தமிழ் සිංහල English
Breaking News

அஷ்ரஃபின் போராளிகளை மலினப்படுத்திய மாநாடு!

ஜெஸ்மி எம்.மூஸா)
கிழக்கு மாகாண மக்களை மலினப்படுத்தியவருக்கு கிழக்கு மாகாண மக்களின் முன்னிலையில் மீண்டும் தேசிய அமைப்பாளர் பதவி வழங்கியள்ளமை முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் மர்ஹூம் அஷ்ரஃபின் அடிநாதத்தினை அடியோடு அறுத்தெறிந்த செயலாகும்

இவ்வாறு கல்முனை மாநகர சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் அரச தொழில்முயற்சியாண்மை மற்றும் கண்டி நகர அபிவிருத்திப் பிரதியமைச்சின் இணைப்புச் செயலாளருமான ஏ.ஆர்.அமீர் தெரிவித்துள்ளார்

கண்டியில் நடந்த முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு குறித்து ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கும் போது

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் கட்சியை ஆரம்பிப்பதற்கும் வளர்த்தெடுப்பதற்கும் உயிர்த்தியாகங்களைச் செய்த மண் கிழக்கு மாகாணம். அம்மக்கள் காலில் மண்டியிடுவதற்கே லாயக்கானவர் எனக் கூறிய பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உபதலைவருமான சபீக் றஜாப்தீனுக்கு மீண்டும் தேசிய அமைப்பாளர் பதவி வழங்கியுள்ளது முஸ்லிம் காங்கிரஸின் தேசியமாநாடு. கட்சிப் போராளிகளுக்கு கதை கூறுவதும் காட்டிக் கொடுத்தவர்களைக் கௌரவப்படுத்துவதுமாக இப் பேராளர் மாநாடு அமைந்தமை ஆச்சரியமான விடயமாகும்

தற்காலத் தலைமையை சமூகத்தில் வித்தியாசமான கோணத்தில் கற்பித்தவர்களாக அடையாளப்படுத்தப்பட்ட பெரும்பகுதியினர் மீண்டும் கட்சிக்குள் வந்து கணப்பொழுதுக்குள் கட்சியினுடைய உச்சபீடத்தைத் தொட்டுள்ளனர். இவர்களைப் பற்றி போராளிகள் மத்தியில் நல்லபிபராயங்கள் இல்லாதபோதும் அவர்களில் பலர் நியமிக்கப்பட்டுள்ளமை போராளிகள் மத்தியில் விசனங்களைத் தோற்றுவித்துள்ளது

கிழக்கு மாகாண மக்களை உதாசீனம் செய்து பேசியமைக்காக தேசிய அமைப்பாளர் பதவியையும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் உபதலைமைத்துவத்தையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பறிமுதல் செய்த போது கட்சிப்போராளிகள் அரசியல் ரீதியில் மனம்மகிழ்ந்தனர். ஆயினும் பேராளர் மாநாட்டில் மக்களின் சலசலப்புக்களைக் கருத்திற்கொள்ளாமல் மீண்டும் அதே பதவியினை வழங்கியமை குறித்து மக்கள் சந்தேகிக்கின்றனர்.

உள்ளூர் மக்களின் அன்றாட கட்சி நடவடிக்கைகளில் நூறு வீத செயற்பாடுகளை உடைய கட்சியின் அடிப்படைப் போராளிகளான எம்மால் இந்நியமனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

வட கிழக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சுப்படை பட்டாளங்களும் மறுமுனையில் ஆயுதக்குழுக்களின் துப்பாக்கி முனைகளும் குரல் வளையில் கைவைத்த போது முஸ்லிம்களின் விடுதலைக்குரலாக அவர்களின் இருப்பை அகிம்சை அரசியலால் சாதிக்கவே முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்தை அஷ்ரஃ உருவாக்கினார்.. அவ்வாறான வழியில் வந்த அஷ்ரஃபின் போராளிகளை அவமானப்படுத்துவதையும் அஷ்ரஃபின் கொள்கையை ஏற்றுக் கொண்ட பேராளிகளை மலினப்படுத்துவதையும் இவ்வாறான தேசிய அமைப்பாளர் பதவி போன்ற நியமனங்கள் சுட்டிக்காட்டுகின்றன

குறித்த விடயம் தொடர்பில் கட்சித்தலைமை என்ன பதில் சொல்லப்போகிறது? ஏன்பதே போராளிகள் முன்னுள்ள வினாவாகும். இப்பதவி நியமனத்தை மீள் பரிசீலனை செய்வதோடு மக்கள் எதிர்பார்த்து நிற்கின்ற கேள்விக்குரிய பதவியை பொருத்தமான ஒருவருக்கு வழங்கக் கட்சித்தலைமை முன்வர வேண்டும். அத்தோடு கட்சியின் முன்னாள் தவிசாளர் புத்தளம் நகர பிதா பாயிஸ் கட்சியினுடை கொள்கைகளையும் கட்சியையும் காலை வாரி விட்டு வெளியேறியவர். அவரைப் போன்றவர்களையும் அவசரமாக கட்சிக்குள் உள்வாங்கி அதி உச்ச பீடத்தைத் தொட வைத்திருப்பது சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன

கட்சித் தலைமை தேசிய அமைப்பாளரின் நியமனத்தை பறிமுதல் செய்ய முன்னர் எடுத்த முடிவு சரியாகஇ அது நியாயமானதாக இருந்தால் மீண்டும் பேராளர் மாநாட்டில் அதே பதவிக்கு விமர்சனத்துக்குரிய நபரே மொழியப்பட்டதன் மர்மம்தான் என்ன?

இவைகள் சம்பந்தமாக மக்கள் சார்பில் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினால் அவர்களின் நாளைய அரசியல் கேள்விக்குரியதாக மாறிவிடும் அபாயம் ஏற்படலாம்  என்பதற்காகத் தயங்கி; அஷ்ரஃபின் வழிவந்த கட்சியின் கொள்கைகளை மறுத்துப் பேசுபவர்களை வாழவைப்பதை நாம் ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என்றார்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com