தமிழ் සිංහල English
Breaking News

உலகின் பொருளாதார சக்தி மிக்க இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் .!

சீனப் பொருள்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்து வரும் கூடுதல் வரிகளால், அமெரிக்க பாலிசிலிக்கான் துறை நலிவடைந்து, அந்தத் துறை நிறுவனங்களை மூ டும் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 இதுகுறித்து வாஷிங்டன் மாகாணத்தைச் சேர்ந்த ஐந்து எம்.பி.க்கள் அடங்கிய குழு, அதிபர் டிரம்ப்புக்கு சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சீனாவிலிருந்து இறக்குமதியாகும் சூரிய மின்தகடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கும் அதிபரின் முடிவால், இறக்குமதி மின்தகடுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பாலி சிலிக்கான் துறைகள் நலிவடைந்து வருகின்றன.

 சீனத் தகடுகளைப் பயன்படுத்தி சூரிய மின் உற்பத்தி சாதனங்களை நிறுவி வரும் நிறுவனங்களும், சாதாரண மாற்று மின்சார சேவை நிறுவனங்களிலிருந்து மிகப் பெரிய சூரிய மின்சக்தி நிறுவனங்கள் வரையிலும் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளன.

 இதன் காரணமாக வாஷிங்டன் மாகாணத்திலுள்ள பாலிசிலிக்கான் நிறுவனத்தை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்தப் பிரச்னைக்கு உடனடி தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

 சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மதிப்பைவிட, அந்த நாட்டிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருள்களின் மதிப்பு அதிகமாக இருப்பதால், அந்த வர்த்தகப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக சீனப் பொருள்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்போவதாக கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு போன்ற உலோகப் பொருள்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்கும் உத்தரவை அவர் பிறப்பித்து வருகிறார். அதற்குப் பதிலடியாக, அமெரிக்க இறக்குமதி பொருள்கள் மீது கூடுதல் வரி விதிப்பதாக சீனாவும் அறிவித்து வருகிறது.

 இதன் காரணமாக, உலகின் பொருளாதார சக்தி மிக்க இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் வெடிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்க சூரிய மின்தகடு உற்பத்தி நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் சூரிய மின்தகடுகளுக்கு கூடுதலாக 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.

 முதல் ஆண்டில் 30 சதவீதமும், அதனைத் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு முறையே 25 சதவீதம், 20 சதவீதம், 15 சதவீதம் என கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பால், உள்நாட்டு சூரிய மின்தகடு உற்பத்தியாளர்களுக்கு சாதகமான சூழல் நிலவினாலும், சீனாவிலிருந்து குறைந்த விலையில் சூரிய மின்தகடுகளை இறக்குமதி செய்து அது தொடர்பான தொழில்களில் ஈடுபட்டு வந்த நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தச் சூழலில், 5 நாடாளுமன்ற எம்.பி.க்ககள் அடங்கிய குழு இந்தக் கடிதத்தை அதிபர் டிரம்ப்புக்கு அனுப்பியுள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com