தமிழ் සිංහල English
Breaking News

சர்வதேச ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை பெற்ற கோலி.!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டிக்கு பிறகு பேசும்போது இந்திய அணியின் கேப்டன் கோலி கூறிய ஒரு விஷயம், கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்தது.

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழும் விராட் கோலி, போட்டிக்கு போட்டி ஏதாவது ஒரு சாதனையை நிகழ்த்திவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் ரன்களை குவித்து வருவதால் ரன் மெஷின் என அழைக்கப்படும் கோலி, சதங்களையும் சாதனைகளையும் குவித்து வருகிறார்.

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் சாதனைகளை கோலி முறியடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது போக்கிலும் அது தெரிகிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் அடித்த சதம், ஒருநாள் போட்டிகளில் அவரது 36வது சதம், 60வது சர்வதேச சதம். சச்சின் டெண்டுல்கர் 100 சர்வதேச சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். அந்த சாதனையை கோலி, அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவதற்குள் முறியடித்துவிடுவார் என்பதில் ஐயமில்லை. அதேநேரத்தில் நேற்றைய போட்டியில் அடித்த ரன்களின் மூலம் மூன்றாவது ஆண்டாக, ஒரு ஆண்டில் 2000 சர்வதேச ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார். சச்சின், ஹைடன், ஜோ ரூட்டிற்கு அடுத்தபடியாக கோலி தொடர்ந்து மூன்றாண்டுகளாக 2000 ரன்களை கடக்கிறார்.

கோலி ரன்களை குவிப்பது, தனிப்பட்ட முறையில் அவருக்கு சாதனைகளை பெற்றுக்கொடுத்தாலும், அவரது ஆட்டமும் அவர் குவிக்கும் ரன்களும் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்கிறது. இந்திய அணியின் வெற்றி நாயகனாக திகழ்கிறார். அவரது கேப்டன்சியின் மீது விமர்சனங்கள் இருந்தாலும், ஒரு பேட்ஸ்மேனாக அவரது ஆட்டத்தை யாரும் விமர்சிக்கவே முடியாது.

இவ்வாறு மிகச்சிறந்த வீரராக வலம் வந்துகொண்டிருக்கும் 29 வயது கோலி, நேற்றைய போட்டிக்கு பின் பேசிய விஷயம் அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்களுக்கே அதிர்ச்சியை அளித்தது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை வென்றதற்கு பின் பேசிய கோலி, என் கிரிக்கெட் வாழ்வில் இன்னும் சில ஆண்டுகளே எஞ்சியுள்ளன. அதனால் ரசித்து மகிழ்ந்து எனது ஆட்டத்தை ஆடிவருகிறேன். நாட்டுக்காக ஆடுவது மிகப்பெரிய கௌரவம். அது அனைவருக்கும் கிடைத்துவிடாது. அதனால் எந்த ஒரு போட்டியையும் எளிதாக எடுத்துக்கொள்வதில்லை. எல்லா போட்டிகளுக்குமே முக்கியத்துவம் கொடுத்து ஆடிவருகிறேன். நமது விளையாட்டுக்கு நாம் நேர்மையாக இருந்தால், அதற்கான பிரதிபலன் கிடைக்கும் என்பதை நம்புபவன் நான். அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன் என்று கோலி தெரிவித்தார்.

29 வயதான கோலி, குறைந்தது 36 அல்லது 37 வயது வரை ஆடுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பார்த்தால் இன்னும் 7 அல்லது 8 ஆண்டுகள் ஆடுவார். 7 அல்லது 8 ஆண்டுகள் என்பது மிக நீண்டகாலம்தான்; குறைந்த காலம் அல்ல. ஆனால் கோலி இன்னும் குறைந்த ஆண்டுகள் தான் ஆடுவதாக தெரிவித்திருப்பதன்மூலம் 35 வயதுக்கு உள்ளாகவே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவாரோ என்ற ஐயம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com