தமிழ் සිංහල English
Breaking News

இனவாத கருத்துக்களோடு கோடீஸ்வரன் கல்முனை எல்லைக்குள் கால்பதிக்க கூடாது!

தமிழ், முஸ்லிம் உறவுக்குள் விரிசலை ஏற்படுத்தும் கருத்துக்களோடு கோடீஸ்வரன் எம்.பி கல்முனை எல்லைக்குள் கால்பதிக்க கூடாது என கல்முனை மாநகர பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபை அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த பிரதிமேயர் மேலும் கூறுகையில்,

கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து ஒற்றுமையுடன் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையே இனவாத கருத்துக்களை விதைத்து இன நல்லுறவுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்துடன் சமீப காலமாக கோடிஸ்வரன் (பா.உ) கல்முனையில் செயல்பட்டு வருகிறார்.

நான் கல்முனை மாநகரசபையில் கடந்த 2006 ஆண்டு முதல் அங்கம் வகித்த ஒரு பிரநிதியாக தற்சமயம் பிரதி மேயராக பதவியேற்ற காலம் முதல் இன்று வரையில் தமிழ் முஸ்லிம் இன நல்லுறவிற்கு 100 வீதம் பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் போன்றவர்கள் இனவாத கருத்துக்களுடனேயே இன்றும் கல்முனை மாநகர மக்களிடம் மட்டுமல்ல அதற்கு வெளியிலும், தொடர்ந்தும் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இனங்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலமாகத்தான் தாங்கள் அரசியலில் நீடித்தது இருக்க முடியுமெனவும் அவர்கள் நம்புகின்றனர். ஆனால் தமிழ், முஸ்லிம் மக்கள் இங்கு ஒற்றுமையுடன் வாழ்வதையே விருப்புகின்றார்கள்.

தமிழர்களும், முஸ்லிம்களும் என்னையும் எனது கொள்கைகளையும் எனது உண்மையான பணியையும் ஏற்றுக்கொண்டதால்தான் இன்று வரலாற்றில் முதல் தடவையாக எனக்கு இவ்வாறான கௌரவத்தை வழங்கி இருக்கிறார்கள். அதன் மூலமாக கடந்த கால கசப்பான விடயங்களை மறந்து ஒற்றுமைப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், இனவாதத்தை அரசியல் மூலதனமாக கொண்டு இயங்கிவரும்
தமிழ் தேசிய கூட்டமைப்பு இங்கு மாத்திரம் மட்டுமல்ல நாடாளவிய ரீதியில் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை வளர்க்கும் நோக்கின் அடிப்படையில் செயல்படுவதுடன், தமிழ் மக்களின் அபிலாசைகளை பெற்றுத்தருவதாக கூறி தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகிறார்கள்.

இப்போது தமிழ் மக்கள் மத்தியில் இவர்களுடைய முகத்திரை கிழிந்து காணப்படுகிறது. அதனால் அவர்களுடைய நிகழ்ச்சி நிரல் அட்டவணையில் குழப்பம், மாத்திரமல்ல தமிழ் மக்கள் பேரவையின் தலைவரும் வடமாகாண முதலமைச்சருமான சீ.வி. விக்னேஸ்வரன் அவர்கள் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அவருடைய இந்த செயல்பாட்டை நாம் வரவேற்கிறோம்.

எதிர்காலத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களை எம்மோடு இணைந்து செயலாற்ற நான் எமது கட்சியின் சார்பில் இந்த சந்தர்ப்பத்தில் நான் அழைப்பு விடுக்கிறேன். தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி ஐயா அவர்களுக்கு அடுத்தபடியாக தமிழ் மக்களின் தலைவராக இருக்க விக்னேஸ்வரன் ஐயா அவர்களே தகுதியான ஒருவராக நாம் இனம் கண்டுள்ளோம்.

கல்முனை மாநகர சபையில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி இணைந்து ஆட்சியமைப்பது போன்று எதிர்காலத்திலும் இன நல்லுறவை மேலும் வலுவானதாக்க நாங்கள் முஸ்லிம் கட்சிகளுடனும் அரசியல் தலைவர்களுடனும் இணைந்து செயலாற்ற தயாராக இருக்கின்றோம் அதற்கான பகிரங்க அழைப்பும் விடுத்து வருகிறோம். அவ்வாறு இணைந்து பணியாற்றும் சந்தர்ப்பம் அமைந்தால் அதனை தலைவர் ஆனந்த சங்கரி ஐயா அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்க தயாராக இருக்கிறார். அதன் மூலம் எதிர்கால சந்ததியினர் மத்தியில் சந்தேகமற்ற ஒற்றுமையையும் பரஸ்பரத்தையும் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முஸ்லிம் காங்கிரஸிஸுடன் ஒப்பந்த அடிப்படையில் பல தடவைகள் இணைந்து செயல்பட்ட போதிலும் முஸ்லிம்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது இன்னும் நம்பிக்கை பிறக்க வில்லை. முஸ்லிம்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதும் அதன் பிரதிநிதிகள் மீதும் இன்றும் சந்தேகம் இருக்கின்றது. அதற்கு நிறைய காரணங்களும் உதாரணங்களும் இருக்கின்றன.

எனவே இன நல்லுறவுக்காக தமிழர் விடுதலை கூட்டணி குறிப்பாக நான் மிகவும் அர்ப்பணிப்புடன் எனது இறுதி மூச்சுவரை கடமையாற்றுவதற்காக தயாராக இருக்கிறேன்.

சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான எந்த ஒரு நிலைப்பாட்டையும் ஆனந்த சங்கரி ஐயா தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணி ஏற்றுக்கொள்ளாது. அந்த வகையில் அரசாங்கம் புதிய முறையில் உள்ளூராட்சி தேர்தலை நடாத்தி மக்களையும் சபையின் நடவடிக்கைகளையும் குழப்பமடைய செய்திருக்கிறது.

இப்போது மாகாண சபைத் தேர்தலை புதிய முறையில் நடாத்த சிலர் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் கருத்துக்களை முன்வைக்கின்றனர். எம்மைப் பொறுத்தவரையில் பழைய விகிதாசார முறையில் தேர்தல் நடத்தப்படுவதனூடாகவே சிறுபான்மை சமூகத்தினது பிரநிதித்துவம் பாதுகாக்கபடும் என தெரிவித்தார்.

அஹமட் புர்க்கான்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com