தமிழ் සිංහල English
Breaking News

கிருமிகள் நிறைந்திருக்கும் கம்ப்யூட்டர் கீ போர்டைத்.!

கிருமிகள் நிறைந்திருக்கும் கம்ப்யூட்டர் கீ போர்டைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வயிற்றுவலி, தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

நாம் எப்போதெல்லாம் கை கழுவுகிறோம்? சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும், கழிவறையை பயன்படுத்திய பிறகு, குப்பைகளை சுத்தம் செய்த பிறகு என தேர்ந்தெடுத்த சில வேலைகளை செய்யும்போது மட்டும் சுத்தமாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்து இப்படிச் செய்கிறோம். அதே நேரம் கம்ப்யூட்டரையோ செல்போனையோ பயன்படுத்திய பிறகு நாம் கைகளைக் கழுவுகிறோமா? அதற்கும் சுத்தத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம். ஆனால், கழிப்பறையைவிட 6 மடங்கு அதிகமான கிருமிகள் நாம் தினசரி பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

அழுக்குப்படிய வாய்ப்பே இல்லாத, அப்படியே அழுக்கடைந்தாலும் அடிக்கடி சுத்தப்படுத்துவதாக நாம் நினைக்கிற எலெக்ட்ரானிக் பொருட்களில்தான் கிருமிகள் அதிகமாக இருக்கின்றன. கம்ப்யூட்டர் கீ போர்டில் பாக்டீரியா இருப்பதே தெரியாமல், நாமும் அதன் மீது விரல்களை நடனமாட விடுவோம். பிறகு அதே கையுடன் செல்போனை எடுத்துப் பேசுவோம். கண்ணைக் கசக்குவோம். சில சமயம் கம்ப்யூட்டரில்தானே வேலை பார்க்கிறோம் என்று அசட்டையாக கை கழுவாமல் சாப்பிட்டும் விடுவோம். கீ போர்டில் இருந்த கிருமிகள் அப்போது நம் உடலுக்குள் புகுந்து, தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும்.

அவற்றில் கழிவறைக் கதவின் கைப்பிடியிலும் கழிவறையிலும் காணப்படக்கூடிய ஈகோலி, கோலிபார்ம்ஸ், ஸ்டெபைலோகாக்கஸ் ஆரஸ், எண்டிரோ பாக்டீரியா போன்ற கிருமிகள் இருப்பதைப் பார்த்து ஆராய்ச்சியாளர்களே அதிர்ச்சியடைந்து விட்டார்கள். இப்படிக் கிருமிகள் நிறைந்திருக்கும் கீ போர்டைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வயிற்றுவலி, தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

சுத்தத்துக்குப் பேர் போனவர்கள் என்று நாம் நினைக்கும் வெளிநாடுகளில் இந்த நிலைமை என்றால், நம் அலுவலகத்திலோ, வீடுகளிலோ பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களைப் பற்றிக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

தனி நபர்கள் சுத்தமாக இருக்கும் பழக்கத்தை பொறுத்தே கம்ப்யூட்டரில் கிருமிகள் சேர்வதற்குள்ள வாய்ப்பும் அமைகிறது. பலர் கழிப்பறையை பயன்படுத்திய பிறகு கைகளை சரியாக சுத்தம் செய்வதே இல்லை. இன்னும் சிலர் கம்ப்யூட்டரின் முன்னால் அமர்ந்துகொண்டு கைக்குட்டையால் முகத்தை மூடாமல் இருமுவதும் தும்முவதும் சகஜம். இதுபோன்ற பழக்கங்களாலும் கீ போர்டில் கிருமிகள் பல்கிப் பெருகும். அலுவலகத்தில் யாருக்காவது சளியோ, இரப்பை குடல் அழற்சியோ இருந்தால், அவர் பயன்படுத்திய கீ போர்டையோ மவுஸையோ நாமும் பயன்படுத்தினால் போதும். அவருடைய நோய்கள் நமக்கும் மிக எளிதாக தொற்றிவிடும் என்கின்றன ஆய்வுகள்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com