கூலிகளாக உள்ள தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒரு நிரந்தர சமூக பொருளாதார உத்தரவாதத்தை வழங்குவதற்கு அரசாங்கமும், தோட்டத் தொழிலாளர்களின் சங்கங்களும், மலையகத் தொழிலாளர்களின் நலன்கள் மீது அக்கறை கொண்ட அனைத்து சமூக அரசியற் சக்திகளும் காத்திரமாக செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். அந்த வகையில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினராகிய நாம் எம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராக உள்ளோம் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் சார்பில் இந்த அறிக்கையை வெளியிடுவது
அ.வரதராஜா பெருமாள்
கட்சியின் அமைப்புச் செயலாளர்.
முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com