தமிழ் සිංහල English
Breaking News

மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அறிக்கை.!

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் மிகவும் தாமதமாக முடிவெடுத்ததாகக் கூறி, அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் கடந்த 2014-இல் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் இந்த மூவருடன் சேர்த்து ஆயுள் தண்டனை அனுபவித்த நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் ஏற்கெனவே 20 ஆண்டுகள் சிறையில் தண்டனையைக் கழித்துள்ளதால் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அப்போது தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து, ஏழு பேரையும் விடுதலை செய்ய ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழக சட்டப்பேரவையில் 2014 பிப்ரவரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தமிழகம் அரசு கடிதமும் எழுதியது. ஆனால், இதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது கைதிகள் சார்பிலும் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் கருணை மனுவை தமிழக ஆளுநர் பரிசீலிக்கலாம் என்று கூறி, மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவையும் முடித்து வைத்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, விதி எண்.161-இன் கீழ் ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை அளித்த பரிந்துரையின் அடிப்படையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வியாழக்கிழமை அறிக்கை தாக்கல் செய்தார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com