தமிழ் සිංහල English
Breaking News

தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் அச்சுறுத்தல்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியக் கூடாது.!

தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம்  முயற்சிக்கக் கூடாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை அச்சுறுத்தி புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கும், சிறையில் உள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்வதற்கும் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது என்றும் அவர் குற்றஞ்சாட்டினர்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அரசாங்கம் இம்மாத இறுதியில் புதிய அரசியலமைப்புக்கான அறிக்கையொன்றை முன்வைப்பதற்குத் தயாராகி வருகிறது. சர்வதேசத்துக்கு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் வழங்கிய கால அவகாசம் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், அரசாங்கம் அவசர அவசரமாக அரசியலமைப்புக்கான அறிக்கையை கொண்டுவர முயற்சிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜீ.எல்.பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்றை வழங்காவிட்டால் மீண்டும் யுத்தம் வெடிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். மீண்டும் குண்டுகள் வெடிக்கும், மத ஸ்தலங்கள் மீது குண்டுகள் வீசப்படும் என அச்சுறுத்தி அரசியலமைப்பைக் கொண்டுவர முடியாது. இவ்வாறானதொரு அரசியலமைப்பை மக்கள் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். அவ்வாறு கொண்டுவரப்படும் அரசியலமைப்புக்கு தமது ஒத்துழைப்பு ஒருபோதும் கிடைக்காது.

அதேநேரம், சிறையிலுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்யாவிட்டால் வரவு செலவுத்திட்டத்தில் தமது 16 உறுப்பினர்களும் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அச்சுறுத்தியுள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன்னர் உடுவில் பிரதேசத்தில் ஆவா குழுவுக்கு நிதியளிக்கும் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள பின்னணியில் விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுவிக்குமாறு கூட்டமைப்பினர் அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். இந்த அச்சுறுத்தல்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியக் கூடாது.” என்றுள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com