தமிழ் සිංහල English
Breaking News

மலையக மக்களின் உழைப்பில் தங்கியுள்ள இலங்கையின் பொருளாதாரம் .!

ஸர்மிலா ஸெய்யித்

காவி எழுச்சியை மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்ட பேரினவாத அரசுக்கு கறுப்புச் சட்டையின் எழுச்சி பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆர்பாட்ட நேரம் காலை பத்து மணி என்றிருந்தபோதும் 9.30க்கெல்லாம் அவ்விடத்தில் இருந்தேன். துடிப்பான இளைஞர் படையைக் கண்டபோது உற்சாகமாகவும் நிறைவாகவும் இருந்தது. இந்தப் போராட்டத்தை யார் ஏற்பாடு செய்தார்கள் என்ற விபரங்கள் தெரிந்திருக்கவில்லை. ஆனால் எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்ற முடிவில்தான் அவ்விடம் சென்றிருந்தேன்.

சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வருகை தருவோரை ஒழுங்குபடுத்த முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். பாதையை மறைக்க வேண்டாம், போக்குவரத்துக்குத் தடைஏற்படக் கூடாது, அனைவரும் மைதானத்திற்கு வாருங்கள் என்று கிட்டத்தட்ட கத்திக் கொண்டிருந்தார்கள்.

”நாங்கள் கற்ற சமூகம், அதன் படி நடப்போம்” என்றும் பல முறை சொன்னார்கள்.

நான் ஓரமாக நின்று நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். இந்தப் போராட்டத்தின் பின்னால் அரசியல் சக்திகளின் கரங்கள் இருக்குமா என்ற தயக்கமும் இலேசாக இருந்தது. சிறிது நேரத்திலே அப்படியெந்தப் பின்புலமும் இல்லை என்பதை களம் தெளிவாக உணர்த்தியது. அரசியல் நெடி அங்கு சிறுதும் இருக்கவில்லை. இளைஞர்கள் தாமாகவே வந்து குவிந்து கொண்டிருந்தார்கள். மலையக இளைஞர்களை அள்ளிக் கொண்டு எந்த பேருந்தும் அங்கு வந்திருக்கவில்லை. பின்னரும் வரவில்லை. உணவுப் பொட்டலங்கள் விநியோகங்களும் நடக்கவில்லை. முற்றிலுமான அறவழிப் போராட்டம், இளைஞர்களின் தன்னெழுச்சி என்றுணர்ந்து மனத்திடத்தோடு மைதானத்தில் போராட்ட நேரத்தில் இறங்கினேன்.

500 மில்லி தண்ணீர் போத்தல்கள் அடங்கிய ஒரு பொதியுடன் சில இளைஞர்கள் வந்தார்கள். ஆனால் அவை யானைப் பசிக்கு சோளப் பொறி. கடல்போல் பரவிக் கிடந்த கூட்டத்திற்கு அந்தத் தண்ணீர் போத்தல்கள் போதவே போதாது. அது குறித்த முறைப்பாடுகள் இன்றி தண்ணீரைப் பகிர்ந்து பருகினோம். தண்ணீர் போத்தல்களை ஆங்காங்கே வீசவேண்டாம். குப்பைத்தொட்டியில் போடுங்கள். நாம் கற்ற சமூகம், அதன் படி நடப்போம் என்று மீண்டும் மீண்டும் இளைஞர்கள் அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.அதையும் மீறி கால்களுக்கிடையில் பல தண்ணீர் போத்தல்கள் நசுங்குண்டு கிடந்தன. சிலர் அந்தக் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துவதில் பொறுப்புடன் ஈடுபட்டார்கள்.

நான் பல ஆர்பாட்டங்களில பங்கேற்றிருக்கிறேன். ஆனால் இந்த மலையக இளைஞர்களின் தன்னெழுச்சியில் தெரிந்த கண்ணியமும் பொறுப்புணர்ச்சியும் தனித்துமானது.

இப்பேற்பட்ட அறவழிப் போராட்டத்தை, இளைய சமுதாயத்தின் தன்னெழுச்சியை பொலிஸ் ஏன் கண்ணீர்ப் புகையில்வெளியேற்ற வேண்டும்?

இந்த மக்களின் கோரிக்கைகள் ஒன்றும் அத்தனை பெரியன அல்ல. அரசின்ஆட்சிக் கால்கள் ஒன்றும் இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதால் உடைந்து விடப்போவதில்லை.

#கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்வதை நிறுத்த வேண்டும்

#சம்பள நிர்ணய சபை ஊடாகதொழிலாளர் சம்பளத்தை நிர்ணயம்செய்ய வேண்டும்.

#நாள் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்து.

இலங்கையில் தேநீர் பருகுகின்ற ஒவ்வொரு பிரஜையும் குரல்தர வேண்டியபோராட்டம் இது.

பொதுவாக சாதாரண போராட்டங்கள் நடக்கும்போது சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரோ அமைச்சரோ அவ்விடம் வந்து மக்களுடன் உரையாடுவார்கள். கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களைப் பெற்றுச் செல்வார்கள். காலை சரியாக 10மணிக்கே போராட்டம் தொடங்கிவிட்டிருந்தது. மதியம் 2 மணி வரையும் அங்கு யாருமே எட்டியும் பார்க்கவில்லை.

பத்ரி பசி பொறுக்காமல் முக வாட்டத்துடன் இருந்தபடியால் மகஜரில் கையெழுத்து வைத்துவிட்டு அங்கிருந்து புறப்படும்போது 2.30 இருக்கும்.

”எத்தனை மணி வரையும் போராட்டம்”என்று கேட்டேன்.

”கோரிக்கைளைக் கேட்க,மகஜரை எடுக்க யாருமே வரலிங்களே… வரும் வரையும் இருப்போம்” என்று ஒரு இளைஞர் சொன்னார்.

மாலையானதும் மழை வந்தபடியால் அப்படியே வீடு வந்துவிட்டோம்.

ஆர்பாட்டம் பொலிஸாரின் கன்னிர்புகைவீச்சில் கலைக்கப்பட்டது அறிந்து நெஞ்சுபொறுக்கவில்லை.

காலையில் பார்த்த எழுச்சி பெற்ற அந்தப் பெயர் தெரியாத இளைஞர்களின் முகங்கள் வரிசையாக வந்து மனத்தைத் துன்புறுத்துகிறது. கூட நின்று கோசம் எழுப்பி கணப் பொழுதில் ”தோழர்களாக”நின்ற அந்தப் பொழுது வருத்துகிறது.

மலையக மக்களின் உழைப்பில் தங்கியுள்ள இலங்கையின் பொருளாதார வளமும், இம்மக்களின் முதுகுகளில் ஏறி அமர்ந்திருக்கும் முதலாளிமார் சம்மேளனங்களும் எங்கள் உறவுகளாக இருக்கும் இம்மக்களை தொடர்ந்தும் இரண்டாம் பிரஜைகளாக நடத்துவதற்கு எதிராக நாங்கள் கிளர்ந்தெழுவோம்.

இந்தப் போராட்டத்தைச் செய்வதற்கு உத்தேசித்தவர்கள் யார் என்று இன்னமும் எனக்குத் தெரியவில்லை. இது ஒரு துவக்கம் மட்டுமே என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.

நீதி கிடைக்கும் வரையும் போராடுவோம். நமது நியாயமான கோரிக்கை, நியாயமான போராட்டம் ஒருபோதும் தோற்க முடியாது. இளைஞர்கள் சோர்ந்து விடவேண்டாம். தொடர்ந்து போராடுவோம். கலங்காதிருங்கள். கன்னீர்புகை எல்லாம் கானல்புகை ஆகும் காலம் தூரமில்லை.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com