தமிழ் සිංහල English
Breaking News

தமிழ்த் தலைமைகள் தாம் அரசாங்கத்திடம் வாதிட்டும் கேட்டும் எதையும் பெறத் தயாரில்லை..!

கருணாகரன்

அண்மையில்  மலையக அரசியல் தரப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவருடன் பேசும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் சொன்னார், “வடக்கிலும்  கிழக்கிலும் நாங்க அரசியல் வேலைகளைச் செய்ய வேண்டிய சூழல் உருவாகியிருக்கு. அங்கே இருக்கிற நம்மட ஆக்கள் இன்னும் ஓரங்கட்டப்பட்டுக்கிட்டுத்தான் இருக்கிறாங்க. இதை அங்க இருக்கிறவங்களே நம்மகிட்ட வந்து சொல்றாங்க. அவங்கள வேறாக்களாகப் பாக்கிறதயோ அங்க நாங்க வந்து இன்னொரு பிரிவா இயங்கிறதயோ நாங்க விரும்பல்ல. அதாலதான் இதுவரையிலயும் அங்க நாங்க யாருமே வந்து அரசியல் பண்ணல்ல. ஆனா இப்ப அப்பிடி ஒதுங்கியிருக்க முடியாதுன்னு தோணுது.

இத விட நம்மட நிதி ஒதுக்கீட்டில்தான் அங்கே பல வேலைகள் நடந்துட்டிருக்கு. ஆனா, அங்கே அதெல்லாம் சரியா நடக்குதா எங்கிறதுதான் பிரச்சினை. அந்த வேலைகளைக் கண்காணிக்கிறதுக்கு சரியான ஆள் கிடையாது. TNA எம்பிக்கள்தான் அதை பார்த்துக்கிறாங்க எண்டு பார்த்தா, அதை அவங்க சரியாச் செய்ற மாதிரித் தோணல. அவங்க எங்களுக்கு ஒண்ணைச் சொல்லீட்டு அங்க ஒண்டைச் செய்யிறாங்க. இதால அங்க இருந்து இப்ப கம்ளையின்ற் எல்லாம் வருது. இதுக்கு நாம என்ன பண்றது? பணத்தையும் கொடுத்து கொறையையும் சம்பாதிக்க முடியுமா, சொல்லுங்க? அதான், நம்மட ஆக்களே இதையெல்லாம் கண்காணிக்கிற மாதிரி நாம அங்க ஆக்களை வைச்சு வேலை செய்யணும். அப்பீடின்னு யோசிக்கிறம்” என்று.

“இது எப்பிடிச் சாத்தியமாகும்? இதுக்கு அங்கே தமிழ்த்தேசிய அரசியல் சக்திகள் இடமளிக்குமா? அதை விட ஏனைய தமிழ்க்கட்சிகளும் இருக்கின்றன. இவையெல்லாம் எந்தளவுக்கு உங்களையும் உங்களுடைய அரசியலையும் ஏற்றுக் கொள்ளும்?”  என்று அவரிடம் கேட்டேன்.

“அவங்க என்ன சொல்றது? அவங்க யார் எங்களை ஏத்துக்கிறதுக்கும் தடுக்கிறதுக்கும்? நாம நம்மட மக்களைக் கவனிக்கிறம். நம்மட சேவையையும் தேவைகளையும் விரும்பிற மக்களுக்கு அதச் செய்றம். இதை யார் மறுத்துக்க முடியும்? அப்படி மறுக்கிறவங்க அந்த மக்களுக்கு வேண்டியதைச் செய்யட்டும். அதைச் செய்ய அவங்களால முடியுமா? அத மொதல்ல சொல்லுங்க” என்றார் அவர்.

அவருடைய நியாயம் மறுக்க முடியாதது. ஆனால், “நீங்கள்  சொ59ல்வதைப்போல மலையகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் அல்லது அரசியல் தரப்பினர், வடக்குக் கிழக்கில் அரசியல் சக்தியாக  வேலை செய்வதற்கான சாத்தியங்கள் மிகக்குறைந்தளவே உண்டு. அவர்கள் அதை இன்னொரு பிரிவினையாகத்தான் பார்க்க முற்படுவார்கள்” என்று சொன்னேன்.

அவர் சிரித்தார். “நம்மட பணம் வேணும். நம்மட அரசியல் வேணாங்கிறீங்க?” என்றார். முகத்தில் சற்று வருத்தமும் மெல்லிய கோபச் சாயலும் தென்பட்டன.

“உங்களின் பணத்தை யார் கேட்டார்கள்? அதற்கு அங்கே (வடக்குக் கிழக்கில்) தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (பாராளுமன்ற உறுப்பினர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் அங்குள்ள பிரச்சினையைப் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் உங்களைத் தெரிவு செய்த மக்களுக்குரிய வேலைகளைச் செய்யுங்கள். அதையே சரியாகச் செய்யவில்லை என்று அந்த மக்கள் உங்களை விமர்சிக்கிறார்கள்.  அவர்களுடைய உரிமைகளுக்கும் வாழ்க்கைக்கும் போதிய மதிப்பை இன்னும் பெற்றுக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பலமாக இருக்கும்போது எதற்காக வடக்குக் கிழக்கில் வந்து அரசியல் செய்ய வேணும்? அங்கே பணத்தைக் கொடுக்க வேணும்? அப்படிச் செய்ய முற்பட்டால் அது அங்கே தேவையில்லாத சமூகப் பிளவை உண்டாக்குவதாகவே முடியும். ஆகவே, திட்டமிட்ட ஒரு பிரிவினையை வடக்குக் கிழக்கில் ஏற்படுத்துவதற்கு உங்கள் அரசியலை விரிவாக்கம் செய்வதற்கான ஒரு முன்னோட்ட நடவடிக்கையாகவே பார்க்க இதைப் வேண்டியுள்ளது. அதற்கான ஒரு உத்தியாகத்தானே இந்த நிதி ஒதுக்கீடுகள்? அப்படிப் பார்த்தால் நீங்கள் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குவதாக ஏன் எடுத்துக் கொள்ள முடியாது? இப்பொழுது ரணிலின் (அரசாங்கத்தின்) கை விசிறிகளாக நீங்கள் இருக்கிறீர்கள் என்றொரு விமர்சனம் உண்டு” என்றேன்.

அவர் கோபத்தின் உச்சிக்குச் சென்று விட்டார். “நாங்க ஒண்ணும் உங்க ஆட்களைப் போல வாயைப் பொத்திக் கிட்டுச் சும்மா உக்காந்திருக்கல்ல. பேச வேண்டியதை எல்லாம் பேசுறோம். தப்புன்னா எதிர்க்கிறோம். நல்லதுக்கு ஆதரவைக் கொடுக்கிறோம். வேண்டியதைக் கேட்கிறோம். இப்ப மலையக மக்களுக்கு காணியும் வீடும் கொடுக்கிறோம். இது நாம சாதிச்சிருக்கிற வெற்றி. அங்க இன்னும் பலதைச் செய்ய வேணுங்கிறத ஒத்துக்கிறம். ஆனா, உங்க ஆட்கள் அங்க என்ன பண்றாங்க? அவங்க கிட்ட என்ன இருக்கு? சும்மா வளவளன்னு கதைதான். இங்க வந்து அங்க மக்களெல்லாம் ரொம்பக் கஸ்டப்படுறாங்க எண்டு எங்ககிட்ட சொல்லி கரைச்சல் தந்து,தங்களோட தேவைகளைப் பெறுகிறாங்க. இதை விட இவங்களே (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே)அரசாங்கத்திடம் நேரடியாக மக்களுக்கான நன்மைகளைப் பெறலாமே? அப்படிச் செய்தால் எதுக்கு நாங்க அங்க நிதியைக் கொடுக்கணும். அங்க இருக்கிற எல்லா ஆட்களையும் சரி சமமாக பார்த்துக்கிட்டா நாம ஏன் அங்க வாறதப்பத்தி யோசிக்கணும்? என்று கேட்டார்.

“இதை நீங்களே அவர்களிடம் சொல்லலாமே!” என்றேன்.

“நாங்க பல தடவை சொல்லீட்டம். ஆனா அவங்க கேக்கிற மாதிரித் தெ60ரியேல்ல” என்றார் அவர்.

நான் அவருக்குச் சொன்னேன், “இலங்கையில் மலையக மக்களின் வரலாறு ஏறக்குறைய 200 ஆண்டுகள்தான்.ஆனால் அவர்கள் இன்று அரசியலில் பலமானதொரு தரப்பாக மாறியிருக்கிறார்கள். சில பல குறைபாடுகள்,விமர்சனங்கள், மறுபார்வைகள் இருந்தாலும் இலங்கையின் யதார்த்த நிலை, பாராளுமன்ற அரசியல் முறைமைபோன்றவற்றைக் கவனத்திற் கொண்டு பார்த்தால் மலையத் தரப்பின் வளர்ச்சியும் முன்னேற்றமும் பெரியது. ஆனால்,வடக்குக் கிழக்கு நமது பாரம்பரியப் பிரதேசம், தமிழர்களே இலங்கையின் மூத்த குடிகள், ஆதிக்குடிகள், ஆட்சிச்சிறப்புகள் ஆயிரத்தைக் கொண்டோர் என்றெல்லாம் பெருமை பேசிக் கொண்டிருக்கிற வடக்குக் கிழக்கு மக்களும்அவர்களுடைய தலைமைகளும் இன்று உங்களிடம் (மலையக சமூகத்தினரிடத்திலே) இரந்து வாழும் நிலையில்தான்உள்ளனர். இதற்குள் உலக மகா அரசியல் விளக்கங்கள் வேறு” என்று.

எழுந்து என்னுடைய கைகளை அவர் பற்றிப் பிடித்து கட்டி அணைத்தார். அப்படியே சில கணங்கள் அமைதியாக  – ஆழமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தார்.

வருக்கு மேலும் சொன்னேன், “உங்களை (அமைச்சர்களை) இப்பொழுது (அமைச்சர்களாக பதவியில் இருக்கும்வரையில்) அவர்கள் அங்கே அழைத்து மதிக்கிறார்கள். இங்கே கொழும்புக்கு வரும்போதும்கூட உங்களைக் கனம்பண்ணுகிறார்கள். ஆனால், இதே மதிப்பை மலைய மக்களுக்கோ அங்கேவடக்குக் கிழக்கில் உள்ள இந்தியவம்சாவழியினருக்கோ இவர்கள் கொடுப்பதில்லை. இதுதான் அவர்களுடைய தந்திரோபாயம். தாங்கள்அரசாங்கத்தோடு சேரவில்லை. சலுகை அரசியலுக்கு விலைபோகவில்லை. ஆகவே சுத்தவாளிகள் என்று காட்டிக்கொள்வது. அதேவேளை தங்களுடைய தேவைகளுக்காக உங்களைப் பிடித்துத் தந்திரமாகக் காரியத்தைநிறைவேற்றிக் கொள்வது. மறுபக்கத்தில் மலையக மக்கள், இந்திய வம்சாவழியினர் என்ற வேறுபாடுகளையும் நுட்பமாகப் பேணிக் கொள்வது…” என்று.

அவர் பேச்சற்றுச் சில கணங்கள் அப்படியே உறைந்து போயிருந்தார்.

அவருக்கு மேலும் சொன்னேன், “உங்களிடம் பெறுகின்ற நிதியையும் ஆ61தரவையும் அங்குள்ள மலையக மக்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்குக் கொடுப்பதுமில்லை. இதைப்பற்றி நீங்களும் கண்காணிப்புச் செய்வதில்லை. தமிழ்த்தரப்பின் மேலாதிக்க அரசியல் நலன்களுக்கு நீங்கள் அறிந்தோ அறியாமலோ சேவகம் செய்கிறீர்கள். இதில் அமைச்சர் தொண்டமான் தொடக்கம் இன்றைய மலையகத் தலைவர்கள் வரையில் அனைவருக்கும் பொறுப்புண்டு. இந்தத் தவறுகளை இனிமேலும் செய்யாதிருக்க முயற்சியுங்கள்” என.

“அங்க (வடக்குக் கிழக்கில் இருந்து சரியான சக்திகள் நேரடியாக எங்களிடம் வந்து அணுகினால் அவர்களின் கண்காணிப்பில் நாங்கள் வேலைகளைச் செய்ய முடியும். அப்படி யாரும் வரவில்லை என்றால் எங்களுக்கு வேறு வழிகளில்லை. அதனாலதான் இந்தத் தவறுகள் எல்லாம் நடந்திருக்கு. இனிமே நாங்க அதைப் பாத்துக்கிறம்” என்று  சொன்னார்.

இப்பொழுது சில விடயங்கள் நமக்கும் அவருக்கும் புலப்பட்டிருக்கின்றன. ஒன்று, மலையக மக்களை இன்னும் தமிழ்த்தேசியவாதச் சக்திகள் பயன்படுத்தும் பொருட்களாகவே கையாள முற்படுகின்றன. அவர்களுடைய தலைமைகளை வைத்துத் தங்களின் நலனைப் பெற்றுக் கொண்டு, அந்த மக்களை மேலும் புறக்கணிப்பிலேயே வைத்திருக்கின்றன என்பது.

அடுத்தது, வடக்குக் கிழக்குத் தமிழ்த் தலைமைகள் தாம் அரசாங்கத்திடம் வாதிட்டும் கேட்டும் எதையும் பெறத் தயாரில்லை. இன்னொருவர் கேட்டுப் பெற்றதில் பங்கெடுக்கத் தயார் என்பது. அதாவது பந்தியில் குந்தவோ வரிசையில் நிற்கவோ தயாரில்லை. மற்றவர்கள் அப்படி நின்ற வாங்கி வருவதில் பங்கு கேட்பதற்குத் தயார். இதை இன்னொரு வகையில் சற்றுக் கீழிறக்கிச் சொல்வதானால், யாரும் யாரோடும் படுத்துப் பணம் வாங்கி வந்தால் அந்தப் பணத்தில் பங்கைப் பெறுவதற்குத் தயார். இதனுள் மறைந்திருக்கும் புனிதப்படுத்தல் உண்மையில் கேவலமானது. இவ்வளவுக்கும் மலையக மக்களை விட வடக்குக் கிழக்குத் தமிழ்ச் சமூகம் பெரியது. வளமானது. பாராளுமன்றப்பிரதிநிதித்துவமும் மலையகத் தரப்பை விடக் கூடியது.

மூன்றாவது மலையகத் தமிழ் மக்களும் அங்குள்ள அரசியல் சக்திகளில் சிலவும் ஈழப்போராட்டத்துக்கு பெரும் ஆதரவை வழங்கியுள்ளன. இதை மலையகத்திலிருந்தே அவை செய்திருக்கின்றன. அதைப்போல வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற மலையகத்தமிழர்களும் உயரிய பங்களிப்பை ஈழப்போராட்டத்திற்குச் செய்துள்ளனர். இருந்தும் அவர்களுடைய நிலையும் அரசியல் மதிப்பும் ஈழத்தமிழர்களால் இரண்டாம் தரப்பாகவே பார்க்கப்படுகிறது.

நான்காவது, மலையகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் தரப்புகள் கொழும்பு வரையில் தம்மை விரித்துள்ளன. தமிழ் முற்போக்குக் கூட்டணி இதற்கு உதாரணம். எதிர்காலத்தில் அவை வடக்குக் கிழக்கிற்கும் விரிவாக்கமடையலாம். அதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு அதிகமாகவே உள்ளன. தமிழ்த்தேசியச் சக்திகள் இதே தடுமாற்ற அரசியலை முன்னெடுத்தால் மக்களின் தேவைப்பாடுகளுக்கான அரசிலுக்கூடாக இவை உள் நுழைய முற்படலாம். சமவேளையில் பாரபட்சப்படுத்தும் மலையக மக்களை அவை அரவணைத்துக் கொள்ளும் வழியூடாக இலகுவாக உள் நுழையவும் வாய்ப்ப64ிருக்கிறது.

ஐந்தாவது, இதைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தில் சிங்களத்தரப்புகள் பலமானதொரு ஆட்சியை அமைக்க முற்படும். ஏனெனில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவற்றோடு இணைந்த அரசியலைச் செய்வது மலையகத்தமிழ் அரசியல் சக்திகளுக்குத் தவிர்க்க முடியாதிருப்பதால் இது அதற்கான வாய்ப்பைக் கொடுக்கும்.

ஆறாவது வடக்குக் கிழக்கில் – குறிப்பாக வடக்கில் – வன்னியில் மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தைக் கோரும் குரல்கள் மேலெழக்கூடிய நிலை உண்டு. அவற்றின் பேரம் பேசும் திறன் கூடப் போகிறது.

ஏழாவது, நடைமுறைத் தேவைகளைக் கவனத்திற் கொள்ளாத அரசியலினால் நீண்ட காலத்துக்குத் தாக்குப் பிடிக்க முடியாது. இதனால்தான் கூட்டமைப்பின் மேல் மட்டம் உயரத்திலே நின்று உரிமைக்கோரிக்கையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது கீழ் மட்டத்தினர் இப்படி பிச்சைப் பாத்திரமேந்தி ஒவ்வொரு இடமாக அலைகின்றனர். இந்த இரண்டக நிலை நீண்ட காலத்துக்குத் தாக்குப் பிடிக்கக் கூடியதல்ல.

இப்படிப் பல விதங்களில் பல சாதக பாதக அம்சங்கள் உள்ளன. இதையெல்லாம் புரிந்து கொண்டு வடக்குக் கிழக்கில் உள்ள ஈழ மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பது யார்?

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com