தமிழ் සිංහල English
Breaking News

ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடும் பதற்றம்.!

பிரிட்டனில் முன்னாள் ரஷிய உளவு அதிகாரி மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக, ரஷியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் செய்தித் தொடர்பாளர் ஹீதர் நாவெர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரிட்டன் குடியுரிமை பெற்ற செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா ஸ்கிரிபால் மீது கடந்த மார்ச் மாதம் நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக, ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன.

சர்வதேசச் சட்டங்களுக்குப் புறம்பாக, தனது சொந்த மக்களுக்கு எதிராகவே ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தி வருவதாக அமெரிக்க அரசு இந்த மாதம் 6-ஆம் தேதி முடிவுக்கு வந்தது.அமெரிக்க நாடாளுமன்றம் கடந்த 1991-ஆம் ஆண்டில் இயற்றிய ரசயான மற்றும் உயிரி ஆயுதப் போர் ஒழிப்புச் சட்டம், ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

அந்தச் சட்டத்தின் அடிப்படையிலேயே ரஷியாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்தப் பொருளாதாரத் தடைகள், நாடாளுமன்ற அறிவிக்கைக் காலமான 15 நாள்களுக்குப் பிறகு, வரும் 22-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 1990-ஆம் ஆண்டுகளில், ரஷிய ராணுவ உளவு அமைப்பில் பணியாற்றி வந்த செர்கெய் ஸ்க்ரிபால் (66), பிரிட்டனின் உளவுப் பிரிவான எம்ஐ6-இலும் ரகசியமாக இணைந்து பிரிட்டனுக்கு ராணுவ ரகசியங்களை அளித்து வந்தார்.

அவரது நடவடிக்கையைக் கண்டுபிடித்த ரஷிய அதிகாரிகள், 2004-ஆம் ஆண்டு செர்கெய் ஸ்கிரிபாலை கைது செய்து சிறையிலடைத்தனர். எனினும், உளவுக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட செர்கெய் ஸ்கிரிபால், பிரிட்டனில் வசித்து வருகிறார்.

இந்தச் சூழலில், செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது 33 வயது மகள் யூலியா மீது கடந்த மார்ச் மாதம் 4-ஆம் தேதி நச்சுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.அதையடுத்து, கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இருவரும் சாவின் விளம்புக்கு சென்று திரும்பினர்.

இந்த நச்சுத் தாக்குதலுக்கு ரஷியாதான் காரணம் என்று பிரிட்டன் குற்றம் சாட்டி வருகிறது. எனினும் ரஷியா அந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.இந்த விவகாரத்தில் பிரிட்டனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் ஆகியவை தங்கள் நாடுகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட ரஷியத் தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டன. ரஷியாவும் அதற்குப் பதிலடியாக அந்த நாடுகளின் தூதர்களை வெளியேற்றது.

இதனால், ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடும் பதற்றம் நிலவி வந்தது.இந்தச் சூழலில், நச்சுத் தாக்குதல் விவகாரம் தொடர்பாக ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடைகளை ஏற்க முடியாது’

 பிரிட்டனில் நடைபெற்ற நச்சுத் தாக்குதல் விவகாரத்தோடு தொடர்புபடுத்தி, அமெரிக்கா தங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதை ஏற்க முடியாது என்று ரஷியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.இதுகுறித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறியதாவது:

ஏற்கெனவே, எங்கள் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் சட்டத்துக்குப் புறம்பானவை என்பது எங்கள் நிலைப்பாடு ஆகும்.

இந்த நிலையில், பிரிட்டன் நச்சுத் தாக்குதலை எங்களுடன் தொடர்புபடுத்தி, அதற்காக எங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்கா கூறுவது, முற்றிலும் ஏற்புடையது அல்ல என்றார் அவர்.

முடிவல்ல.. ஆரம்பம்…!

1991-ஆம் ஆண்டின் ரசயான மற்றும் உயிரி ஆயுதப் போர் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் ரஷியாவுக்கு எதிராக அமெரிக்க அரசு அறிவித்துள்ள பொருளாதாரத் தடைகள், இரு நாடுகள் இடையிலான தூதரக உறவை முடக்குவதற்கான ஆரம்பமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிகின்றனர்.

இதுகுறித்து அரசியல் நிபுணர்களை மேற்கோள் காட்டி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் தெரிவித்ததாவது:நச்சுத் தாக்குதல் தொடர்பான பொருளாதாரத் தடை தடை விதிக்கப்பட்ட 90 நாள்களுக்குள் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று ரஷியா வாக்குறுதி அளிக்க வேண்டும். மேலும், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என்பது குறித்து சர்வதேச நிபுணர்கள் ஆய்வுகள் மேற்கொள்ளவும் அந்த நாடு அனுமதி அளிக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்படும்.

மேலும், ரஷிய விமானங்கள் அமெரிக்காவில் தரையிறங்குவதற்கான அனுமதியும் மறுக்கப்படும்.
இதன் காரணமாக, இருதரப்பு தூதரக உறவுகளும் முடங்கிவிடும் என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com